இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள தொகுதி கன்னியாகுமரி. தமிழ்நாட்டில் பாஜக இரண்டு முறை வென்ற தொகுதி என்பதால் ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின் போதும் முக்கியத் தொகுதிகளில் ஒன்றாக இருக்கும். முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் 10-வது முறையாக இங்கு போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் எதிர்த்து நிற்பவர் நடிகர் விஜய் வசந்த். இம்முறை யார் வெல்வார்கள்? கள நிலவரம் என்ன? பார்க்கலாம்…
இதுவரை யார், யார் வெற்றி பெற்றுள்ளார்கள்?
கேரளாவிலிருந்து பிரிந்து வந்து தமிழ்நாட்டுடன் இணைந்த மாவட்டம் என்பதால் கன்னியாகுமரியில் கேரள தொடர்புகள் அதிகம். தமிழகத்தின் மற்ற மாவட்ட அரசியல் சூழ்நிலையிலிருந்து மாறுபட்டு கேரளாவைப் போன்ற சூழல் கொண்ட தொகுதி இது. மாநில கட்சிகளைவிட தேசியக் கட்சிகள் அதிகம் கோலோச்சும் பகுதி.
நாகர்கோயில் நாடாளுமன்றத் தொகுதி என்றிருந்தது முதல் மறுசீரமைப்புக்கு பின்னர் கன்னியாகுமரி தொகுதி என மாறியுள்ளது வரை 11 தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்துள்ளது. காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதும் தொகுதியாகவே பல ஆண்டுகளாக இந்த தொகுதி இருந்து வருகிறது. இது மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் செல்வாக்கு உள்ள தொகுதி இது. பலமுறை காங்கிரஸ் வென்ற இந்த தொகுதியில் பாஜக இரண்டு முறையும், சிபிஎம் மற்றும் திமுக தலா ஒருமுறை வென்றுள்ளன.
கன்னியாகுமரி தொகுதியில் 2014 நாடாளிமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 3,72,906 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 2,44,244 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பெற்றார்.
2019 தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் – வசந்தகுமார் இருவரும் மீண்டும் போட்டியிட்டனர். இம்முறை வசந்தகுமார் 6,27,235 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பொன். ராதாகிருஷ்ணன் 3,67,302 வாக்குகள் பெற்றார்.
கரோனா தொற்று காலத்தில் வசந்தகுமார் உயிரிழந்ததால், 2021இல் கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பிலும், பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக சார்பிலும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் விஜய் வசந்த் 4,15,167 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
இப்போது யார், யார் மோதுகிறார்கள்?
கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,47,378; இதில் ஆண் வாக்காளர்கள்: 7,72,623; பெண் வாக்காளர்கள்: 7,74,619; மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 136.
காங்கிரஸில் விஜய் வசந்த், பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன், அதிமுகவில் பசிலியான் நசரேத், நாம் தமிழர் கட்சியில் மரிய ஜெனிபர் உட்பட 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மரிய ஜெனிபரும் மும்முர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, முதல்முறை வாக்காளர்களைக் கவரும் வகையில், கட்சியின் தொலைநோக்குத் திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
22 பேர் போட்டியிட்டாலும் விஜய் வசந்த் – பொன். ராதாகிருஷ்ணன் இருவரிடையே மட்டுமே போட்டி கடுமையாகியுள்ளது. இருவருமே உள்ளூர் இந்து நாடார் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஜாதியை மீறி, மத ரீதியான வாக்குகளும் குமரியில் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றன. குறிப்பாக விஜய் வசந்துக்கு இந்து நாடார் வாக்குகளுடன் கிறிஸ்தவ நாடார் வாக்குகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற இரு வேட்பாளர்களும் வாக்கு வங்கியைப் பிரித்து இவர்கள் இருவரில் ஒருவரது வெற்றிக்கு உதவுபவர்களாக மட்டுமே உள்ளனர். இஸ்லாமியர் சமூக வாக்குகள் விஜய் வசந்துக்கு கிடைக்கும். அதேநேரம் பெரும்பான்மையாக உள்ள கிறிஸ்தவர்கள் வாக்குகளை கிறிஸ்தவர்களான பசிலியான் நசரேத்தும் மரிய ஜெனிபரும் கவர்ந்தால் விஜய் வசந்த் வெற்றி சிரமமாகலாம்.
அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த தொகுதியில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் கடற்கரைக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் வாக்குகள் தனக்கு அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இவர் உள்ளார். இதுவும் விஜய் வசந்த் வெற்றியை பாதித்து பொன். ராதாகிருஷ்ணனுக்கு சாதகமாக அமையலாம்.