டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மே 26ல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் என்ன இருக்கிறது?
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இரண்டரை வருடங்களில் முழுமையாக கட்டப்பட்டுவிட்டது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை டாடா புராஜக்ட் லிமிடட் நிறுவனம் கட்டி இருக்கிறது. இக்கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 64,500 சதுர மீட்டர். இந்த 4 மாடி கட்டிடத்தின் மொத்த செலவு 970 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் வசதி, மழைநீரை சேமிக்கும் வசதி போன்ற பல நவீன வசதிகள் இந்த கட்டிடத்தில் உள்ளன.
இக்கட்டிடத்தில் உள்ள மக்களவை வளாகம் தேசியப் பறவையான மயிலின் வடிவத்திலும், மாநிலங்களவை வளாகம் தேசிய மலரான தாமரையின் வடிவத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்ட இதுவரை 26,045 டன் இரும்பு, 63,807 டன் சிமெண்ட், 9,689 கியூபிக் மீட்டர் நிலக்கரி சாம்பல் (Fly Ash) ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. 23,04,095 மனித நேரம் இதுவரை இக்கட்டிடத்தை கட்ட செலவிடப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த பூகம்பம் டெல்லி நகரைத் தாக்கினாலும் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் இக்கட்டிடம் உறுதியாக கட்டப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் வருவதற்கு ஏற்ற வகையில் இதன் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை வளாகத்தில் 552 எம்பிக்கள் அமர்வதற்கு மட்டுமே வசதி உள்ளது. ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள மக்களவை வளாகத்தில் 888 எம்பிக்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், அவர்கள் அமரும் அளவுக்கு வசதியை ஏற்படுத்துவதற்காக இங்கு அதிக இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு எம்பியின் இருக்கையிலும் மல்டிவீடியோ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலங்களவை வளாகத்தில் 384 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அதை ஈடுகட்டுவதற்காக இருக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.