தமிழ்நாடு அரசின் 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை
அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் கல்வியை மெருகேற்ற தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாதந்தோறும் மாணவர்களுக்கு ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ₹2500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நான் முதல்வன் திட்டத்திற்கு ₹200 கோடியும், தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டத்திற்கு ₹360 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
மெட்ரோ பணிகளுக்கு ரூ.12,000 கோடி:
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்காக ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரையிலும், பரந்தூருக்கும் மெட்ரோ சேவையை நீட்டிக்க ரூ.4,577 கோடி மதிப்பில் விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும். மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் தராததால் ரூ. 9 ஆயிரம் கோடி வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது.
மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
8 லட்சம் கான்கிரீட் வீடுகள்
குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை எட்டும் வகையில் வரும் 2030-ம் ஆண்டிற்குள் தமிழகத்தின் ஊரக பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
முதற்கட்டமாக 2024-25-ம் நிதியாண்டில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் ரூ.3.50 லட்சம் செலவில் உருவாக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாத பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவர்தம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இந்த புதிய திட்டம் “கலைஞரின் கனவு இல்லம்” என்ற பெயரில் வரும் நிதியாண்டில் 3,500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணி
அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். ஜூன் மாதத்திற்குள் 10,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும். இதுவரை 60,567 இளைஞர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
10 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்கள்:
பெண்களின் உயர்கல்விக்கு உதவும் புதுமை பெண் திட்டத்தை வரும் நிதியாண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். சென்னை, கோவை, மதுரையில் ரூ.26 கோடியில் 3 புதிய தோழி விடுதிகள் கட்டப்படும்.
மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ரூ. ரூ.13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் புதிதாக 10,000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலமைச்சரின் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் இலவச பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 40 % இருந்து 65% உயர்ந்துள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.3,050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மலைப் பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில், நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை போன்ற பகுதிகளுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
வடசென்னைக்கு ரூ.1,000 கோடி
சென்னை மாநகரில் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்ய வடசென்னை வளர்ச்சித் திட்டம் எனும் புதிய முயற்சியை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. புதிய குடியிருப்புகள், புதிய உயர்தர சிகிச்சைப் பிரிவு, புதிய கட்டிடங்கள், புதிய தளங்கள், தொழிற்பயிற்சி நிலையம், ஏரிகளை சீரமைத்தல், பள்ளிகளைப் புதுப்பித்தல், மேம்படுத்துதல் மற்றும் கணினிமயமாக்கல் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் என மொத்தம் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
வடசென்னைப் பகுதிகளில் கழிவுநீர் மற்றும் குடிநீர் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு கழிவுநீரைத் திறம்பட அகற்றுவதற்கும், நீர்நிலை மாசுபாட்டைத் தவிர்ப்பதற்கும் 946 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டம் நிறைவேற்றப்படும்.
கோவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா
கோயம்புத்தூரில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1100 கோடியில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். அனைத்து சிப்காட் பகுதிகளிலும் பணிபுரியும் பெண்களுக்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். விருதுநகர், சேலத்தில் ரூ. 2,483 ஜவுளி பூங்கா அமைக்கப்படும். சென்னை, கோவையில் ரூ.26 கோடியில் தோழி அரசு மகளிர் விடுதிகள் அமைக்கப்படும். 2024-25 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.