GOLD (மலையாளம்) – அமேசான் ப்ரைம்
‘நேரம்’, ‘பிரேமம்’ ஆகிய படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரனின் புதிய படம் கோல்ட். பிருத்விராஜ், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் இப்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
மொபைல் ஷாப் உரிமையாளரான பிருத்விராஜின் வீட்டு வாசலில் ஒரு நாள் இரவு மர்மமான முறையில் ஒரு கார் நிற்கிறது. அந்த காரில் என்ன இருக்கிறது? அந்த பொருள் பிருத்விராஜின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதுதான் இப்படத்தின் கதை. ஒரு சாதாரண கதையை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். இருந்தபோதிலும் அவரது பழைய படங்களில் இருந்த துள்ளல் கொஞ்சம் மிஸ் ஆகிறது.
நயன்தாரா நடிக்கிறார் என்பதற்காக இப்படத்தை பார்க்க விரும்புபவர்களுக்கு ஒரு செய்தி. இப்படத்தின் நாயகி நயன்தாராவாக இருந்தாலும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே அவர் வருகிறார்.
டிஎஸ்பி DSP (தமிழ்) – சன் நெக்ஸ்ட்
அரசியல் செல்வாக்கு மிக்க தாதாவை போலீஸ்காரரான விஜய் சேதுபதி எப்படி பழிதீர்க்கிறார் என்பதுதான் டிஎஸ்பி படத்தின் ஒன்லைன்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமைராஜா போன்ற கலகலப்பான படங்களை இயக்கிய பொன்ராம்தான் இப்படத்தின் இயக்குநர். ஆனால் முந்தைய படங்களில் இருந்த விறுவிறுப்பும், நகைச்சுவையும் இப்படத்தில் மிஸ் ஆகிறது.
அதிரடி ஆக்ஷன் கம் போலீஸ் கதைகளை விரும்புபவர்கள் வீக் எண்டில் இப்படத்தைப் பார்க்கலாம்.
காரி (தமிழ்) : ஜீ5
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இரண்டு கிராமங்களுக்குப் பொதுவான ஒரு கோயிலை நிர்வகிக்கும் பொறுப்புக்குப் போட்டி ஏற்படுகிறது. அதற்காக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தி அதில் எந்த ஊர் வெல்கிறதோ? அந்த ஊருக்கே கோயில் நிர்வாகம் என்று முடிவாகிறது. இதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் மையக் கரு. இதில் காளையை அடக்கும் வீராராக சசிகுமார் நடித்திருக்கிறார்.
படத்தின் கடைசி 20 நிமிடங்களில் வரும் ஜல்லிக்கட்டு காட்சிகள் மெய்சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன, வாடிவாசலுக்கு சென்று திரும்பிய ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. கிராமத்து கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு ஏற்ற படம் ‘காரி’.
Faadu (வெப் சீரிஸ்) – சோனி லைவ்
நகரத்தில் ஒடுக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், தன் குடும்பத்தை முன்னேற்றுவதற்காக எடுக்கும் முயற்சிகளை அடிப்படையாக வைத்து Faadu வெப் சீரிஸின் கதை பின்னப்பட்டுள்ளது.
ஏழைக் குடும்பத்தின் போராட்டங்களைச் சொல்லும் இந்த வெப் சீரிஸ் 11 அத்தியாங்களைக் கொண்ட ஒரு நெடுங்கதை.
The Forest – நெட்ஃப்ளிக்ஸ்
ஃப்ரான்ஸ் கிராமம் ஒன்றில் 16 வயது இளம் பெண் மாயா காணாமல் போகிறாள். அவள் வசிக்கும் இடத்துக்கு அருகே இருக்கும் காட்டில்தான் தொலைந்து போயிருக்கிறாள் என்று கண்டுபிடிக்கிறார்கள். அவளைத் தேடுகிறார்கள். முக்கியமாய் அவளது ஆசிரியை தேடுவதில் தீவிரம் காட்டுகிறார். ஆசிரியையின் இளமைப் பருவத்தில் அந்தக் காட்டில் மர்மமான அனுபவங்கள் உண்டு.