“விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார். தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்கான திட்டங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்” என்று உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்நாடு, இலங்கை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தமிழர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்த அறிவிப்பை மகிழ்ச்சியும் ஆச்சரியமும் கலந்து ஒரு தரப்பினர் வரவேற்கிறார்கள். இன்னொரு தரப்பினர் மறுத்து வருகிறார்கள். உண்மை என்ன? இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு இலங்கைத் தமிழ் கவிஞர் ஜெயபாலன் அளித்த பேட்டி இங்கே.
பிரபாகரன் உயிருடன் உள்ளார், இல்லை என இரண்டு தரப்புகள் உள்ளது. இதில் நீங்கள் எந்த தரப்பில் உள்ளீர்கள்?
“2009 மே 18ஆம் தேதி பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்தி வெளிவந்தது. ஆனால், அதில் பல சந்தேகங்கள் இருந்தது. அது ஆதாரபூர்வமாக தீர்க்கப்படவில்லை. எனவே, இன்றுவரைக்கும் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழ் மக்களும் அவர்களின் ஆதரவாளர்களும் பிரபாகரன் இருக்கிறார், இல்லை என்ற இரண்டு ஊகங்களுக்கு இடையில்தான் நசிந்து போயிருக்கிறார்கள். அவ்வப்போது பிரபாகரன் இருக்கிறார் என்ற செய்தி வரும். ஆனால், எவ்விதமான உறுதிப்படுத்தல்களும் இல்லாமல் இருந்தது. என்ன போல ஓரளவு விவரம் தெரிந்தவர்களுக்குக்கூட இந்த சிக்கல் இருந்தது.
விடுதலைப் புலிகள் அரசியல் துறையிலிருந்த தயா மாஸ்டரை சமீபத்தில் சந்தித்தேன். அவரிடம் இதுபற்றி கேட்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. ஆனால், ஒரு தயக்கம் வந்து தடுத்ததால் கேட்கவில்லை. இதுபோல், இறுதிப்போரின் போது அரசாங்கத்துடன் இருந்த டக்ளஸ் தேவானந்தாவை அண்மையில் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுதும் இந்த உந்துதல் ஏற்பட்டது. அவரிடமும் கேட்க முடியவில்லை. இந்த தயக்கம் காரணமாக இந்த 14 ஆண்டுகளில் இதனுடன் தொடர்புடைய முக்கியமான ஆட்கள் பலரை நான் சந்தித்திருந்தும் என்னால இதை உறுதிப்படுத்த முடியாமல் இருந்தது.
இந்நிலையில் இன்று இந்த செய்தியை பழ. நெடுமாறன் ஐயா வெளியிட்டிருக்கிறார். அவரைத் தவிர வேறு யாராவது அல்லது அன்று அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவருடன் இருந்த ஒருவர் இந்தச் செய்தியை சொல்லியிருந்தால் பொருட்படுத்தப்படாமல் போயிருக்கும். இந்திரா காந்தியை கொடுத்த எல்லா பதவிகளையும் நிராகரித்துவிட்டு ஒரு கர்மயோகி போல் வாழ்ந்தவர் பழ. நெடுமாறன். ஆரம்ப காலங்களில் இருந்து விடுதலைப் புலிகள் ஆதரவாளர். தன்னுடைய சொத்துகள் எல்லாவற்றையும் இழந்து விடுதலைப் புலிகளை வளர்த்தவர். எதையும் எதிர்பார்த்து இதை செய்தவர் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களில் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர். அவரை ஏற்பவர்களும் சரி, நிராகரிப்பவர்களும் சரி, அவர் மீது பெருமதிப்பை கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர் சொல்லும்போது உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு உள்ளது.
அதேநேரம் இது தொடர்பாக இலங்கை தரப்பு என்ன சொல்கிறது என்பதையும் நோக்க வேண்டியதிருந்தது. இதற்கு பதிலளிக்க வேண்டிய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசும்போது, பிரபாகரன் உயிருடன் இல்லை என்று உறுதியாக கூறாமல், ‘உரிய தகவலைப் பெற்று பதில் சொல்வோம்’ என்று சொல்லியிருப்பது இதில் இருந்த மர்மத்தை தொடரச் செய்கிறது.”
இது தொடர்பாக இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறுதிப்போரில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார். அவர் உடல் மரபணு சோதனை செய்யப்பட்டு உறுதிபடுத்தப்பட்டது என்று கூறியுள்ளார்களே?
இப்பொழுதுதானே சொல்கிறார்கள். இவ்வளவு காலமும் சொல்லவில்லையே. பிரபாகரன் உடல் என்று காட்டப்பட்டது அவருடைய உடல் இல்லை என்ற கருத்தைத்தான் பலரும் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் எண்ணிப் பார்க்கவேண்டும். இறுதி யுத்தத்தத்தின் போது கடைசியாக நந்திக்கடல் அலையாத்திக் காடுகளில் பிரபாகரன் போராடிக் கொண்டிருந்ததாக எனக்கு சில தகவல்கள் நண்பர்கள் ஊடாக கிடைத்தது. பிரபாகரன் தொடர்பாக எனக்குக் கிடைத்திருக்கிற உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அதுதான். அதற்கு பின்னர் என்ன நடந்தது என்பது தொடர்பாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் என்னிடத்தில் இல்லை. சிலர் பிரபாகரன் இல்லை என்று அடித்து சொல்கிறார்கள். ஆனால், அதற்கு அவர்களிடமும் ஆதாரம் இல்லை. பிரபாகரன் இருக்கிறார் என்று சொல்பவர்களிடம் ஆதாரம் இல்லை.
இப்போது இருக்கிறவர்களில் விடுதலைப்புலிகள் பற்றி அதிகம் அறிந்தவர் என்று சிவாஜிலிங்கத்தைத்தான் சொல்ல வேண்டும். அவரும் இந்த விடயம் பற்றி ‘பொறுத்திருந்து பார்ப்போம்’ என்ற கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார். வன்னியில் இருந்து இயங்கும் கவிஞர் தீபச்செல்வனும் இதை கருத்தைத்தான் சொல்லியுள்ளார். அதேநேரம், ‘இன்றைக்குள்ள அரசியல் சூழலுக்காக இந்த செய்தியை நெடுமாறன் ஊடாக சிலர் வெளியிட்டிருக்கலாம்’ என்ற சந்தேகத்தையும் தீபச்செல்வன் எழுப்பியுள்ளார்.
எல்லாவற்றையும் பார்க்கும்போது, உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டுள்ளது.”
தொடரும்