அண்ணா,
கலைஞர்,
எம்.ஜி.ஆர்.
ஜெயலலிதா
இப்படி தங்களுக்கென தனித்துவமிக்க ஆளுமையுடன் கூடிய நான்கு முதல்வர்களைத் தவிர்த்து தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதவோ, கூறவோ முடியாது.
இந்த நான்கு பேருக்கும் வேறுவேறு குணாதிசயங்கள்தான் என்றாலும், இவர்களுக்கு ஒரே பின்னணிதான். அது சினிமா.
மக்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெறுமளவிற்கு தமிழ்நாட்டின் அரசியலில் இவர்கள் வலுவாக காலூன்ற செய்தது தமிழ் சினிமாதான்.
இப்படிதான் இங்கு அரசியலும், சினிமாவும் லிவ்விங் டு கெதர் பாணியில் இணைந்து பயணித்து கொண்டிருக்கிறது. இதனால்தான் சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல்ஹாசன் என வரிசையாக அரசியல் களத்தில் குதித்தனர். மற்றொரு பக்கம் சரத்குமார், கார்த்திக், சீமான் என சினிமாவிலிருந்து இன்னும் சிலர் அரசியலில் ஆழம் பார்க்க வந்திருக்கின்றனர்.
சினிமா கவர்ச்சி என்றால் அரசியல் அதிகாரம். இதனால்தான் கவர்ச்சியை வைத்து கொண்டு அதிகாரத்தை கைப்பற்றும் போட்டி இன்று சினிமா நடிகர்களுக்கிடையே தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்த தலைமுறைக்கு அடுத்து வந்திருக்கும் விஜய் – அஜித் என இவர்கள் இருவருக்குமிடையில் சினிமாவில் கடும் போட்டி இருக்கிறது.
இந்த பாக்ஸ் ஆபீஸ் போட்டியைத் தவிர்த்து விஜய்க்கு வேறு பல சிக்கல்களும் இருக்கின்றன. அதில் முக்கியமான பிரச்சினை அவரது படங்கள் வெளியாவதில் சிக்கல்கள் தொடர்வதுதான். சினிமாவில் இப்படி இருக்கும் சீண்டல்களால், விஜய் அரசியலில் இறங்க இருப்பதாகவும், மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென்றால் அதிகாரமிக்க இடத்தில் இருக்கவேண்டுமென விஜய் நினைப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
விஜய் அரசியல் களத்தில் இறங்குவதற்கு நேரம் பார்த்தபடி இருக்கிறார். அநேகமாக ’லியோ’ படம் முடிந்த உடன் ஒரு சின்ன ப்ரேக் எடுக்க நினைக்கிறாராம். அதாவது அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரை சினிமாவில் நடிக்காமல், மக்களை நேரடியாக சென்று சந்திப்பது. அரசியலில் களம் காண்பது. தனக்கு இருக்கும் செல்வாக்கை அரசியலிலும் விரிவுப்டுத்துவது. இப்படி 3 ஸ்டார் ஆபரேஷனை விஜய் தரப்பு யோசித்து வருவதாகவும் கூறுகிறார்கள்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், இப்பொழுதெல்லாம் விஜய் தனது பனையூர் அலுவலகத்தில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து வருகிறார். அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள வோடு சாவடிகளின் விவரங்கள், பூத் ஏஜெண்ட்கள் யார் யார் இருக்கிறார்கள் என்பது போன்ற தகவல்களைச் சேகரிக்க உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் சினிமாவில் இவருடைய நேரடி போட்டியாளரான அஜித், அரசியல் என்றால் ’வாழு…வாழவிடு’ என்று ஒற்றை வரியோடு கையெடுத்து கும்பிடுகிறார்.
அரசியல் விஷயத்தில் அஜித்தின் நிலைப்பாடு என்ன? அவரது கொள்கை என்ன?
2019-ம் ஆண்டுவாக்கில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக, இந்நாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் இருந்தார். அப்போது திருப்பூரில் அஜித் ரசிகர்கள் 100 பேர் அரசியலில் இறங்குவதாக அறிவித்தனர். அவ்வளவுதான், ஒட்டுமொத்த அஜீத்தின் ரசிகர்களும் மோடியின் சாதனைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என அறைக்கூவல் விட்டார் தமிழிசை.,
பொதுவாகவே எதற்கும் ரியாக்ட் பண்ணாத அஜித், தமிழிசையின் ஸ்டேட்மெண்ட்டுக்கு யாரும் எதிர்பாக்காத வகையில் தடாலடியாக பதிலடி கொடுத்தார்.
‘நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பதை அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்கு காரணம். சில வருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும், இந்த பின்னணீயில்தான். என் மீதும் என் ரசிகர் மீதும், என் ரசிகர் இயக்கங்களின் மீதும் எந்தவிதமான அரசியல் சாயம் வந்துவிடக்கூடாது என்று நான் சிந்தித்து எடுத்த சீரிய முடிவு.’’ என வார்த்தைகளை கவனமாக போட்டு வெளியானது அஜீத்தின் அறிக்கை.
பொதுவாகவே தான் நடிக்கும் படங்களின் ப்ரமோஷனுக்கும், விழாக்களுக்கும் வராமல் இருப்பதை தனது கொள்கையாக வைத்திருக்கும் அஜீத், அதே ஃபார்மூலாவைதான் அரசியல் விஷயத்திலும் முன் வைத்திருக்கிறார். தனது படங்களின் விழாக்களுக்கு ஏன் வருவதில்லை என்பது குறித்து அவர் முன்பு பகிர்ந்து கொண்ட போது, ‘தயாரிப்பாளர்களிடம் கூலி வாங்கி கொண்டு, அவர்களது படத்தில் நடிக்கும் நடிகன் நான். ஒரு படத்தின் கதை எனக்குப் பிடித்துப்போக அதில் நடிக்கிறேன். அது என் தொழில். என் விருப்பம். ஆனால் ஒரு படம் முடிந்து தயாராகிவிட்டால், அப்படம் மக்களுக்கு பிடிக்கலாம். பிடிக்காமலும் போகலாம். தாங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் படம் பார்க்க வரும் மக்களிடம் என்னுடைய விருப்பத்தைத் திணிப்பது நியாயமாகாது. ப்ரமோஷனில் நான் சொல்வதைக் கேட்டு அவர்கள் படம் பார்த்துவிட்டு, ஏமாந்துப் போனால் என் மீது அவர்களுக்கு எப்படி மரியாதை ஏற்படும்? வெற்றி வரும் போகும். ஆனால் நம் சொல் போனால் திரும்ப மீட்டெடுக்கமுடியாது. இதனால் தான் மக்களை இன்ஃப்ளூயன்ஸ் செய்ய விரும்புவது இல்லை’
’அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு. அதை நான் தனிப்பட்ட யார் மீதும் திணிப்பதில்லை. மற்றவர்கள் கருத்தை என் மீது திணிக்கவிட்டதும் இல்லை. என் ரசிகர்களிடமும் இதையேதான் நான் எதிர்பார்க்கிறேன். உங்களுடைய அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். என் பெயரோ, என் புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் சற்றும் விரும்புவது இல்லை’ என்ற தீர்க்கமாக சொன்னவர் அஜித்..
இதற்கு காரணம், ரஜினி, கமல், விஜய் என இவர்கள் மூவரும், அரசியல் ரீதியான கருத்துகளைச் சொல்ல, முன்பு ’பாபா’ இடையில் ’விஸ்வரூபம்’ ’தலைவா’ ;மெர்சல்;, ;சர்கார்’, ‘வாரிசு’ போன்றப் படங்கள் பஞ்சாயத்தில் சிக்கித் தவித்தது ஞாபகமிருக்கலாம்.
இந்தப் பஞ்சாயத்துகளைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் அஜித்திடம் இருக்கிறது. ’’சினிமா என்னுடைய துறை. நான் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதும். அரசியல் வேறு துறை. அதற்கு அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். நாட்டைக் காப்பாற்ற அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களது வேலையை ஒழுங்காக செய்யவிட்டால் போதும். தேவையில்லாமல் அவர்களைச் சீண்டும்போதுதான் அவர்கள் சினிமா நட்சத்திரங்களைச் சீண்ட ஆரம்பிப்பார்கள். ’இது என் ஏரியா, உள்ளே வராதே’. நீ குறுக்கிட்டால் நானும் உன் ஏரியாவுக்குள் வருவேன் என்பதே இதன் அர்த்தம்’ என அஜித் தனது பேட்டியொன்றில் குறிப்பிட்டார்..
மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன்….என்று மேடைங்களில் முழங்கும் அரசியல்வாதிகளின் பார்வையில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டு நிற்பவர் அஜீத்.
’’நான் அரசியலுக்கு வந்தால்தான் மக்களுக்கு உதவ முடியுமென்றால், 1986-ல் நான் சம்பாதித்து என் சொந்த காலில் நிற்க ஆரம்பித்த நாளில் இருந்தே என்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்ய ஆரம்பித்தேன். அப்போது எனக்கு வெறும் இரண்டாயிரத்து ஐம்பது ரூபாய்தான் சம்பளம், அந்த சூழ்நிலையிலும் என் சம்பளத்திலும் என்னால் ஒரு குறிப்பிட்ட தொகையை அறக்கட்டளைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தேன்.. இன்று மக்கள் என் மீது வைத்திருக்கும் குட்வில், அன்பின் மூலம் இந்த உயரத்திற்கு வந்திருக்கிறேன். இப்போதும் நான் சம்பாதிப்பதில் ஒரு குறிப்பிட்ட தொகையை அறக்கட்டளைகளுக்கு வழங்குவதை தொடர்கிறேன். நான் செய்கிற உதவிகளை பப்ளிசிட்டி பண்ணினால், அந்த உதவிகளுக்கான மரியாதை இருக்காது.’ .
‘இன்றைக்கு கடவுளே பூமிக்கு மனித உருவில் வந்தாலும், அவரால் இன்றைக்குள்ள சமுதாயத்திலும், அரசியலிலும் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. காரணம் மக்கள்தான். மக்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் மனித உருவில் இருக்கும் கடவுளினாலும் கூட தனியாக எதையும் சாதிக்க முடியாது. இவர் ஆட்சிக்கு வந்தால் நாடு முன்னேறும். அவர் ஆட்சிக்கு வந்தால் இந்தியா வல்லரசாக உயரும் என்று நாம் நினைப்பது எல்லாமே தவறு. நாம் நினைப்பது, எதிர்பார்ப்பது போல் அரசியல்வாதிகளால் எல்லாவற்றையும் கொடுக்க முடியாது. அப்படி கொடுப்பதற்கு அரசியல்வாதிகள் மந்திரவாதிகளும் இல்லை. அனைத்து முன்னேற்றங்களும் மக்களிடமிருந்தே ஆரம்பிக்கின்றன’ என்பது அஜித்தின் வார்த்தைகள்
ஆக அரசியல், மாற்றம், முன்னேற்றம் என அனைத்தும் மக்களிடமிருந்துதான் ஆரம்பிக்கப்படவேண்டும். இதற்கு கட்சி தேவையில்லை, கொடியும் தேவை இல்லை. அடுத்தவரை சந்தோஷமாக வாழ விட்டால் போதும் என்கிற ’மக்கள் அரசியல்’ மீது அஜித்திற்கு ஆர்வம் இருக்கிறது.
விஜய்க்கு ஒரு வலுவான அடிப்படை கட்டமைப்பு இருந்தால்தான் மக்களுக்கு உதவ முடியும். அதற்கு அரசியலில் இறங்கவேண்டுமென்ற ஆசை இருக்கிறது.