“ஜாபர் சாதிக் விவகாரத்தை அண்ணாமலையை நோக்கி திருப்ப திமுக திட்டமிட்டு இருக்காம்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“ஜாபர் சாதிக் விஷயத்துல அண்ணாமலையை எப்படி கோர்த்துவிட முடியும்? ரெண்டு பேருக்கும் என்ன சம்பந்தம்?”
“சில மாதங்களுக்கு முன்னால பாரதிய ஜனதா கட்சியோட வழக்கறிஞர் அணி மாநாட்டை பால் கனகராஜ் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்தியிருக்கார். அந்த மாநாட்டில் அண்ணாமலையும் கலந்துக்கிட்டார். அந்த மாநாட்டுக்கான முழு செலவையும் செஞ்சது ஜாபர் சாதிக்குனு சொல்றாங்க. அது பத்தின எல்லா விவரங்களையும் இப்ப திமுக வேகமா சேகரிச்சுட்டு வருது.”
”இந்த விஷயத்துல திமுக பேரை பாஜக ஆட்கள் டோட்டலா டேமேஜ் பண்ணிக்கிட்டு இருக்காங்களே?”
“ஆமாம். கட்சிக்காரங்க மட்டுமில்லாம. அதுக்கு மத்திய அதிகாரிகளும் உடன் போறாங்களேன்ற வருத்தம் திமுகவுல இருக்கு. ஜாபர் சாதிக் விவகாரம் தொடர்பா போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி தந்த பேட்டியைப் பார்த்த திமுக எம்பியும் மூத்த வழக்கறிஞருமான வில்சன், ‘இதுக்கு மேலயும் நாம பதில் சொல்லாட்டி நம்ம மேல தேவையில்லாத சந்தேகங்கள் வரும். அதனால நாம உடனடியா பதில் சொல்லி ஆகணும்’னு சொல்லி இருக்கார். அதைத் தொடர்ந்துதான் இந்த விவகாரத்துல சட்ட அமைச்சர் ரகுபதியும் வில்சனும் பேட்டி கொடுத்திருக்காங்க. ‘ஜாபர் சாதிக்குக்கு ஏற்கனவே பாஜகவோட தொடர்பு இருந்தது. அவருக்கும் பாரதிய ஜனதா துணைத் தலைவர் பால் கனகராஜுக்கு நெருக்கம்னு அந்த பேட்டியில ரகுபதி சொல்லி இருக்கார். இது வரைக்கும் பாஜக தரப்புல அந்த பேட்டிக்கு பதில் வரலை.”
“அவங்கதான் தேர்தல் கூட்டணி அமைக்கறதுல பிஸியா இருக்காங்களே?”
“ஆமா இதுவரைக்கும் அதிமுகவோட பேசிட்டு இருந்த பாமகவையும், தேமுதிகவையும் தங்கள் கூட்டணிக்குள்ள கொண்டு வர்ற முயற்சியில அவங்க கிட்டத்தட்ட ஜெயிச்சதா சொல்லலாம். கூட்டணி விஷயத்தை பேசி முடிக்கற வேலையை மத்திய அமைச்சர் முருகன்கிட்ட டெல்லி பாஜக தலைமை முழுசா ஒப்படைச்சிருக்கு. இந்த பொறுப்பை அண்ணாமலைகிட்ட கொடுத்தா, அவர் ஏதாவது துடுக்குத்தனமா பேசி ஆட்டத்தைக் கலைச்சிடுவார்னு கொஞ்சம் ஒதுக்கியே வச்சிருக்காங்க.”
“எல்லா கட்சிகளும் அதிமுகவை விட்டு போகுதே.. எடப்பாடி என்ன முடிவெடுத்து இருக்கார்?”
“பாட்டாளி மக்கள் கட்சியும், தேமுதிகவும் பாரதிய ஜனதா கூட்டணியில் சேரப் போறதா தகவல் வந்ததும், ‘இனியும் நாம காத்திருக்க வேண்டாம். வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம்னு அடுத்தகட்ட வேலைகளை ஆரம்பிப்போம்’னு மூத்த நிர்வாகிகள்கிட்ட சொல்லி இருக்காரு எடப்பாடி. ஆனா எந்த கட்சியும் கூட்டணிக்கு இல்லைன்னா நாம மூணாவது இடத்துக்கு போயிடுவோமே’ன்னு மூத்த தலைவர்கள்தான் கொஞ்சம் கலக்கத்துல இருக்காங்க.”
”இந்த விஷயத்துல ஓபிஎஸ் பரவாயில்லை. பாஜகவோட தயவுல அவர் கொஞ்சம் கெத்து காட்டுவாரு”
“அப்படின்னு நீங்கதான் நினைக்கறிங்க. ஆனா அங்க நிலைமை வேறயா இருக்கு. பாஜகவோட தாமரை சின்னத்துல நிக்கச் சொல்லி ஓபிஎஸ்சை கட்டாயப்படுத்தறாங்களாம். ஆனா அப்படி நின்னா இருக்கற கொஞ்சநஞ்சம் மரியாதையும் இல்லாம போயிடுமேன்னு ஓபிஎஸ் தயங்கறார். கூட்டணிக்கு அவர் கூட்டிட்டு போற தினகரனும் இதுக்கு சம்மதிக்கறதா இல்லை. இதெல்லாம் போதாதுன்னு ஒரு பக்கம் ஓபிஎஸ்ஸோட கூட்டணி பத்தி பேசிட்டு இருக்கும்போதே இன்னொரு பக்கம் அவர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மயிலாப்பூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜலட்சுமியை பாரதிய ஜனதால சேர்த்திருக்காங்க. இதனால டென்ஷனான அவரோட ஆதரவாளர்கள், ‘பார்த்தீங்களா அவங்க இப்பவே வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாங்க’ன்னு ஓபிஎஸ் காதைக் கடிக்கறாங்க. இதையெல்லாம் எப்படி சமாளிக்கறதுன்னு தெரியாம ஓபிஎஸ் குழம்பிட்டு இருக்காரு.”
“மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் அடின்னா, ஓபிஎஸ்சை பல பக்கங்கள்ல இருந்து அடிக்கறாங்களே…”
”இந்த தேர்தல்ல அவரைவிட மோசமா ஒருத்தர் பாதிக்கப்பட்டிருக்கார். அவர்தான் கமல்ஹாசன். நாடாளுமன்ற தேர்தல்ல ஒரு சீட்கூட வாங்காம திமுககிட்ட அவர் சரண்டர் ஆனதை தீவிர ரசிகர்களே ஏத்துக்கல. அவங்களை சமாளிக்க கமல் போராடிட்டு இருக்கார்.”
“அவர் எப்படி ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு சம்மதிச்சார்?”
“இதுக்கு உதயநிதிதான் காரணம்னு திமுகல பேசிக்கறாங்க. உதயநிதியை பொறுத்தவரை அவர் தொகுதி பங்கீட்டு குழுவில உறுப்பினராகூட இல்லை. ஆனா கூட்டணி ஒப்பந்தத்துல கமல் கையெழுத்து போடும்போது அவர்தான் கூட இருந்திருக்கார். அவர் கமல் வந்தப்ப அவரை வரவேற்று அழைச்சுட்டு போனதும் உதயநிதிதான். அப்ப கமல் கிட்ட பேசின உதயநிதி, ‘உங்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விருப்பமில்லைன்னு சொல்றீங்க. அதை நாங்க ஏத்துக்கறோம். இப்போதைக்கு உங்களுக்கு தேர்தல் அரசியல் வேண்டாம். நாங்க உங்களை ராஜ்யசபாவுக்கு அனுப்பறோம். நீங்க தேர்தல்ல போட்டி போடாததால உங்க ஷூட்டிங்குக்கு எந்த பாதிப்பும் வராது. நீங்க திரையுலகத்துல நிறைய ஸ்கோர் பன்ணலாம். அப்படியே ஃப்ரீயா இருக்கற நேரத்துல திமுக கூட்டணிக்காக பிரச்சாரமும் செய்யலாம். இதுக்கு நீங்க ஒத்துக்கணும்’னு சொல்லி கமலை சமாதானப்படுத்தி இருக்காரு. அவரும் இதுக்கு சம்மதிக்க கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமா முடிஞ்சதா அறிவாலயத்துல பேசிக்கறாங்க.”
“ஆட்டை வெட்டறதுக்கு முன்னால அதுக்கு மாலை போடற மாதிரி கமலுக்கு உதயநிதி ஐஸ் வச்சிருக்கார்னு சொல்றே?”
“தேர்தலுக்குள்ள இன்னும் எத்தனை ஆடு பலியாகப் போகுதோ” என்று சிரித்தவாறு கிளம்பினாள் ரகசியா.