‘முகமூடி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து, அப்புறம் இந்தப்பக்கம் ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்காமல் தெலுங்கு சினிமா பக்கம் ஜாகையை மாற்றியவர்தான் பூஜா ஹெக்டே.
ஆனால் தெலுங்கு சினிமாவில் இவருக்கு அடுத்தடுத்து ஹிட். பூஜாவைத் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் அங்குள்ள ரசிகர்கள்.
தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் நடிகை என்றால் அது பூஜா ஹெக்டேதான் என்று சொல்லுமளவுக்கு அவரது மார்க்கெட் தாறுமாறாக எகிறிக்கொண்டே இருந்தது.
இதே வேகத்தில்தான் தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்தார். என்ன ராசியோ ‘பீஸ்ட்’ அவருக்கு பெஸ்ட் ஆக அமையவில்லை.
அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மூன்றுப் படங்களும் திரையரங்குகளுக்கு வந்த வேகத்தில் திரும்பி கிளம்பிவிட்டன. இதில் பூஜா ஹெக்டே அதிகம் எதிர்பார்த்த, பிரபாஸூக்கு ஜோடியாக நடித்த பான் – இந்தியா படமான ’ராதே ஷ்யாம்’ படமும் அடக்கம்.
இப்படி ஃப்ளாப் அடுத்து ஃப்ளாப் கொடுத்தாலும், சம்பள விஷயத்தில் ரொம்பவே கறாராக இருக்கிறார் பூஜா ஹெக்டே.
4 கோடி முதல் 5 கோடி வரை வாங்கிக் கொண்டிருந்தவரை மீண்டும் தமிழில் களமிறக்கலாம் என சில வருடங்களுக்கு முன்பாக மெகா ஹிட்டடித்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக கேட்டிருக்கிறார்கள்.
அடுத்தடுத்து ஃப்ளாப் கொடுத்திருப்பதால் சம்பளத்தை குறைப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு எக்கச்சக்க அதிர்ச்சி. 6 கோடி கொடுத்தால் உடனே கால்ஷீட் என்கிறாராம்.
இதைக்கேட்டு கோலிவுட் வட்டாரத்தில் ஒரு படம் கூட கைவசம் இல்லையென்றாலும் கூட இவ்வளவு பில்டப்பா என்று முணுமுணுப்பு கிளம்பியிருக்கிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு பறக்கும் கமல்!
உற்சாகத்தில் இருக்கும் கமல், ‘இந்தியன் 2’ படத்தின் முக்கிய காட்சிகளில் நடித்து முடித்துவிட்டார்.
சமீபத்தில் கல்பாக்கத்தில் இருக்கும் பழைய டச்சுகாரர்கள் கோட்டை ஒன்றில் ஷூட் செய்திருக்கிறார்கள்.
இன்னும் சில ஆக்ஷன் காட்சிகள் மட்டும் எடுக்கப்படவிருக்கிறதாம். இந்தக்காட்சிகளை இங்கு எடுப்பதை விட தென்னாப்பிரிக்கா மற்றும் தாய்லாந்தில் எடுத்தால் நன்றாக இருக்குமென ஷங்கர் நினைக்கிறாராம்.
இதனால் அடுத்த ஷெட்யூலுக்கு ‘இந்தியன் 2’ டீம் தென்னாப்பிரிக்கா, தாய்லாந்திருக்குப் பறக்க இருக்கிறது.