வாவ் தமிழா யூ டியூப் சேனலில் வெளியாகிவரும் ‘புக் டாக்’ தொடரில், தமிழில் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்கள் குறித்து எழுத்தாளர் பா. ராகவன் அளித்த பேட்டி தொடர்ச்சி
முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
கலைஞர் முதல் கலாப்ரியா வரை
சுபமங்களா இதழில் வெளியான நேர்காணல்கள் தொகுப்பு இந்நூல். பத்திரிகையாளர் ஆக விரும்புபவர்களுக்கு மிகவும் உதவக்கூடிய புத்தகம் இது. ஒரு நேர்காணல் எப்படியிருக்கும், எங்கே தொடங்கி எப்படி போகணும், எந்த மாதிரியான கேள்வி எந்த மாதிரியான உணர்வைத் தூண்டும், எது குஷிப்படுத்தும் எது கோபப்படுத்தும், சீண்டுவதுபோல் எப்படி கேட்பது – எல்லாவிதமான நுட்பங்களும் இந்த ஒரு புத்தகத்துக்குள் இருக்கிறது.
புனைவு எனும் புதிர் – விமலாதித்த மாமல்லன்
இலக்கிய உலகில் ஒரு தாதா விமலாதித்த மாமல்லன். இவரது விமர்சனங்களுக்காக நிறைய எதிரிகளை சம்பாதித்துள்ளார். ஆனால், நியாயமான காரணங்களுடன்தான் இவர் விமர்சனங்கள் இருக்கும். படைப்பு சார்ந்து குறையே சொல்லமுடியாத ஒரு தரத்தை ஆரம்ப காலம் முதல் இன்று வரை கொண்டிருக்கிறார். ‘தமிழ் இந்து’ பத்திரிகையில் வெளிவந்த தொடர் ‘புனைவு எனும் புதிர்’. இரண்டு பகுதிகள் வந்துள்ளது. இவரது ‘விளக்கும் வெளிச்சமும்’ என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பு இந்த ஆண்டு வெளிவந்துள்ளது. இதுவும் அவசியம் படிக்க வேண்டியது.
ஷோபா சக்தி படைப்புகள்
நம் காலத்தில் வாழக்கூடிய ஒரு கலைஞன் ஷோபா சக்தி. உலகளவில் தமிழ் எழுத்தை கொண்டு சேர்க்கக்கூடிய ஒரு மகத்தான படைப்பாளி. தனிப்பட்ட முறையில் நான் ஷோபா சக்தியின் மிகத் தீவிரமான ரசிகன். இவரது எல்லா படைப்புகளும் கட்டாயம் படிக்க வேண்டியவை. விமலாதித்த மாமல்லனின் ‘புனைவு எனும் புதிர்’ இரண்டு புத்தகங்களில் இரண்டாவது நூல் முழுக்க ஷோபா சக்தியின் சிறந்த 12 கதைகளை எடுத்து அதன் நுட்பங்களைப் பற்றி பேசுகிறது.
2022இன் சிறந்த புத்தகங்கள்
லஷ்மி சரவணகுமாரின் ‘ரூஹ்’, வாசு முருகவேலின் ‘ஆக்காண்டி’, சரவணன் சந்திரனின் ‘தானச்சோறு’, சரவணகார்த்திகேயனின் ‘ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு’, என். சொக்கனின் ‘காந்தி வழி’, மனுஷ்ய புத்திரனின் 12 கவிதைத் தொகுப்புகள் – இவை அனைத்துமே இந்த ஆண்டு வெளிவந்த புத்தகங்களில் முக்கியமானவை.
எனது மாணவர்கள் சிலரின் நூல்களும் இந்த ஆண்டு வெளியாகிறது. அவற்றில், பாண்டியராஜனின் ‘ராகுல் காந்தி’, பாபுராஜ் நெப்போலியனின் ‘பிரியாணி’, முருகு தமிழறிவனின் ‘வரலாறு முக்கியம்’, ‘நாஜிமாவின் ‘சூஃபி ஆகும் கலை’, பிரபு பாலாவின் ‘ஐஐடி கனவு’, ராஜேஷ் பச்சையப்பனின் ‘தொண்டர் குளம்’, சித்தின் ‘சுவாமி ஓம்கார்’ ஆகியவை முக்கியமானவை.
மொழிபெயர்ப்புகள்
ஆர். சிவகுமார் மொழிபெயர்த்துள்ள உலகச் சிறுகதைகள் தொகுப்பு, ஜி. குப்புசாமி மற்றும் கார்த்திகை பாண்டியன் மொழிபெயர்ப்புகள் படிக்க வேண்டியவை.
முற்றும்