ராம் சேது (இந்தி) – அமேசான் ப்ரைம்
ராமர் பாலத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் ராம் சேது. அக்ஷய் குமார், நாசர், ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ், நுஷ்ரத் பருச்சா, சத்யதேவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள ராமர் பாலம் பகுதியைத் தோண்டி, கப்பல் செல்வதற்கான கால்வாய் அமைக்க முடிவுசெய்கிறது இந்திய அரசு. இதற்கான ஒப்பந்தம் நாசருக்கு செல்கிறது. அந்தப் பாலம் ராமரால் கட்டப்பட்டது என்பது வெறும் நம்பிக்கை என்பதை நிரூபிப்பதற்காக ஒரு தொல்லியல் குழு அமைக்கப்படுகிறது. ஆனால் அந்த குழுவில் இடம்பெற்றுள்ள அக்ஷய் குமார் ராமர் பாலத்தைப் பற்றிய சரியான உண்மைகளைக் கொண்டுவர முயல்கிறார். அவரால் அதில் வெற்றிபெற முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை. இப்படத்தை தமிழிலும் காணலாம். சமீபமாய் வெளிவந்துக் கொண்டிருக்கும் பாஜக ஆதரவு படங்கள் வரிசையில் இந்தப் படத்தையும் சேர்க்கலாம் என்று ஒரு விமர்சனமும் இருக்கிறது.
Story of things (தமிழ்) – சோனி லைவ்
எடை பார்க்கும் இயந்திரம், செல்போன், ஏசி, கார் என பல்வேறு பொருட்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஆந்தாலஜி கதைகள்தான் ஸ்டோரி ஆஃப் திங்ஸ். பரத், கவுதமி, சாந்தனு, ரித்திகா, அர்ச்சனா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
நடிகராகும் ஆசையில் பரத் சில தவறுகளைச் செய்ய அவர் வீட்டில் உள்ள எடை பார்க்கும் மிஷின், அவரது எடையை கூட்டிக் காட்டுகிறது. அவர் திருந்தியதும் சரியான எடையைக் காட்டுகிறது. சிறுவயதில் தன்னை காரில் அடைத்து கொடுமைப்படுத்திய தந்தையைக் காண அதே காரில் செல்கிறார் சாந்தனு. தந்தைக்கும் மகனுக்கும் இடையே காரில் மோதல் ஏற்பட, அதைத் தொடர்ந்து நடக்கும் விபத்தில் தந்தை இறக்கிறார். இப்படி ஒவ்வொரு பொருளையும் மையப்படுத்தி கதை நகர்கிறது. ஒரேநேரத்தில் பார்க்க முடியாவிட்டாலும், சிறுகதைகளைப் போல் அவ்வப்போது ஒவ்வொரு கதையாக ரசிக்கலாம்.
முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் (மலையாளம்) – டிஸ்னி ஹாட் ஸ்டார்
கேரளாவில் கடந்த மாதம் தியேட்டரில் ரிலீஸாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற படமான முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ், இந்த வாரம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
சொந்தக் காலில் நின்று நேர்மையான முறையில் முன்னேற நினைக்கும் வழக்கறிஞர் முகுந்தன் உன்னி. ஆனால் அவருக்கு வழக்குகள் ஏதும் கிடைக்கவில்லை. தனது சீனியர் வழக்கறிஞராலும் அவர் துரத்தப்படுகிறார். அவனுடைய அம்மாவுக்கு வீட்டில் ஏற்படும் ஒரு விபத்து அவன் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதிலிருந்து கிரிமினல்தனமாக செயல்படத் தொடங்கும் அவனுக்கு வெற்றிகள் குவிகின்றன. வாகன விபத்துக் காப்பீட்டு உலகில் இயங்கும் மாஃபியா கும்பலைப் பற்றி இப்படம் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. இப்படத்தை தமிழிலும் பார்க்கலாம்.
Diego Maradona (ஆங்கிலம்) – நெட்பிளிக்ஸ்
சச்சின், தோனி போன்ற கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டில் படமாக்கி இருக்கிறார்கள். அதேபோன்று பிரபல கால்பந்து வீரரான டியாகோ மரடோனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள டாக்குமெண்டரி படம்தான் டியாகோ மரடோனா.
2019-ம் ஆண்டு ரிலீஸான இப்படத்தை ஆசிப் கபாடியா இயக்கியுள்ளார். மரடோனாவின் வாழ்க்கையில் நடந்த பல முக்கிய சம்பவங்களை இந்த டாக்குமெண்டரி படம் எடுத்துச் சொல்கிறது.