‘பொன்னியன் செல்வன்’ திரைப்படமாக வருமா என்று தவம் கிடந்த கல்கியின் வாசக ரசிகர்கள், அந்த திரைப்படத்திற்கு மாபெரும் வெற்றியை தேடித் தந்ததில் வியப்பு ஏதும் இல்லை.
அந்த காலத்து எழுத்தாளர் என்று எந்த காலத்திலும் சொல்லமுடியாத எழுத்தாற்றல் கொண்டவர் கல்கி. அவரது கற்பனை வளத்தோடு ‘மணியம்’ தூரிகையும் சேர்ந்து பொன்னியின் செல்வனை வாசகர்கள் மனகண்களாலும் பார்க்க செய்தது. பிரமிப்பூட்டியது.
அந்த நாவலுக்கு மணியம் வரைந்த ஓவியங்கள் அற்புதத்தின் உச்சம். “மணியம் ஓவியங்களை பார்க்கிற யோக்கியமானவர்களைகூட அந்த புத்தகத்தை திருடத்தோன்றும்” என்று புத்தக வடிவில் வந்த நாவலுக்கு முன்னுரை எழுதிய ராஜாஜியே வியந்து பாராட்டியிருக்கிறார்.
1950 அக்டோபர் 29-ம் தேதி கல்கி இதழில் இந்த நாவல் ஆரம்பித்தது. 1954 மே 14-ம் தேதி இதழில் 4 ஆண்டுகளுக்கு மேல் வெளியாகி முடிந்தது.
கரிகாலன் மரணம் எப்படி நிகழ்ந்தது, பிறகு என்ன நடந்தது போன்றவை சொல்லப்படாமல் மர்ம முடிச்சுகள் அப்படியே இருக்க நாவல் முடிந்ததால் வாசகர் கடிதங்கள் கல்கி அலுவலகத்தில் குவிந்தன. வேறு வழியின்றி கல்கி நீண்ட விளக்கம் தரவேண்டியதாயிற்று.
எழுதுவதற்கு முன்பே கல்கியின் கற்பனையில் பல ஆண்டுகள் வளர்ந்த அந்த கதையை எழுதி முடித்தபோது ‘அப்பாடா’ என்று இருந்திருக்கிறது அவருக்கு! இது தொடர்பாக இன்னொரு நாவலை எழுத தனக்கு சக்தி இல்லை என்று அவர் குறிப்பிட்டு, தனக்கு பின்னால் வருகிறவர்கள் இதன் தொடர்ச்சியை இன்னும் பிரமாதமாக எழுதுவார்கள் என்றும் அவர் விளக்கத்தில் குறிப்பிட்டார்.
இருந்தாலும், வாசகர்களுக்கு அளித்த பதிலில் கதை எப்படி போகும் என்ற குறிப்புகளை மேலோட்டமாக சொல்லி இருந்தார் அவர்.
கல்கி அதற்குப்பின் ‘அமரதாரா’ என்ற சமூக நாவலை ஆரம்பித்தார். கதையின் ஆரம்பத்தையும் மணியம் அதற்கு வரைந்த ஓவியங்களையும் பழைய கல்கி இதழ் கிடைத்தால் பாருங்கள். சொக்கிப் போவீர்கள். ஆனால் அடுத்த சில வாரங்களில் கல்கி மறைந்துவிட்டார். அவரது மகள் ஆனந்தி கல்கி எழுதி வைத்த சிறு குறிப்புகளை கொண்டு அமரதாராவை தொடர்ந்தார்.
கல்கி தனது ‘அலையோசை’ நாவல் நூறு ஆண்டுகள் பேசப்படும் என்று சொன்னார். பொன்னியின் செல்வன் 100 ஆண்டுகளுக்கு மேல் தமிழர் மனதில் ஆட்சிப் புரிவார் என்பது உண்மை.
கல்கியில் பொன்னியின் செல்வன் நாவல் ஆரம்பிக்கப் போவது பற்றிய அறிவிப்பு, ஓவியர் ‘சந்திரா’வின் கைவண்ணத்தோடு வெளியானது.
மறுநாள் கல்கி அலுவலகத்துக்கு வந்து தன் அறையில் அமர்ந்தார். எதிரே கண் கலங்கியவாறு ஓவியர் மணியம் நின்றிருந்தார். ‘என்ன ஆச்சு’ என்று கேட்டார் கல்கி.
“போன நாவலுக்கு சந்திரா ஓவியம் வரைந்துவிட்டார். இந்த நாவலுக்கு என்னை வரைய சொல்வீர்கள் என்று நினைத்தால்… ஏமாற்றமாக இருக்கிறது… பொன்னியின் செல்வனுக்கு நான் ஓவியம் வரைய வாய்ப்பு கொடுங்கள்” என்றார் மணியம் துக்கம் தொண்டையை அடைக்க.
“சரி” என்ற கல்கி வந்தியத்தேவனும், குந்தவையும் முதல்முறையாக சந்திக்கும் காட்சியை விவரித்து அடுத்த இதழ் அட்டைப் படத்திற்கு வரையுமாறு சொன்னார். மணியம் ஓவியத்துக்கு சொல்ல வேண்டுமா! இளமை துடிப்பான வந்தியத்தேவனும், அழகின் மறுவடிவமான குந்தவையும் அட்டைப்படத்தில் வர – வாசகர்கள் வைத்தக் கண் மாறாமல் பார்த்தார்கள்! மணியமே தொடருக்கு வரைந்தார். கல்கியின் வர்ணனையும், மணியம் சித்திரமும் பிரமிப்பூட்டி, திரைப்படம் எடுக்க நினைத்தவர்களை பின்வாங்க வைத்தது.
நாவலை அதன் கற்பனைக்கு ஏற்ற பிரம்மாண்டமாக எடுக்க முடியுமா என்று எம்ஜிஆர் முதல் கமல் வரை திகைத்து ஒதுங்க, மணிரத்னம் சாதித்து காட்டியிருக்கிறார்.
நாவலில் வரும் பழுவேட்டைரையர் போன்ற பெயர்களை மனதில் பதிய வைக்க வாசகர்கள் சிரமப்பட்டிருக்கிறார்கள். அதுபற்றி வந்த கடிதங்களுக்கு கல்கி நகைச்சுவையுடன் பதில் தந்தார்.
“இந்த பெயர்களை நான் ஒன்றும் வைக்கவில்லை! அவர்களே வைத்துக் கொண்டதுதான். பழுவேட்டைரையர் போன்ற பெயர்களை உச்சரிக்க சிரமப்பட்டால் நான் பொறுப்பல்ல” என்று தாமாஷாக எழுதிய கல்கி, “தாஸ்தாவொஸ்கி போன்ற ரஷ்ய எழுத்தாளர்கள் பெயர்கள் எல்லாம் இல்லையா. அது நமக்கு பழக்கமாகிவிட்டதுபோல இந்த பெயர்களும் பழக்கமாகிவிடும். பயப்படவேண்டாம்” என்று எழுதினார்.
பல வாசகர்கள் நாவலுக்கு ஆதாரம் உண்டா என்று கேட்டார்கள். “சரித்திர ஆதாரம் நிறைய உண்டு. கல்வெட்டுகள், செப்பேடுகள் உள்ளன. ஆனால் நான் எழுதுவது சரித்திரமல்ல. சரித்திர கதை” என்று கல்கி பதில் அளித்தார்.
‘நந்தினி’ கதாபாத்திரம் பலருக்கு அதிர்ச்சி கொடுத்தது. தமிழ் பண்பாட்டுக்கு விரோதமாக இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. கதையின் விறுவிறுப்பில் இந்த எதிர்ப்புகள் எடுபடவில்லை.
‘அகிலன்’ எழுதிய ‘சிநேகிதி’ நாவல் கலைமகளில் வந்தபோது இப்படி பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ‘Living together’ என்று இன்று பேசப்படுகிறதே அதைப்பற்றி அன்றே அகிலன் எழுதிய நாவல் அது. உடனே நாவலை நிறுத்துமாறு கலைமகள் அலுவலகம் முன்பு மறியலே நடந்தது. பிரபல எழுத்தாளர் ‘விந்தன்’ தலைமை தாங்கினா். அகிலனை ஆதரித்து டாக்டர் மு.வ. அறிக்கை வெளியிட்டார்.
அறிஞர் அண்ணா முதல் பல தலைவர்கள் கல்கியின் சரித்திர கதையின் ரசிகர்களாக இருந்தார்கள். அவரைப்போல யாராலும் சரித்திர கதையை எழுத முடியாது என்றார் அண்ணா.
பன்மொழி புலவர் க.அப்பாதுரை கல்கியின் ரசிகராக இருந்தார்.
‘கல்கியின் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் நாவல்களுக்கு சரித்திர பேராசிரியர்களான வையாபுரி பிள்ளையும், நீலகண்ட சாஸ்திரியும் நீண்ட முன்னுரை அளித்திருக்கிறார்கள். இதுவே கல்கிக்கு மாபெரும் பாராட்டாகும்.’
பொன்னியின் செல்வன் தொடரை படித்த வாசக ரசிகர்கள் அதனை அப்படியே ஒப்புவிப்பார்கள்! ‘ஆதியும் அந்தமும் இல்லாத கால வெள்ளத்தில்’ என்று தெடங்கிய முதல் வரியிலிருந்து… ‘வந்தியத்தேவனே மாவீரனே… சென்று வருக’ என்று கடைசி வரிகளை மனப்பாடம் போல சொல்வார்கள். ஒவ்வொரு வரியையும் வாசகர்கள் அப்படியே நம்பி ஏற்றார்கள்.
ஒரு பிரபலமான சென்னை டாக்டர் அந்த நாவலில் மனம் பறிக்கொடுத்தவர். தன்னிடம் வரும் நோயாளிகளிடம் ‘இதோ பாருங்கள் மருந்து எடுத்துக்கொள்ளுங்கள், பொன்னியின் செல்வன் நாவலையும் படிக்க ஆரம்பியுங்கள். அது படித்து முடிப்பதற்குள் நோயெல்லாம் பறந்து போய்விடும். வந்தியத்தேவன் உங்களை உற்சாகப்படுத்துவார்’ என்று சொல்லி அனுப்புவார்.