“இத்தனை பிஸியிலும் பிரதமர் கூப்ட்டு 8.5 நிமிஷம் போன்ல பேசியிருக்கிறார்னா அவர் எவ்வளவு பெரிய ஆளு. அவரைப் போய் எதிர்க்கிறாங்க” என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தாள் ரகசியா.
“யாரைச் சொல்ற? பிரதமர் யாரை கூப்ட்டு பேசுனார்?”
“உங்களையும் என்னையுமா கூப்ட்டு பேசுவார். அவர் அண்ணாமலையை கூப்ட்டு பேசியிருக்கிறார்”
“அப்படியா? பேசினதா யார் சொன்னாங்க?”
“அண்ணாமலையே சொல்லியிருக்கிறார்? பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்துல அதுல பேசும்போது பிரதமர் கூப்ட்டு பேசுனதா அண்ணாமலை சொன்னாராம். அவர் அப்படி சொன்னதும் சீனியர் லீடர்ஸ்லாம் நமுட்டுச் சிரிப்பு சிரிச்சாங்களாம்”
“பிரதமர் எதுக்கு பேசுனாராம்…இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு?”
“அண்ணாமலை உடம்பு சரியில்லைனு சொன்னார்ல. அதை விசாரிக்கிறதுக்கு அழைச்சு 8 நிமிஷம் பேசினாராம். அண்ணாமலையை டெல்லிக்கு வந்து ட்ரீட்மெண்ட் எடுக்க சொன்னாராம். அண்ணாமலைதான் சென்னைல ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிறேன்னு சொல்லியிருக்கிறார்”
“இதுக்குதான் சிரிச்சிருப்பாங்க. சரி, உள்ள என்ன நடந்துச்சு? அண்ணாமலை என்ன பேசுனாராம்?”
“வழக்கமான விஷயங்கள்தாம். நான் கட்சி வளர்ச்சிக்குதான் எல்லாம் பண்றேன். என்னோட வளர்ச்சிக்கு இல்லை. குடிக்கிற தண்ணீர் கூட இல்லாத சிங்கப்பூர் வளருமானு அந்தக் காலத்துல கேட்டாங்க. ஆனா இன்னைக்கு சிங்கபூர் எப்படியிருக்கு பாருங்கனு சொல்லியிருக்கிறார். வர்ற தேர்தல்ல தனியாதான் நிப்போம். திமுக கொஞ்சம் பெண்களுக்குதான் ஆயிரம் ரூபாய் கொடுத்துருக்கு. அந்தப் பணம் கிடைக்காத பெண்கள்தாம் நம்ம டார்கெட். நம்ம ஓட்டு அவங்கதான். அவங்களை கவர்வதற்கு வழி பாருங்கனு சொல்லியிருக்கிறார்”
“கட்சியினர் ரியாக்ஷன் என்ன? அதிமுக கூட்டணி பத்தி நிர்வாகிகள் ஏதும் பேசலையா?”
“இந்த விஷயத்துல அண்ணாமலையோட எதிர்ப்பாளர்கள் அதிருப்தியா இருக்காங்க. அதிமுக கூட்டணி முறிவுக்கு காரணம்
அண்ணாமலைதான்னு குற்றம் சாட்டியிருக்காங்க. அவங்க பேசறதை அமைதியா கேட்டுட்டு இருந்தாராம் அண்ணாமலை.”
“கூட்டத்துல பாஜக துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி கலந்துக்காததுல ஏதோ உள்குத்து இருக்குன்னு சொல்றாங்களே?”
“இங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்துட்டு இருக்கும்போது நாராயணன் திருப்பதி டெல்லியில இருந்திருக்கார். அண்ணாமலை பத்தி கடுமையான விமர்சனங்களை பாஜக டெல்லி தலைவர்கள்கிட்ட சொல்லி இருக்கார்.”
“அவர் அண்ணாமலைக்கு ஆதரவாத்தானே இருந்தார்?”
“அரசியல்லதான் எதுவும் நிரந்தரம் இல்லையே. முன்ன ஆதரவாளரா இருந்தவர் இப்ப எதிர்ப்பாளரா மாறி இருக்கார். அண்ணாமலையோட சமீபத்திய போக்கு அவருக்கு பிடிக்காததுதான் இதுக்கு காரணம்னு சொல்றாங்க. அண்ணாமலைக்கு எதிரா மேலிடத் தலைவர்கள்கிட்ட வத்தி வைக்கறதோட, அவரை பதவியை விட்டு நீக்கறதா இருந்தா, தன் பெயரை தலைவர் பதவிக்கு பரிசீலிக்கணும்னும் அவர் லாபி பண்ணிட்டு இருக்காராம்?”
“ இத்தனையையும் அண்ணாமலை சமாளிக்கிறாரே…பெரிய விஷயம்தான். சரி, எடப்பாடி எப்படி இருக்கிறார்…. பாஜக கூட்டணி முறிவு அவருக்கு சந்தோஷம்தான் போல”
”ஆமா, பாஜகவுக்கு மட்டுமல்ல திமுகவுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துட்டோம்னு சந்தோஷப்பட்டிருக்கிறார்”
“திமுகவுக்கு என்ன அதிர்ச்சி?”
“பாஜககூடதான் அதிமுக இருக்கும்னு ஸ்டாலின் கணக்குப் போட்டு வச்சிருந்தாராம். ஆனா இப்ப அப்படியில்லைன்றது திமுகவுக்கு சங்கடம். தேர்தல்ல நிறைய பிரச்சினையை சந்திக்கணும்னு சொல்லியிருக்கிறார்”
“என்ன பிரச்சினை?”
“முன்னாடி கூட்டணிக் கட்சிகளுக்கு வேற வாய்ப்பில்ல. ஆனா இப்போ அப்படியில்ல. அதிமுக கூட்டணிக்கு போறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதே மாதிரி சிறுபான்மையினர் வாக்கு முன்னாடி திமுகவுக்கு மட்டும் போச்சு. இப்ப அதிமுகவுக்கும் வரும்னு எடப்பாடி கட்சிக்காரங்ககிட்ட சொல்லியிருக்கிறார்”
“திமுகவுல என்ன பேசிக்கிறாங்க”
”கூட்டணிக் கட்சிகல் விலகாதுனு நம்பிக்கையா இருக்காங்க. பாஜக கூட்டணியைவிட்டு அதிமுக வெளில வந்தாலும் எடப்பாடி இதுவரைக்கும் பாஜகவையோ மோடியையோ அண்ணாமலையையோ விமர்சனம் பண்ணல. அதனால அவரை நம்பி கூட்டணிக் கட்சிகள் போகாதுங்கிறது திமுகவோட கணக்கு. ஆனா. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் மேலதான் சந்தேகம்”
“என்ன சந்தேகம்?”
“நாடாளுமன்றத் தேர்தல்ல அரசு ஊழியர்கள் திமுகவுக்கு சாதகமா இருக்க மாட்டாங்கன்னுதான் சந்தேகப்படறார் முதல்வர். அவங்க அதிருப்தியில இருக்கறதா முதல்வருக்கு உளவுத் துறை ரிப்போர்ட் கொடுத்திருக்கறதுதான் இதுக்கு காரணம். அதோட அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், இந்த முறை திமுகவுக்கு ஓட்டு போடமாட்டோம்னு டிவிக்களுக்கு பேட்டி கொடுத்திருக்காங்க. அந்த பேட்டிகள் இப்ப சமூக வலைதளங்கள்ல வைரல் ஆகிட்டு வருது. அதெல்லாம்தான் முதல்வரை யோசிக்க வச்சிருக்கு. கூடிய சீக்கிரம் அரசு ஊழியர்களை கவர்ற மாதிரி தமிழக அரசு ஏதாவது அறிவிப்புகளை வெளியிட்டாலும் ஆச்சரியப்படறுத்துக்கு இல்லை.”
“தேர்தல் கால சலுகைகளா?”
“ஆமாம் அப்படியே தொகுதிப் பங்கீடு விஷயத்துலயும் அவரோட கவனம் திரும்பியிருக்கு. நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக தயார் நிலையில் இருந்தாலும் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கல. அதிமுக – பாரதிய ஜனதா கூட்டணி முறிவும் இதுக்கு ஒரு காரணம். இந்த கூட்டணி முறிவு ஒரு நாடகம்னுதான் முதல்வர் முதல்ல நினைச்சிருந்தார். ஆனா இப்ப பாஜக வேணாம்னு எடப்பாடி உறுதியா இருக்கறதால அதுக்கு ஏத்தபடி நம்ம கூட்டணி கணக்கு இருக்கணும்னு மூத்த தலைவர்கள்கிட்ட அவர் சொல்லி இருக்கார். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக துரைமுருகன், டி.ஆர்.பாலு தலைமையில் விரைவில் ஒரு குழுவை முதல்வர் அறிவிப்பார்னு அறிவாலயத்துல பேசிக்கறாங்க. எல்லாத்தையும் டிசம்பர் மாசத்துல முடிச்சு, இளைஞர் அணி மாநாட்டுல இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க முதல்வர் திட்டமிட்டு இருக்காராம்”
“நாடாளுமான்ற தேர்தல்ல மும்முனை போட்டி ஏற்பட்டா. அதிமுக, பாஜகன்னு ரெண்டு தரப்பும் திமுக மேல பாயுமே?”
“இதைச் சந்திக்கவும் முதல்வர் திட்டமிட்டு இருக்கார். ஐடி விங் இரண்டு பிரிவா பிரிஞ்சு, ஒரு பிரிவு எடப்பாடி தலைமையிலான அதிமுகவையும், இன்னொரு பிரிவு பாஜகவையும் சமூக வலைதளங்கள்ல எதிர்கொள்ளணும்னு உத்தரவிட்டு இருக்காராம் முதல்வர். குறிப்பா பிரதமரைப் பத்தின விமர்சனம் கடுமையா இருக்கணும்னு உத்தரவு போட்டிருக்காராம்.”
“பிரதமரும் சும்மா இல்லையே போற இடமெல்லாம் திமுகவை தாக்கிட்டு இருக்காரே?”
“தெலங்கானாவில் பேசின பிரதமர் மோடி, ‘தமிழக கோவில்களை திமுக ஆக்கிரமித்து இருக்கிறது’ன்னு பேசினதைத்தானே சொல்றீங்க? இதை முதல்வர் சீரியஸா எடுத்திருக்கார். ராமநாதபுரத்துல போட்டியிடற ஐடியால மோடி இருக்கார். அதான் போற இடத்துல எல்லாம் தமிழ்நாடு பாலிடிக்ஸை டச் பண்றார்னு நினைக்கறாரு. கோயில் விஷயத்துல மோடி சொன்னதை பொய்னு நிரூபிக்க தமிழ்நாட்டில் திமுக செய்த ஆன்மீகப் பணிகள் கோயில் கும்பாபிஷேகங்கள் போன்றவற்றை சமூக வலைதளத்தில் பெரிய அளவில் பேச வைக்கணும்னு ஐடிவிங்க்கு உத்தரவிட்டு இருக்கார் முதல்வர்.”
“அப்படின்னா ராமேஸ்வரத்துல நிஜமாவே மோடி போட்டியிடுவாரா?”
“அப்படின்னு ஒரு குரூப் நினைக்குது. ஆனா அமித் ஷாவும், ராஜ்நாத் சிங்கும் அதுக்கு எதிரா இருக்காங்க. ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியை தோற்கடிக்க எல்லா வேலைகளையும் திமுக செய்யும். அதனால அவர் ஜெயிக்கறது கஷ்டம். அப்படி அவர் தோத்துப் போனா, ஆர்.எஸ்.எஸ் சார்பா பிரதமர் வேட்பாளரா யோகி ஆதித்யநாத்தை முன்னிறுத்துவாங்க. ஏற்கெனவே 70 வயசு ஆகிடுச்சுன்னு அவங்க பலிடிக்ஸ் பண்ணிட்டு வர்றாங்கன்னு மோடிகிட்ட அவங்க சொல்லி இருக்காங்க.”
“பாமகல ஏதோ புகையுதுன்னு கேள்விப்படேனே”
“அது அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான ஈகோ க்ளேஷ். பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக தான் நியமிக்கப்பட்டாலும் இன்னும் நிர்வாகிகள் நியமனம் மற்றும் இதர விஷயங்களில் ராமதாஸோட தலையீடு அதிகமா இருக்குன்னு குடும்ப உறுப்பினர்கள்கிட்ட அன்புமணி புலம்பி இருக்கார். அவங்க அதைப்பத்தி ராமதாஸ்கிட்ட சொல்லி இருக்காங்க. அதுக்கு ஆவர், ‘எல்லாம் சரி அவர் பதவியேற்று ஒரு வருஷம் ஆகுது. இந்த காலகட்டத்துல எத்தனை உறுப்பினர்களை அவர் புதுசா சேர்த்திருக்கார்? கட்சி இப்ப அவர் தலைமையில் வலுவா இருக்கா? எத்தனை பொதுக்கூட்டங்களில் அவர் பேசியிருக்கிறார்? போராட்டம் ஆர்ப்பாட்டம்னு மத்த தலைவர்களை வம்புக்கு இழுத்ததை தவிர அவர் கட்சிக்கு என்ன செய்தார்’னு திரும்ப கேட்டிருக்கார்.”
”பாவம்..வயசான காலத்துல அவருக்கு இப்படி ஒரு கஷ்டம்”
“ஆமா…வாரிசுகளை கட்சிக்குள்ள வச்சு அரசியல் பண்றதும் கஷ்டம்தான் இது தெரியாமா வாரிசு அரசியல் எல்லோரும் ஈசியா சொல்லிடுறாங்க” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.