விளையாட்டு ரசிகர்களுக்கு இன்றைய காலை அத்தனை இனிமையானதாக இல்லை. காலையில் எழுந்து செய்தியைப் பார்த்தவர்களுக்கு கால்பந்து ஜாம்பவானான பீலேவின் மரணம் அதிர்ச்சி செய்தியாக இருந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன், இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார் என்ற அடுத்த அதிர்ச்சியான செய்தி விளையாட்டு ரசிகர்களை தாக்கியது.
என்ன ஆனது ரிஷப் பந்துக்கு?
இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணியில் தான் இல்லாததால் சொந்த ஊரான ரூர்கியில் சிறிது நாட்கள் ஓய்வெடுப்பதற்காக டெல்லியில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்றிருக்கிறார் ரிஷப் பந்த்.
மங்க்லார் என்ற இடத்தில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென சாலையில் அலைபாய்ந்த கார், காலை 5.30 மணிக்கு திடீரென சாலை தடுப்புகளில் பயங்கரமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி எரியத் தொடங்க, சுதாரித்துக்கொண்ட ரிஷப் பந்த், அவர் காரில் இருந்து குதித்த மறு நிமிடமே தீ மேலும் பரவத் தொடங்கியது. சில நிமிடங்களில் கார் முற்றிலுமாக எரிந்து சாம்பலனாது.
காரில் இருந்து பந்த் இறங்க தாமதித்திருந்தால், அவர் தீயில் கருகியிருக்க கூடும் என்று இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். காயங்களுடன் காரில் இருந்து குதித்த பந்த்தை அருகில் இருந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பிறகு, டேராடூனில் உள்ள மேக்ஸ் என்ற மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றாலும், நெற்றி, முட்டி உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான சுவப்ன கிஷோர் சிங், தூக்கக் கலக்கத்தில் வாகனத்தை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக ரிஷப் பந்த் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
விபத்து பற்றிய தகவல் அறிந்த உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி, பந்த்தின் உடல்நிலையைப் பற்றி விசாரித்ததுடன், அவரது சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
ரிஷப் பந்த்துக்கு ஏற்பட்ட விபத்து கிரிக்கெட் உலகை உலுக்கியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பந்த் விரைவில் மீண்டுவர தாங்கள் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
ரிஷப் பந்தை பொறுத்தவரை இந்த ஆண்டு அத்தனை ராசியானதாக இல்லை. டெஸ்ட் போட்டிகளில் ஓரளவுக்கு ஆடினாலும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரால் அதிக அளவுக்கு ரன்களைக் குவிக்க முடியவில்லை. இதனால் டி20 உலகக் கோப்பையில்கூட அவரைவிட தினேஷ் கார்த்திக்குக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
தினேஷ் கார்த்திக்கைப் போலவே விக்கட் கீப்பிங்கில் ரிஷப் பந்தின் போட்டியாளர்களாக கருதப்பட்ட இஷான் கிஷனும், சஞ்சு சாம்சனும் பேட்டிங்கில் வெளுத்து வாங்க, பந்த்துக்கு பதில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. அதிலும் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் இரட்டை சதத்தை விளாச, இனி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு ஏற்ற வீரர் இஷான் கிஷன்தான் என்று ரசிகர்கள் தீர்மானமே செய்துவிட்டார்கள்.
ரசிகர்களின் முடிவையே தேர்வாளர்களும் எடுக்க, இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து ரிஷப் பந்த் நீக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் விபத்திலும் சிக்கியுள்ளார். இப்படி இந்த ஆண்டில் அடிமேல் அடிபட்ட ரிஷப் பந்த், அடுத்த ஆண்டில் புத்துயிர் பெறுவார் என்று எதிர்பார்ப்போம்.