கலைஞர் என்றால்…. வேகம்!
கலைஞர் என்றால்…. புதுமை!
கலைஞர் என்றால்…. அதிசயம்!
“எம்.ஜி.ஆர் அளித்த ஊழல் குற்றச்சாட்டுகளைப் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அன்று முதல்வர் கலைஞர் கூறிய பதில் யார் கற்பனைக்கும் எட்டாதது. ‘பார்த்தேன் …படித்தேன்….ரசித்தேன்’ என்றார் கலைஞர். குற்றச்சாட்டுகள் ஒரு கணம் அழிந்து, கலைஞர் பதில்தான் இன்றும் மக்கள் மனதில். இந்த மூன்று வார்த்தைகள் அரசியலில் அழியாமல் நிற்கிறது” என்று கூறினார் கொஞ்ச நாட்களாக நமது திருக்கூட்டத்தில் சேர்ந்து கொண்ட இலக்கியவாதி.
“உண்மையில் இந்த மூன்று வார்த்தைகளும் கலைஞரின் அதீத அரசியல் ஈர்ப்பின் காரணமாக (passion) பிறந்தவை. அரசியலை நன்றாக புரிந்துகொண்ட பார்வை அவருடையது – அரசியலை நன்றாக படித்து ரசித்து வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டே இருந்தவர்” என்று அவர் தொடர்ந்தார்.
“கலைஞர் அரசியலில் காட்டிய ‘வேகம்’ அடுத்தடுத்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது. தி.மு.க ஆரம்பித்தபோது அவர் தலைவரின் பட்டியலில் இல்லை என்றார்கள்; ஆனால்…! அவர் முன்னேறிய வேகம்… அண்ணாவுக்கு பின் இருந்த தலைவர்கள் பின்வாங்க… இவருக்கே அடுத்த இடம். அண்ணாவுக்கு பின் இவரே முதல்வர்.
ஈ.வெ.கி சம்பத் அண்ணாவுக்கு அடுத்த இடம் என்று நினைத்தவர்கள் உண்டு. அந்த இடத்தை தக்கவைக்க அவரும் முயன்றார். எந்த விழாவிலும் அண்ணாவுக்கு அடுத்த நாற்காலியில் சம்பத். அவரே வலியப் போய் அமர்வார். கலைஞர் முதல்வர் ஆகும்போது சம்பத் எங்கே?”
“கலைஞருக்கு தோல்வி என்பது இல்லை. மத்திய ஆட்சி சகல அரசியல் பலத்தை எடுத்துக்கொண்ட நேரம். கூட்டாட்சி தத்துவம் புதைகுழிக்கு தள்ளப்பட ஆரம்பித்து விட்டது. நியாயமற்ற இந்த அரசியல் திருப்பம் கலைஞர் எதிர்பாராதது எனலாம். அவரை வீழ்த்துவதே டெல்லியின் திட்டமாக இருந்தது. அதற்கு இடையிலும் அவர் அரசியல் சாமர்த்தியங்களை நிகழ்த்தினர்.” கூறினார் இடதுசாரி முதிய தலைவர்.
1962-ல் இளம் நிருபராக பணியாற்றியபோது கலைஞரை பார்த்த நினைவுகள்…
சட்டமன்றத்தில் சுறுசுறுப்பாக இயங்கியவர் அவர். உற்சாக தோற்றத்துடன் வளைய வருவார். முகத்தில் சோர்வே இருக்காது. அவரிடம் ஒரு கவர்ச்சி உண்டு.
கோட்டையில் உள்ள சிறிய அறையில் அவர் புன்சிரிப்போடு வந்து நிருபர்களை சீண்டுவார். சீனியரான ஒரு பத்திரிகை நிருபர் ஒற்றை நாமத்துடன் இருப்பார். “வடகலை – தென்கலைக்கு நடுவே இது என்ன நடுநிலை நாமமா?” என்றார்.
அப்போது நிருபர்கள் அறையில் மூன்று டெலிபோன்களே! செய்தி கூற டெலிபோனை பிடிக்க போட்டி. “ஏன் ஹாட் லையன் வைக்கக்கூடாது. முதலாளிகளிடம் கேளுங்கள். கேட்டால்தான் கிடைக்கும்” என்றார். ஹாட் லையன் கிடைத்தது.
அவருக்கு நிதியமைச்சரான சி.எஸ்.-ஐ ரொம்ப பிடிக்கும். அவரிடம் நன்றாக பழகுவார். ‘தமிழால் முடியும்’ என்ற சி.எஸ் புத்தகங்கள் வெளிவந்தன. அதை லாபியில் பலருக்கு கொடுத்தார். கையில் வாங்கிய புத்தகத்தை உடனே கலைஞர் படிக்க ஆரம்பித்து விட்டார்.
“தமிழால் முடியும்… இதை நீங்கள் சாதிக்க முடியுமா? உங்கள் கட்சியே விடாதே” என்றார் கலைஞர். சி. எஸ். சிரித்தார்.
ராஜாஜிக்கும் கலைஞரை மிகவும் பிடிக்கும். ராயப்பேட்டை லட்சுமிபுரம் இளைஞர் சங்கம் (உண்மையில் வயதான அறிஞர்களால் நடத்தப்பட்டது) என்ற அமைப்பின் சார்பாக ஹிந்தி எதிர்ப்புக் கூட்டம்.
ஈ.வெ.கி.சம்பத், கலைஞர், ராஜாஜி மூவரும் பேசினார்கள். பெரும் கூட்டம். கலைஞரை அங்கேதான் முதன்முறையாக சந்திக்கிறார் ராஜாஜி.
ராஜாஜி இருக்கிறாரே என்ற தயக்கம் சற்றுமில்லாமல், “ஹிந்தியை திணித்தவர் நீங்கள்தான்! கடித்த விஷத்தை பாம்பே திரும்ப உறிஞ்சி எடுக்கும் என்பார்கள். அதுபோல நீங்கள்தான் ஹிந்தியை இன்று வராமல் தடுக்க வேண்டும்.” என்றார்
கலைஞரின் வலது கையை பற்றி கைரேகை பார்ப்பது போல ராஜாஜி உற்று கவனித்தார். கலைஞர் சட்டையில் இருந்த பேனாவை எடுத்து அவரது கையில் எதோ வரைந்தார். சம்பத் பக்கம் ராஜாஜி திரும்பவே இல்லை.
“புதுமை அரசியல்வாதி அவர். படங்களுக்கு அவர் எழுதிய வசனங்கள் எந்தனை கூர்மை. வாலிப வயதுதான் அப்போது அவருக்கு. முரசொலி இதழை தொண்டர்கள் கையில் போய் சேர வைத்த சாதனை! முக்கியமாக அரசியலில் நாளை தனக்கு எதிரியாக வரலாம் என்று நினைப்பவரை ஆரம்பம் முதல் தலை தூக்கவிடாமல் செய்யும் ராஜதந்திரம்.”
“அவர் கல்லூரிகளுக்கு சென்று பட்டம் பெறவில்லை” என்று படித்தவர்களின் ஒரு பகுதியினர் அவரை ஏற்க மறுத்தது உண்டு. ஆனால்…. கலைஞர் அரசியல்வாதி என்பதிலிருந்து அரசியல் தலைவராக, அரசியல் சிந்தனையாளராக, இந்தியாவில் கவனத்தை கவரும் ஸ்டேட்ஸ் மென் ஆக மாறிய அதிசயங்கள்… அவரை எல்லோரும் ஏற்க ஆரம்பித்தார்கள்
அவருடைய நாவன்மைக்கு ஈடு சொல்ல முடியாது. ஒருமுறை கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவுக்கு வந்தார் கலைஞர். ஒன்பது மணிக்கு வாரியார் சொற்பொழிவை முடித்தார். நேரம் ஒன்பது. ரசனைகள் ஒன்பது. நவரசம் என்று ஒன்பது, நவமணிகள் ஒன்பது என்று அடுக்கிக் கொண்டே போனார் வாரியார். அடுத்து பேசிய கலைஞர், “வாரியார் பத்து மணிக்கு முடித்திருந்தால், ராவணன் தலை பத்து, தசாவதாரங்கள் பத்து என்று அடுக்கியிருப்பார் என்றார். எங்கேயும் அவர்தான் முதல்வர்.