“திருமாவளவன் மேல முதல்வர் ரொம்பவே கோபமா இருக்காராம்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா
“நெருக்கமான கூட்டணி தலைவராச்சே… இப்ப என்ன ஆச்சு?”
“ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம் பத்தி கருத்து சொன்ன திருமாவளவன், ‘இப்போது கைது செய்யப்பட்டு இருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல’ன்னு சொல்லி இருக்கார். அது முதல்வரை கடுப்பேத்தி இருக்கு. அதோட ஆம்ஸ்ட்ராங்குக்கு அஞ்சலி செலுத்த மாயாவதி வந்தப்ப, அங்க திருமாவளவன் இருந்ததையும் அவர் ரசிக்கல. சட்டமன்ற தேர்தல்ல அதிமுக – சீமான் – விஜய் கூட்டணி அமைச்சா, திருமாவளவன் அந்த கூட்டணிக்கு போக வாய்ப்பு இருக்குன்னு முதல்வர் சந்தேகப்படறார். அதனால அவர்கிட்ட இருந்து இப்பவே கொஞ்சம் விலகி இருக்கச் சொல்லி திமுக முக்கிய தலைவர்களுக்கு அவர் உத்தரவு போட்டிருக்காராம்.”
“ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்துலதான் அடக்கம் செய்யணும்னு அவரோட ஆதரவாளர்கள் தீவிரமா இருந்தாங்களே.. பிறகு எப்படி பொத்தூர்ல அடக்கம் செய்ய சம்மதிச்சாங்க?”
“இதுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதனும் ஒரு காரணம்னு சொல்றாங்க. பா.ரங்கநாதனுக்கு பெரம்பூர் பகுதி மக்கள்கிட்டயும், அங்க இருக்கிற பிரமுகர்கள்கிட்டயும் நல்ல செல்வாக்கு இருக்கு. இதை தெரிஞ்சுகிட்ட முதல்வர் அவர்கிட்ட, ‘நீங்க இந்த பிரச்சினையை சுமுகமா பேசி முடிங்க’ன்னு சொல்லி இருக்கார். இதைத் தொடர்ந்து அவர் ஆம்ஸ்ட்ராங்கோட தொடர்புடையவர்கள்கிட்ட பேசி சம்மதிக்க வச்சிருக்கார். இந்த விஷயத்தால இப்ப முதல்வரோட குட் புக்ல ரங்கநாதன் இடம் பிடிச்சிருக்கார்.”
“பாமக நிறுவனர் ராமதாஸ், அண்ணாமலை மேல கோபமா இருக்கறதா கேள்விப்பட்டேனே… என்ன விஷயம்?”
“விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடக்கற நேரத்துல, எடப்பாடி பழனிச்சாமியை நம்பிக்கை துரோகின்னு அண்ணாமலை விமர்சனம் செஞ்சிருக்கார். பாமக ஜெயிக்கறதுக்கு அதிமுக தயவு தேவைன்னு பாமக நினைக்கற நேரத்துல அண்ணாமலை இப்படி பேசியிருக்கார். இதனால விக்கிரவாண்டி தொகுதியில பாமகவுக்கு அதிமுக ஓட்டு கிடைக்கிறது சந்தேகமாயிடுச்சு. அதுதான் ராமதாஸோட கோபத்துக்கு காரணம். ‘அதிமுகவினர் நமக்கு சாதகமாக ஓட்டு போடலாம்னு இருந்திருந்தாகூட அண்ணாமலை அதை கெடுத்துடுவார் போலிருக்கே. இப்போதைக்கு நம்ம எதிரி திமுகதான்னுதுகூட அண்ணாமலைக்கு தெரியலையா?’ன்னு தன் கட்சித் தலைவர்கள்கிட்ட அவர் கேட்டிருக்கார் ராமதாஸ்.”
“பாஜக தலைவர்கள்ல இப்ப அண்ணாமலை மட்டும்தான் அதிமுகவை தாக்கிப் பேசறார் போல இருக்கே?”
“ஆமாம். அதுக்கு காரணம் பாஜக தலைமைதான். எந்த காரணத்தைக் கொண்டும் அதிமுகவை விமர்சிக்க வேண்டாம்னு தமிழக பாஜக தலைவர்களுக்கு தேசிய தலைமை உத்தரவிட்டு இருக்கு. ஆனா அதையும் மீறி அண்ணாமலை எடப்பாடியை விமர்சிக்கறதை பாஜக தலைமை ரசிக்கல. அதே நேரத்துல எடப்பாடியும் பாஜகவை விமர்சனம் செய்யறதில்லை. அண்ணாமலையை மட்டும்தான் விமர்சனம் செய்யறார். இதையும் நீங்க கவனிக்கணும். இதையெல்லாம் வச்சு பார்த்தா எடப்பாடிக்கும் பாஜக தலைமைக்கும் இடையில ரகசிய பேச்சு நடக்குதோன்னு சந்தேகமா இருக்கு.”
“நிர்மலா சீதாராமனும் தமிழக அரசியல் விவகாரங்கள்ல தலையிடறாராமே?”
“நாடாளுமன்றத்தில் திமுகவுக்கு பதில் சொல்லும் பொறுப்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டிருக்கு. அதனால தமிழ்நாட்டில் நடக்கும் எல்லா அரசியல் நிகழ்வுகளையும் தனக்கு அப்டேட் பண்ண்ணும்னு தமிழக பாஜக தலைவர்களுக்கு சொல்லி இருக்காராம். தமிழக அரசியல் தலைவர்கள் விடும் பத்திரிக்கை அறிக்கைகளையும் தனக்கு அனுப்பணும்னு சொல்லி இருக்காராம். ஆனால் எல்லா தலைவர்கள்கிட்டயும் பேசின நிர்மலா சீதாராமன், அண்ணாமலை கிட்ட மட்டும் பேசலையாம்.”
“விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பத்தி ஏதும் நியூஸ் இல்லையா?”
“நீ என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ தெரியாது. குறைஞ்சது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலாவது திமுக ஜெயிச்சாகணும்னு உதயநிதிக்கு முதல்வர் டார்கெட் கொடுத்திருக்கார். அதனால உதயநிதியும் அங்க பம்பரமா சுத்தி பிரச்சாரம் செஞ்சுட்டு இருக்கார். சொன்னபடி ஜெயிச்சுக் கொடுத்தா, இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும்னு சொல்றாங்க. கூடவே அமைச்சரவையிலயும் சில மாற்றங்கள் ஏற்படலாம்.”
“அமைச்சரவையில் மாற்றம் வரும்னு நீயும் சொல்லிட்டுதான் இருக்கே. ஆனா ஏதும் நடக்க மாட்டேங்குதே?”
“நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அமைச்ச்சரவையை மாத்தறதா இருந்தாங்க. ஆனா அதுக்குள்ள கள்ளக்குறிச்சி சம்பவம், விக்கிரவாண்டி இடைத் தேர்தல்னு வந்துடுச்சு. அதனால மாத்த முடியல. இப்ப முதல்வர் அமெரிக்காவுக்கு போறதுக்குள்ள மாத்திடுவார்னு சொல்றாங்க.”
“இப்பவாவது நீ சொல்றபடி மாறுமா?”
“மாறலைன்னா என்னை மாத்திடுங்க” என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு கிளம்பினாள் ரகசியா.