“என்ன ரகசியா… திரும்பவும் அதிமுகல சேர எடப்பாடிகிட்ட ஓபிஎஸ் தூது விட்டார்னு நீ சொன்ன. ஆனா அந்த செய்தியை ஓபிஎஸ் மறுத்திருக்காரே…” என்று கிண்டலடித்தபடி ரகசியாவை வரவேற்றோம்.
“ஓபிஎஸ் எடப்பாடிகிட்ட தூதுவிட்டது உண்மை. அந்த விஷயத்தை அவர் கே.பி.முனுசாமிகிட்ட சொல்லி இருக்கார். அதுக்கு கே.பி.முனுசாமி, ‘கட்சியில இருந்து போனவங்களும், நீக்கப்பட்டவங்களும் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதினா அவங்களை சேர்த்துக்கறேன்னுதானே சொல்லி இருக்கீங்க. அதன்படி மன்னிப்பு கேட்டு ஓபிஎஸ் கடிதம் எழுதுவாரா?’ன்னு கேட்டிருக்கார். இந்த நியூஸ் ஓபிஎஸ்ஸுக்கு போக அவர் கொதிச்சுப் போயிருக்கார். உடனே இந்த நியூஸையே மறுத்திருக்கார்.”
“ஓஹோ அப்படியா? அதிமுக மூணு கொடி யூஸ் பண்றாங்கன்னு வேற கோர்ட்ல சொல்லியிருக்கிறாரே?”
”ஆமா. அண்ணா படம் போட்ட கொடி, ஜெயலலிதா போட்ட கொடி, கறுப்பு சிவப்பு வெள்ளைனு மூணு கலர் மட்டும் இருக்கிற கொடினு மூணு விதமா அதிமுக கொடி இருக்கு. இதில எந்தக் கொடியை நான் பயன்படுத்தக் கூடாதுனு கேட்டிருக்கிறார். அதிமுகவோட ஒரிஜினல் கொடி அண்ணா கை காட்டுற கொடி இதைதான் நான் பயன்படுத்துற கொடினு சொல்லியிருக்கிறார். இதுல எந்தக் கொடியை நான் பயன்படுத்தக் கூடாதுன்னு எடப்பாடி சொல்றார்னு கேட்டிருக்கிறார். பொதுச் செயலாளர் வழக்கே இன்னும் முடியாம இருக்கும்போது கொடியை பயன்படுத்தக் கூடாதுனு சொல்ல உரிமையில்லைனும் சொல்லியிருக்கிறார்”
“ரொம்ப கோபமாகிட்டார் போல..”
“ஆமாம். அந்த கோபத்தாலதான் இப்ப கட்சிக் கரை போட்ட வேட்டியையும் கட்றதில்லை. லெட்டர்பேடுலகூட அதிமுக பெயரைப் பயன்படுத்தறதில்லை. முன்னாள் முதல்வர்னு மட்டும்தான் போட்டுக்கறார்.”
“பாவம்….சசிகலாகிட்ட ஏதும் ஆலோசனை கேட்கலையா?”
“ஓபிஎஸ்சுக்கு ஆலோசனை சொல்ற நிலையில சசிகலா இல்லை. அவங்களே சொந்தக் கதை சோகக் கதைனு இருக்காங்க். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவை நிச்சயம் கைப்பற்றுவேன்னு தன்னோட ஆதரவாளர்கள்கிட்ட சொல்றாராம். கட்சியில இப்ப இருக்கற பலரும் என்னால நியமிக்கப்பட்டவங்க. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு அவங்க என்கிட்ட நிச்சயம் வருவாங்கன்னு அடிச்சு சொல்றாராம். கட்சியை கைப்பற்ற 500 கோடி ரூபாய்க்கு ஒரு செயல்திட்டத்தை சசிகலா வச்சிருக்கறதா அவர்கிட்ட மிச்சமிருக்கிற ஆதரவாளர்கள் சொல்றாங்க. ஆனா வெளில யாரும் அதை நம்ப தயாரா இல்ல”
“சட்டசபை அவசரமா கூடுதே… ஆளுநர் தமிழக அரசு மோதல் திரும்பவும் விஸ்வரூபம் எடுக்குமா?”
“ஆளுநர் திருப்பி அனுப்பின 10 மசோதாக்களை இந்த சட்டப்பேரவை கூட்டத்துல திரும்பவும் நிறைவேத்தி அவருக்கு அனுப்பப் போறாங்க. தீர்மானங்களில் எந்த மாற்றமும் இருக்காது. அப்படியே தீர்மானத்தை நிறைவேற்ற இருக்கிறோம்னு பேரவை தலைவர் அப்பாவுவே சொல்லியிருக்கிறார். அதோட சங்கரய்யாவுக்கு இரங்கல் தீர்மானம் போடும்போது, அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதை கடைசிவரை தடுத்தவர் என்று ஆளுநர் மேல புகார் தெரிவிக்கவும் திமுக திட்டம் போட்டிருக்காம். பாரதிய ஜனதாவுக்கும் இது பெரிய சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கு. அதனாலதான் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் நேர்ல போய் அஞ்சலி செலுத்தி இருக்கார். அண்ணாமலையும், முருகனும் ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியிருக்காங்க.”
“ஆனா ஆளுநர் அஞ்சலி ஏதும் செலுத்தலையே?”
“அஞ்சலி செலுத்தலைன்னாலும் சங்கரய்யா விஷயத்துல கொஞ்சம் தப்பு பண்ணிட்டோமோன்னு ஆளுநர் யோசிக்கறார்னு அவர் கூட இருக்கவங்க வெளில சொல்றாங்க. அதோட கோர்ட்டும் கண்டிக்க, கொஞ்சம் இறங்கி வந்திருக்கார்.”
“இறங்கி வந்திருக்கார்னா எப்படி?’’
“ஆளுநர் மாளிகையில் நடக்கற எதையும் நான் முடிவு பண்றதில்லை. எல்லாம் டெல்லி சொல்படிதான் இங்க நடக்குது. இந்தத் தகவலை முதல்வர்கிட்ட சொல்லுங்கன்னு கோட்டையில் இருந்து சமீபத்தில் தன்னை சந்திச்ச உயர் அதிகாரிகிட்ட ஆளுநர் சொல்லி அனுப்பினாராம்.”
”அதுக்கு முதல்வரோட ரியாக்ஷன் என்ன?”
“அவரும் ஏதும் பிடிகொடுத்து பேசலையாம். நானும் ஆளுநரை எதிர்க்கலை மத்திய அரசைத்தான் எதிர்க்கறேன். இதை நீங்களும் அவர்கிட்ட போய் சொல்லுங்கன்னு அந்த அதிகாரிகிட்ட திருப்பிச் சொல்லி அனுப்பி இருக்கார் முதல்வர்.”
“அண்ணாமலை பத்தி நியூஸ் ஏதும் இல்லையா?”
“அண்ணாமலையோட நடைப்பயணத்துல அதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் கலந்துக்கறதா திருமாவளவன் தொடர்ந்து சொல்லிட்டு வர்றார். இது உண்மையான்னு என்று விசாரிக்கச் சொல்லி இருக்கார் எடப்பாடி. அதன்படி கட்சிக்காரங்க விசாரிச்சப்ப, அதிமுக தொண்டர்கள் யாரும் கலந்துக்கலைன்னும், சில இடங்கள்ல பாமக தொண்டர்கள் கலந்துக்கறாங்கன்னும் தெரிய வந்திருக்கு. அதனால எடப்பாடி நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கார்”
“கார்த்தி சிதம்பரத்தோட பிறந்தநாளை அவரோட ஆதரவாளர்கள் பெரிய அளவில கொண்டாடி இருக்காங்களே.”
“ நாடாளுமன்றத் தேர்தல் வருதுல. தான் இருக்கிறதை காட்டிக்கணும்னு இப்படி பண்றார்னு அவர் எதிர் கோஷ்டி சொல்லுது. ஆனா, இந்தக் கொண்டாட்டம்லாம் என்னோட ஆதரவாளர்கள் அவங்களா செய்யறதுனு வாழ்த்து சொல்ல வந்தவங்ககிட்ட சொல்லியிருக்கிறார். இந்த கொண்டாட்டத்திலும் கார்த்தி ஒரு வருத்தம் இருக்கு”
“என்ன வருத்தம்?”
”கட்சியில இருக்கற பெரிய தலைவர்களும், கூட்டணி கட்சித் தலைவர்களும் தன்னை வாழ்த்தலையேன்னு வருத்தம்.”
“ப.சிதம்பரத்தை வைரமுத்து சந்திச்சு பேசியிருக்கிறாரே..ஏதாவது விசேஷம் உண்டா”
“ப.சிதம்பரத்தை வைரமுத்து சந்திக்கவில்லை. வைரமுத்துவைதான் ப.சிதம்பரம் வீட்டுக்குப் போய் சந்தித்திருக்கிறார். இலக்கியம்தான் பேசினோம் என்று வைரமுத்து சொல்லியிருக்கிறார்.”
”இலக்கியம் மட்டுமா பேசியிருப்பார்கள்?”
“தன் மகன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பினால் திமுக தரப்பில் எதிர்ப்பு சொல்லக் கூடாது என்று திமுக தலைமையிடம் சொல்ல வேண்டும் என்று வைரமுத்துவிடம் வேண்டுகோள் வைத்ததாக காங்கிரஸ்காரர்கள் கிசுகிசுக்கிறார்கள். தேவையில்லாமல் அவர் வைரமுத்துவை தேடி போயிருக்க மாட்டார் என்கிறார்கள்”