கோலிவுட்டில் இப்போது கோவிட்டையும் மீறி தகதகத்து கொண்டிருப்பது ‘பொன்னியின் செல்வன்’ ஜூரம்.
ஆளாளுக்கு அப்டேட்களையும், சோஷியல் மீடியா ஸ்டேட்டஸ்களையும் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
படத்தின் ப்ரமோஷனுக்காக இப்படத்தில் நடித்தவர்களின் பேட்டிகளை ஷூட் செய்து தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள். இப்படி படத்தின் அனைத்து வேலைகளும் ஏறக்குறைய முடிவடைந்து இருக்கிறது.
படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கு எந்தவிதத்திலும் சலிப்பு தட்டிவிடக்கூடாது. படம் பார்ப்பவர்களுக்கு போரடிக்கும் எண்ணம் எதுவும் வந்துவிட கூடாது என்பதில் மணி ரத்னம் மிகுந்த கவனத்துடன் இருக்கிறாராம். இதனால் எடிட்டிங் வேலைகளில் திவீர கவனம் செலுத்தி இருக்கிறார் மணிரத்னம்.
தற்போதைய அப்டேட் என்னவென்றால் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்கள் என்று முடிவாகி விட்டது. ஆனால் முதல் பாகம் எவ்வளவு நேரம் ஓடும் என்பது குறித்தும் தகவல் வெளியாகி இருக்கிறது.
’பொன்னியின் செல்வன்’ படம் சுமார் இரண்டு மணி நேரம் 46 நிமிடம் ஓடுகிறதாம். அதனால் முதல் பாதி ஒரு மணிநேரம் 21 நிமிடமும், இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் 25 நிமிடமும் ஓடும்படி இடைவேளையை மணிரத்னம் திட்டமிட்டு இருக்கிறாராம்.
’வெந்து தணிந்தது காடு’ ஒன்லைன்
சிம்பு நடிக்க கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் ’வெந்து தணிந்தது காடு’ படம் ரிலீஸூக்கு தயாராகிவிட்டது.
பான் – இந்தியா கான்செப்ட் ஒருபுறமிருக்க தற்போது கோலிவுட்டில் ஒரு புது ட்ரெண்ட் உருவாகி கொண்டிருக்கிறது.
தமிழில் படம் வெளியாகும் போதே, தெலுங்கிலும் அப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடுவது. அல்லது ஒரே நேரத்தில் தமிழ் மற்றும்தெலுங்கில் எடுத்து வெளியிடுவது.
இந்த வகையில் தற்போது முதலில் களத்தில் குதித்து இருக்கிறது ’வெந்து தணிந்தது காடு’. இப்பட த்தை அடுத்து சிவ கார்த்திகேயனின் ‘ப்ரின்ஸ்’, தனுஷின் ‘வாத்தி’ ஆகியப் படங்களும் தமிழ், தெலுங்கில் வெளியாக இருக்கின்றன.
’வெந்து தணிந்தது காடு’ தெலுங்கில் 15-ம் தேதி வெளியாவதுதான் திட்டமாக இருந்தது. இப்போது தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் செப்டெம்பர் 17-ம் தேதி வெளியாகிறதாம்.
இந்நிலையில் இப்படத்தின் ஒன்லைன் வெளியே கசிந்துள்ளது. ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் வாலிபனான சிம்பு, எதிர்பாராத சூழ்நிலைகளால் மிக பரபரப்பான க்ரைம் உலகிற்குள் எப்படி நுழைகிறார் என்பதே ஒன்லைன் என்று கிசுகிசுக்கிறார்கள்.
ஆஸ்காருக்கு தயாராகும் ’ஆர்.ஆர்.ஆர்.’
2023-ல் நடக்க இருக்கும் ஆஸ்கார் விருதுகள் குறித்து இப்பொழுதே பரபரப்பு கிளம்பியிருக்கிறது.
இந்தமுறை இந்தியா சார்பில் எந்தப்படம் பரிந்துரைக்கப்படும் என்பது குறித்த விவாதம் தொடங்கியிருக்கிறது.
இந்த சூடான விவாதத்தில் முன்னணியில் இருப்பது ராஜமெளலியின் ’ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம்தான் என்கிறார்கள்.
காரணம் இப்படத்தை ஒடிடி-யில் வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ்.
சமீபகாலமாகவே தனது ஒடிடி- தளத்தில் வெளியாகும் படங்களுக்கான கெளரவத்தை ஏற்படுத்தி கொடுப்பதில் நெட்ஃப்ளிக்ஸ் மும்முரம் காட்டிவருவதாக கிசுகிசுக்கிறார்கள்.
தன்னுடைய ஓடிடி- தளத்தில் இருக்கும் படங்கள் விருதுகளைத் தட்டிச் சென்றால் அது மறைமுகமாக கிடைக்கும் கெளரவம் என நெட்ஃப்ளிக்ஸ் திட்டமிடுவதாகவும் பேச்சு அடிப்படுகிறது.
அந்தவகையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் ஆஸ்காரில் பரிந்துரைக்கப்படுவதற்கு இந்த ஒடிடி நிறுவனத்தின் பங்களிப்பு பலமாக இருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.
இதனால் அடுத்த நான்கு மாதங்களுக்கு அமெரிக்காவில் இப்படத்தை ப்ரமோஷன் செய்வதற்காக ராஜமெளலி மற்றும் பிஆர் டீம் முகாமிட இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.
இந்தியா சார்பாக ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் ஆஸ்காருக்கு நிச்சயம் பரிந்துரைக்கப்படும் என்று இப்பொழுதே பேச்சு அடிப்பட ஆரம்பித்திருக்கிறது.