ரஜினியின் ‘ஜெயிலர்’ ட்ரெய்லர் சூட்டைக் கிளப்பி கொண்டிருக்க, ரஜினி மூத்தமகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தின் டிஜிட்டல் போஸ்டர் ட்ரோலுக்கு உள்ளாகி இருக்கிறது.
தலையில் சிவப்பு குல்லா, முகத்தில் தாடி, கண்களில் ஒரு கூலர்ஸ் என ஷெர்வானியில் ரஜினி நடந்து வருவது போன்ற ஃபர்ஸ் லுக்கை ‘லால் சலாம்’ படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைதான் இப்போது இணையத்தில் கிண்டலடித்து வருகிறார்கள்.
ரஜினியின் ‘மொய்தீன் பாஸ்’ தோற்றம் தொப்பி வாப்பா பிரியாணி கடை விளம்பரம் மாதிரி இருக்கிறது என்று சமூக ஊடகங்களில் சிலர் குறும்புத்தனத்தின் உச்சத்திற்கே போய்விட்டனர்.
மறுபக்கம், இந்திய சினிமாவின் மாபெரும் சூப்பர் ஸ்டாரை இப்படியா வீணடிப்பது என்று பல ரஜினி ரசிகர்கள் ஆதங்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்த ’மொய்தீன் பாய்’, ரஜினி ஏற்கனவே முயற்சித்த ‘ஜக்கு பாய்’ போலவே இருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்திற்கும், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர். ராமதாசுக்கும் இடையே மோதல் வலுத்தது. ஒரு கட்டத்தில் வார்த்தை மோதல் ரொம்பவே தீவிரமானது.
இதனால் ரஜினி டாக்டர் ராமதாசுக்கு எதிராக அரசியலில் களமிறங்க திட்டமிட்டார். அதற்கேற்றவகையில் அப்போது நாடாளுமன்ற தேர்தலும் வந்தது. 2004-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பா.ம.க போட்டியிட்ட 6 தொகுதிகளிலும், அதை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வை ரஜினி ஆதரித்தார்.
தனது அரசியல் களத்தை இன்னும் பரபரப்பாக்கும் வகையில் ‘ஜக்குபாய்’ படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். துபாய் ஷேக்குகள் அணிவது போல உடை, கழுத்தில் ருத்திராட்ச கொட்டை, நெற்றியில் குங்குமம், பக்கத்தில் ஒரு மெஷின் கன் என ’ஜக்குபாய்’ விளம்பரம் மிரட்டலாக வெளி வந்தது.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஜோதிகா டூயட் ஆடுவதற்கு ஜோடியாக, அதற்கான பாடல்களை வைரமுத்து எழுத, ஏ.ஆர்.ரஹ்மான் அந்த வரிகளுக்கு இசையமைக்க, அதை ரஜினியின் ‘அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ்’ தயாரிக்க ’ஜக்குபாயாக’ வந்து நின்றார் ரஜினி. நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் ஷூட்டிங் என்று முடிவானது.
தலைவர் எப்படியும் அரசியலில் இறங்கிவிடுவார் என அவரது ரசிகர்கள், ‘மத்தியில் வாஜ்பாய் ஆட்சி. தமிழகத்தில் ஜக்குபாய் ஆட்சி’ என்றெல்லாம் ஊரெங்கும் போஸ்டர் ஒட்டி கொண்டாடினர்.
ஆனால் ரஜினி எதிர்பார்த்தது நடக்கவில்லை. ரஜினியின் வாய்ஸ் எடுப்படாமல் போனது. இதனால் ‘ஜக்குபாய்’ சொல்லிக்கொள்ளாமலே காணாமல் போனார்.