குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. திரௌபதி முர்முவும், யஷ்வந்த் சின்ஹாவும் குடியரசுத் தலைவர் தேர்தல் போட்டியில் இருக்கிறார்கள்.
தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர் இந்தியாவின் பிரம்மாண்டமான மாளிகைகளில் ஒன்றான ஜனாதிபதி இல்லத்தில் குடியேறுவார். இப்போது வாழ்ந்து வரும் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எங்கு செல்வார்?
டெல்லி வட்டாரங்கள் தரும் செய்திகளின் அடிப்படையில், ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள 12-ம் எண் வீட்டில் ராம்நாத் கோவிந்த் குடியேற உள்ளார். சில மாதங்களுக்கு முன்புவரை முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் வீடாக இது இருந்துள்ளது. இந்த வீட்டில் இருந்து 2 வீடுகள் தள்ளித்தான் (10-ம் எண் வீடு) காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் வீடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு பல சலுகைகளும் ராம்நாத் கோவிந்துக்கு வழங்கப்பட உள்ளது.
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு ராம்நாத் கோவிந்துக்கு மாதந்தோறும் ரூ.1.5 லட்சம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதியை கவனித்துக்கொள்வதற்காக அவரது மனைவிக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.
குறைந்தது 8 அறைகளாவது உள்ள வீட்டில் வாடகையே இல்லாமல் தன் வாழ்நாள் முழுவதும் அவர் தங்கிக்கொள்ளலாம்.
2 லேண்ட்லைன் இணைப்புகள் மற்றும் ஒரு செல்பேசி இணைப்பு அவருக்கு இலவசமாக வழங்கப்படும்.
இலவச தண்ணீர் மற்றும் மின் இணைப்பு வழங்கப்படும்.
டெல்லி காவல்துறையின் பாதுகாப்பு 24 மணிநேரமும் வழங்கப்படும்.
2 உதவியாளர்களை அவர் பணிக்கு வைத்துக்கொள்ளலாம்.
அரசு செலவில் கார், டிரைவர் உண்டு.
முன்னாள் குடியரசுத் தலைவரின் தனிப்பட்ட உதவியாளர்களின் இதர செலவுகளுக்காக வருடந்தோறும் ரூ.60 ஆயிரம் வழங்கப்படும்.
ரயில் மற்றும் விமானங்களில் அவருக்கும், அவருடன் பயணிக்கும் ஒரு உதவியாளருக்கும் முதல்தர வகுப்பில் இலவசமாக டிக்கெட் வழங்கப்படும்.
இலவச மருத்துவ வசதி உண்டு.
இந்தியாவின் முதல் குடிமகனாக கடந்த 5 ஆண்டுகள் பணியாற்றியதற்காக ராம்நாத் கோவிந்துக்கு மத்திய அரசு கொடுக்க உள்ள சலுகைகள்தான் இவை.