தென் மாவட்டங்களைச் சார்ந்த 100 தேவர் அமைப்புகள் இணைந்து சசிகலாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
’அ.தி.மு.க.வை மீட்டு எடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும். இதற்கு பொதுச்செயலாளர் (சசிகலா), ஒருங்கிணைப்பாளர் (ஓ.பன்னீர்செல்வம்) இருவரும் ஒன்று சேர வேண்டும். இருவரும் கைகோர்த்து கட்சியை கைப்பற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான நீங்களும், உங்கள் விசுவாசியுமான ஓ.பன்னீர் செல்வமும் கைகோர்க்க வேண்டும். அதுதான் கழகத்தில் உள்ள 1½ கோடி தொண்டர்களின் விருப்பமாகும். நீங்கள் இருவரும் கைகோர்த்தால் அது பலன் உள்ளதாக இருக்கும். உங்கள் ஒற்றுமை கட்சிக்கும், இனத்துக்கும் இந்த காலக்கட்டத்தில் அவசியமான ஒன்றாகும். கட்சியின் நலனுக்கு இது கை கொடுக்கும். பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ஆசி பெற்று பயணத்தை தொடங்குங்கள்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அதிமுக சாதி அடிப்படையில் பிரிந்து வருகிறது என்று சமீபமாய் எழுந்து வரும் விமர்சனங்களை உறுதி செய்யும் வகையில் இந்த கடிதம் இருக்கிறது.
நேற்று நடந்த இன்னொரு சம்பவத்தையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. நேற்று தேனி மாவட்டத்துக்கு வந்திருந்த டிடிவி தினகரனை ஒபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளரான சையத் கான் வரவேற்றிருக்கிறார். சந்தித்துப் பேசியிருக்கிறார்.
சசிகலா குடும்பத்தை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியிருந்தாலும் சமீபகாலமாக சசிகலா ஆதரவு நிலையையே ஓ.பன்னீர்செல்வம் எடுத்து வந்திருக்கிறார்.
அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, எடப்பாடி பழனிசாமியை தன்னால் தனித்து எதிர்க்க முடியாது என்று அவரும் அவரது ஆதரவாளர்களும் கருதுவதால். இரண்டு, சசிகலாவுடன் இணைவது முக்குலத்தோர் சமூகத்தை ஒன்றிணைக்க உதவும் என்று நம்புவதாலும்.
இதற்கு முன் சசிகலாவுடன் அவர் இணைவதை தடுத்து நிறுத்தியது ஒரே ஒரு விஷயம்தான். சசிகலாவுடன் இணைந்தால் நிச்சயம் இரண்டாமிடம்தான் என்பது அவருக்குத் தெரியும். முதலிடம் தர மாட்டார்கள் என்பது அவருக்குப் புரியும். ஜெயலலிதா காலத்தில் இருந்தது போலவே நம்பிக்கைக்குரிய விசுவாசியாக இரண்டாமிடத்திலேயே தொடர வேண்டும். அதனாலேயே விலகி நின்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவருக்கு கிடைத்த முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து அதிமுகவைவிட்டே அவர் விலக்கப்பட்டிருக்கிறார்.
இப்போது ஓபிஎஸ்க்கு அதிக வழிகள் கிடையாது. சென்னை வந்திருந்த பிரதமரும் நம்பிக்கைக்குரிய வார்த்தைகள் சொன்னதாக தெரியவில்லை. இந்தப் பின்னணியில் தேவர் அமைப்புகளின் கடிதம் வந்திருக்கிறது.
ஓபிஎஸ் – சசிகலா இணைப்புக்கான தொடக்கப் புள்ளியாக இந்த கடிதம் அமைவதற்கு வாய்ப்பிருக்கிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்து அதிமுகவில் சாதிய அழுத்தங்கள் இருந்த போதிலும் அப்போது அதிமுக அனைத்து மக்களுக்கான கட்சியாகதான் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நிலை மாறியிருக்கிறது.
வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் அதிக இடங்களில் வென்று எடப்பாடி பழனிசாமியும் எஸ்.பி.வேலுமணியும் தங்கள் ஆதிக்கத்தை அதிமுகவில் நிலை நாட்டியிருக்கிறார்கள்.
தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சாதித்திருக்க வேண்டிய ஓபிஎஸ் அணி தேர்தலில் சறுக்கியிருக்கிறது. காரணம் ஒரே சமூகத்தைச் சார்ந்த ஓபிஎஸ்ஸும் சசிகலாவும் பிரிந்து இருந்தது என்று கூறப்படுகிறது.
முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்த ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து நீக்கியதை அந்த சமூக அமைப்புகள் சாதரணமாய் எடுத்துக் கொள்ளவில்லை. தங்கள் சமூகத்துக்கு ஏற்பட்ட அவமானமாகவே அவர்கள் கருதுகிறார்கள் என்பது அந்தக் கடிதத்திலிருந்து தெரிகிறது.
ஓபிஎஸ்ஸும் சசிகலாவும் இணைந்தால் அதிமுகவை மீட்க முடியுமா? அதிமுகவை வெற்றிப் பெற வைத்து விட முடியுமா?
கவுண்டர் மற்றும் வன்னியர் சமூகத்தினர் ஒரு பக்கமும் முக்குலத்தோர் சமூகத்தினர் மறு பக்கமாகவும் நின்றால் அது எதிரணிக்கு பலமான வாய்ப்பாகவே அமையும். இப்போது எதிரணியாக இருக்கிற திமுகவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க பாஜக அனுமதிக்குமா?
இப்படி இந்தக் கேள்விகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு வியூகம் தென்படுகிறது.
சசிகலாவையும் ஓபிஎஸ்ஸையும் முதலில் சேர்த்து வைப்பது. பிறகு அவர்களுடன் எடப்பாடி பழனிசாமியை சேர்ப்பது. இது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முக்கிய வியூகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. முக்குலத்தோர் அமைப்புகளின் கடிதத்துக்குப் பின்னணியில் பாஜக இருக்கலாம். பல மாநிலங்களில் பாஜக வென்றதற்கு அடிப்படை அங்கிருந்த சாதிய கணக்குகளை பாஜக திறமையாக கையாண்டதுதான். தமிழ் நாட்டிலும் அதை முயற்சிக்கலாம்.