ஆண்டுதோறும் அக்டோபர் 3-வது வாரத்தில் தமிழகத்துக்குள் நுழையும் விருந்தாளி வடகிழக்கு பருவமழை. பொதுவாக வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் நமக்குத் தேவையான பரிசுப் பொருட்களை கொண்டுவருவதுடன் நம்மையும் டிஸ்டர்ப் செய்யாமல் இருந்தால், நாம் சந்தோஷமாக இருப்போம் ஆனால் அதே விருந்தாளி குறிப்பிட்ட நாளுக்கு மேல் தங்கினாலோ, நமக்கு தொல்லை தரத் தொடங்கினாலோ நமக்கு அவரை பிடிக்காமல் போய்விடும்,
வடகிழக்கு பருவமழையும் அப்படித்தான். ஒருசில ஆண்டுகளில் அளவோடு பெய்து நமக்கு பிடித்தவராக இருக்கும். ஒருசில ஆண்டுகளில் அளவுக்கு மீறி பெய்து தொந்தரவு செய்யும். அப்படிப்பட்ட விருந்தாளியான வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டில் வழக்கத்தைவிட தாமதமாக அக்டோபர் 29-ம் தேதி வரப்போவதாக வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கிறது. இந்த ஆண்டில் வரப்போகும் மழை நல்ல விருந்தாளியா… அல்லது கூட இருந்தே குழி பறிக்கும் கெட்ட விருந்தாளியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,.
இந்த ஆண்டில் வடகிழக்குப் பருவமழையைப் பற்றிக் கூறும் வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநரான செந்தாமரைக் கண்ணன், “தென்மேற்கு பருவமழை கடந்த வாரத்திலேயே முழுமையாக விலகிவிட்டது. இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை 28 அல்லது 29-ம் தேதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதன்படி அக்டோபர் 29-ம் தேதி செங்கல்பட்டு விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 20 மாவட்டங்களிலும், அக்டோபர் 29-ம் தேதி 27 மாவட்டங்களிலும் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
பொதுவாக மழை பெய்யப்போகிறது என்றாலே எல்லோரும் மகிழ்ச்சியடையத்தான் செய்வார்கள். ஆனால் தமிழக மக்கள் மனதில் அந்த மகிழ்ச்சியோடு சேர்த்து சிறிய அளவில் கிலி ஏற்படுவது வழக்கம். வருகிற மழை சும்மா வராமல், அழையா விருந்தாளியாக கூடவே சிலபல புயல்களையும் அழைத்து வருவதே இதற்கு காரணம்.
அதிலும் சென்னைவாசிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம்… மழை ஒரு நாள் நின்று பெய்தாலே குளமாகிவிடும் சாலைகளும், குண்டும் குழியுமாக மாறிப்போகும் தெருக்களும் இதற்கு காரணம்.
சாதாரண காலத்திலேயே இப்படி என்றால் பல இடங்களில் மழைநீர் கால்வாய்க்காக சாலையில் பள்ளங்களைத் தோண்டியிருப்பதால் சென்னைவாசிகளின் கிலி அதிகமாகி உள்ளது.
சென்னை நகரைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் சராசரியாக 867.4 மில்லிமீட்டர் மாழை பெய்கிறது. இது ஆண்டொன்றில் சென்னையில் பெய்யும் சராசரி மழையில் 48 சதவீதமாகும்.
இன்று காலையில் சென்னையில் பெய்த ஒருசில மில்லிமீட்டர் மழைக்கே சாலையில் போக்குவரத்து நெரிசலும், பாதிப்பும் ஏற்பட்டுள்ள நிலையில் 800 மில்லிமீட்டருக்கு மேல் மழை பெய்தால் அதைச் சமாளிக்க சென்னை தயாராக இருக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
ஆனால் மழையை சமாளிக்க தயாராகத்தான் இருக்கிறோம் என்கிறது தமிழக அரசு.
மாநில அளவில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கட்டுப்பாஅட்டின் கீழ் சென்னை சேப்பாக்கத்தில் இயங்கிவரும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1070 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி சேவை மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிபெற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. 94458 69848 வாட்ஸ் அப் எண் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1,51,050 முதல் நிலை மீட்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 14 கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 65,000 முதல் நிலை மீட்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பேரிடர் தாக்கத்திற்கு உள்ளாகும் 16 மாவட்டங்களில், ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் 5500 தன்னார்வர்களுக்கு தேடல், மீட்பு தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் 11 குழுக்களும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் மீட்புப் பணிகளுக்காக 90 ஹெலிக்காப்டர் இறங்குதளங்கள் தயார் நிலையில் உள்ளன. பேரிடர் காலங்களில் கடலோர மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகும் மக்களுக்காக 1 லட்சத்து 13 ஆயிரம் நபர்களை தங்க வைக்கக்கூடிய 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதுமட்டுமின்றி, மற்ற மாவட்டங்களில் 4,973 பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் மற்றும் கல்யாண மண்டபங்கள் நிவாரண முகாம்களாக செயல்பட கண்டறியப்பட்டுள்ளன
மீட்பு நடவடிக்கைகளுக்காக, 2,897 JCB இயந்திரங்களும், 2,115 ஜெனரேட்டர்களும், 483 நீர் இறைப்பான்களும், 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்களும், 5,900 கட்டுமரங்களும், 48,100 மோட்டார் படகுகளும் மற்றும் 5,800 இயந்திர படகுகளும் தயார் நிலையில் உள்ளன.
மழைக்காலத்தில் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது சென்னை மக்கள்தான். அதனால் அவர்களுக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் கே.என்.நேரு, “சென்னையில் பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. 4 இடங்களில் ரெடிமேட் கான்கிரீட் முறையில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் ரெடிமேட் கான்கிரீட் முறையில் அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சிக்கல் உள்ளது. மழை பெய்தால் எந்த அளவிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.