சர்வதேச அளவில் இன்று (ஆகஸ்ட் 25) முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை உலக தண்ணீர் வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்த சூழலில் நமக்கு அதிர்ச்சிதரும் செய்தி ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாம் குடிப்பதற்காக பயன்படுத்தும் தண்ணீரில் 80 சதவீத நீர் விஷத்தன்மை வாய்ந்தது என்பதே அந்த செய்தி.
மாநிலங்களவில் சில நாட்களுக்கு முன்பு இந்தியர்களின் குடிநீர் வசதி தொடர்பாக எதிர்கட்சி உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் பதில் அளிக்கும்போது வெளியிட்ட தரவில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தரவில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய விஷயங்கள்…
25 மாநிலங்களில் உள்ள 209 மாவட்டங்களில் கிடைக்கும் நிலத்தடி நீரில் ஆர்சானிக் (arsenic) கலந்துள்ளது. உதாரணமாக ஒரு லிட்டர் தண்ணீரில் 0.01 மில்லிகிராம் ஆர்சனிக் கலந்துள்ளது.
29 மாநிலங்களில் உள்ள 491 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் இரும்பு தாதுக்கள் கலந்துள்ளன. ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லிகிராம் என்ற அளவில் இந்த இரும்பு தாதுக்கள் கலந்துள்ளன.
11 மாநிலங்களைச் சேர்ந்த 29 மாவட்டங்களில் நிலத்தடி நீருடன் காட்மியம் (Cadmium) கலந்துள்ளது. ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.003 மில்லிகிராம் என்ற அளவில் இது கலந்திருக்கிறது.
16 மாநிலங்களைச் சேர்ந்த 62 மாவட்டங்களில் நிலத்தடி நீருடன் குரோமியம் (Chromium) கலந்துள்ளது, ஒரு லிட்டர் தண்ணீரில் 0.05 மில்லிகிராம் காட்மியம் என்ற அளவில் அது கலந்துள்ளது.
18 மாவட்டங்களில் உள்ள 152 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் யுரேனியம் கலந்துள்ளது. ஒரு லிட்டர் தண்ணீரில் 0.03 மில்லிகிராம் என்ற அளவில் இது கலந்துள்ளது.
இதேபோல் இந்தியாவில் மக்கள் அதிகமாக வாழும் 671 இடங்களில் புளூரைடும், 814 பகுதிகளில் ஆர்சானிக்கும், 14,079 பகுதிகளில் இரும்பும், 517 பகுதிகளில் நைட்ரேட்டும், 111 பகுதிகளில் மெட்டலும் கலந்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படி குறிப்பாக எந்தெந்த மாநிலத்தில் உள்ள எந்தெந்த மாவட்டங்களில் குடிநீருடன் ரசாயனம் கலந்துள்ளது என்று குறிப்பிட்டுச் சொல்லாமல் பொத்தம் பொதுவாக சொல்லியிருக்கிறது மத்திய அரசு. இதில் நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் உள்ள மக்களே விஷத்தன்மை உள்ள நீரை அதிகம் குடிப்பதாக மத்திய ஜல்சக்தி துறை தெரிவித்துள்ளது. அடிபம்புகள், கிணறு ஆகியவற்றைவிட குளங்களில் இருந்து நீரை எடுத்துக் குடிக்கும் மக்கள் அதிக பாதிப்படைவதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது.
நாம் உண்ணும் உணவுமுதல் எல்லா விஷயங்களுமே விஷத்தன்மை கொண்டதாக மாறிவிட்டது. இந்த சூழலில் தண்ணீரில் ரசாயனம் கலந்தால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். இப்படி ரசாயனங்களை அதிகம் கொண்ட நீரைக் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை மருத்துவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இதன்படி ஆர்சானிக் கல்ந்துள்ள நீரைக் குடித்தால் தோல் நோய்களும் புற்று நோயும் வர வாய்ப்புள்ளது.
இரும்பு தாதுக்கள் அதிகம் உள்ள நீரைக் குடிப்பதால் நரம்புத் தளர்ச்சி நோயும், அல்சீமர்ஸ் என்ற ஞாபகமறதி நோயும் ஏற்படும்.
காரீயம் அதிகம் உள்ள நீரைக் குடித்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.
காட்மியம் அதிகம் உள்ள நீரைக் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.
குரோமியம் அதிகம் உள்ள நீரைக் குடித்தால் சிறுகுடல் பாதிப்படைவதுடன் புற்றுநோய்க் கட்டிகளும் உருவாகும்.
யுரேனியம் அதிகம் உள்ள நீரைக் குடித்தால் புற்றுநோய் வருவதுடன் சிறுநீரகமும் பாதிக்கப்படும்.
ஒருவர் நாளொன்றுக்கு 2 லிட்டர் தண்ணீரையாவது குடிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அப்படி பார்த்தால் நம்மில் பலரும் தினந்தோறும் விஷம்கலந்த 2 லிட்டர் தண்ணீரைத்தான் குடித்துவருகிறோம். இதனால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க குழாய்மூலம் மக்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் மாநில அரசுகளும் இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.