No menu items!

நிர்மலா சீதாராமன் Vs அண்ணாமலை – தவிக்கும் பாஜக – மிஸ் ரகசியா

நிர்மலா சீதாராமன் Vs அண்ணாமலை – தவிக்கும் பாஜக – மிஸ் ரகசியா

”என்னாச்சு..நிர்மலா சீதாராமன் அடிக்கடி தமிழ்நாட்டு பக்கம் வராங்களே?” அலுவலகத்துக்குள் நுழைந்த ரகசியாவிடம் கேட்டோம்.

“அதுக்குப் பின்னாடி பெரிய கதை இருக்கிறது”

“கதையா?”

“கதையா நிஜமானு தெரியாது. நான் கேள்விப்பட்டதை சொல்றேன். அண்ணாமலை மேல பாஜக மேலிடத்துக்கு சந்தேகம் வந்திருக்கு. தன்னை மட்டும் முன்னிலைப்படுத்துறாரேனு”

“எப்பவுமே அப்படிதானே பண்ணுவார்?”

“ஆமா. ஆனா இப்ப சந்தேகம் கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு. அதுக்கு காரணம் ஒரு இண்டலிஜென்ஸ் ரிப்போர்ட். அந்த ரிப்போர்ட்ல அண்ணாமலை தனிக் கட்சி ஆரம்பிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்குனு சொல்லியிருக்காங்க”

“தனிக் கட்சியா?”

“ஆமாம். இந்த பயணம் முழுவதும் தன்னைதான் முன்னிலைப்படுத்துறார். எதிர்கால தமிழ்நாட்டு அரசியல்ல தான் ஒரு சக்தியா வரணும்னு நினைக்கிறார். அதுக்கான முயற்சிகள்ல ஈடுபட்டுக்கிட்டு இருக்கிறார்னு அந்த ரிப்போர்ட்ல இருக்கு”

“அப்படியா?”

“ஆமாம். தமிழ்நாட்டு பாஜகவில் விசுவாசிகள் எல்லோரும் ஓரங்கட்டுப்பட்டுட்டாங்க. அண்ணாமலையின் விசுவாசிகள் மட்டுமே முன்னுக்கு நிக்கிறாங்க. அது மட்டுமில்லாம தமிழ்நாட்டு பாஜகவின் ஐடி விங் அண்ணாமலையின் புகழை மட்டும் பாடுது. மத்த பாஜக தலைவர்கள் பத்தின நியூஸ் எதுவுமே வெளில வராம இருக்குனு சொல்லியிருக்காங்க”

“இது இண்டலிஜென்ஸ் ரிப்போர்ட் மாதிரி தெரியலையே..அண்ணாமலை எதிர் கோஷ்டியின் ரிப்போர்ட் மாதிரில இருக்கு”

“நீங்க அப்படி நினைக்கிறீங்க. ஆனா பாஜக தலைமை அப்படி நினைக்கல. அண்ணாமலைக்கு பதிலா ஒருத்தரை உருவாக்கணும், எல்லோர் பேச்சையும் கேக்குற மாதிரி ஒரு ஆள் வேணும்னுதான் நிர்மலா சீதாராமனை தமிழ்நாட்டுக்கு அனுப்பியிருக்காங்க. அண்ணாமலை தலைவரா இருந்தாலும் அவருக்கு மேல சூப்பர் தலைவரா நிர்மலா இருக்கிறாங்க”

“நிர்மலா சீதாராமன் வந்தது தமிழ்நாட்டு பாஜககாரங்களுக்கு சந்தோஷமா? முக்கியமா அண்ணாமலை எதிர்ப்பாளர்களுக்கு?”

“இல்லை. இவங்க ரெண்டு மீட்டிங் பேசுனா நமக்கு வர்ற ஓட்டும் போயிடும்னு பேசிக்கிறாங்க. குமரியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருத்த நிர்மலா சீதாராமன் பேச்சுக்கள் பத்தி மேலிடத்துக்கு சொல்லியிருக்கிறார்”

“அங்கருந்து என்ன பதில் வந்ததாம்?”

“தமிழ்நாட்டு மக்களுக்கு ஸ்டராங்கான பெண்கள் பிடிக்கும். இந்திராகாந்தி, ஜெயலலிதா மாதிரியான பெண்களை தமிழ்நாட்டு மக்கள் விரும்புவாங்கனு பதில் சொல்லியிருக்காங்க”

“அதுக்கு நம்ம குமரி தலைவர் என்ன சொன்னாராம்?”

“அவங்க மக்கள்கிட்ட எப்படி பேசுவாங்கனு கேட்டுட்டு அவங்களை டெல்லிலருந்து வரச் சொல்லுங்கனு சொல்லியிருக்கிறார்” என்று சிரித்தாள் ரகசியா.

”சரி, தீடீர்னு பிரதமரை உதயநிதி சந்திச்சிருக்கிறாரே?”

“ஆமா, கேலோ விளையாட்டுப் போட்டிகளுக்காக சந்திச்சார். ஆனா உதயநிதி – பிரதமர் சந்திப்பால கூட்டணி கட்சிகளுக்கு சந்தேகம் வந்திருக்காம்”

“அவங்களுக்கு என்ன சந்தேகம்?”

“தேர்தலுக்கு முன்ன இந்தியா கூட்டணியில இருந்துட்டு, தேர்தல் முடிஞ்சதும் பாஜக கூட்டணியில திமுக சேர்ந்துடுமோங்கிறது அவங்களோட சந்தேகம். முதல்வரோ, உதயநிதியோ பிரதமரை சந்திக்க நேரம் கேட்டதும் அவர் அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கறதுதான் இந்த சந்தேகத்துக்கு முக்கிய காரணம். பிரதமர் மீதான எதிர்ப்பை திமுக குறைச்சிருக்கறதும் அவங்க சந்தேகத்துக்கான காரணமா இருக்கு.”

“அப்படி என்ன எதிர்ப்பை குறைச்சுட்டாங்க?

“மோடி எப்ப தமிழ்நாட்டுக்கு வந்தாலும் திமுகவோட ஐடி விங்கும், திமுக ஆதரவாளர்களும், ‘கோ பேக் மோடி’ங்கிற வாசகத்தை ட்ரெண்டிங் ஆக்குவாங்க. ஆனா இந்த முறை அதையெல்லாம் தாண்டி பிரதமர் திருச்சி வந்தப்ப ‘வணக்கம் மோடி’ங்கிற வாசகம்தான் ட்ரெண்டிங் ஆச்சு. அதனால திமுக மோடி எதிர்ப்பை குறைச்சிடுச்சோன்னு கூட்டணி கட்சிகள் சந்தேகப்படுது.”

“அவங்க சந்தேகப்படறது இருக்கட்டும். அப்படி நடக்கும்னு நீ சந்தேகப்படறியா?”

“எனக்கு அந்த சந்தேகமெல்லாம் கிடையாது. இதுவரைக்கும் பாஜகவை நெருங்கற மூட்ல திமுக இல்லை. ‘வணக்கம் மோடி’ங்கிற வாசகம் ட்ரெண்டிங் ஆனதுகூட முதல்வருக்கு பிடிக்கலை. அவர் திமுக ஐடி விங் பொறுப்பாளர் டி.ஆர்.பி.ராஜாவைக் கூப்டு ஐடி விங்கில் என்ன நடக்குதுன்னு கேட்டிருக்கார். நடாளுமன்றத் தேர்தல் வரும்போது நாம உஷாரா இருக்க வேணாமா? பாஜக ஒரு விஷயத்தை ட்ரெண்டிங் பண்ணினா, நாம அதுக்கு எதிரா இன்னொரு விஷயத்தை ட்ரெண்டிங் செய்ய வேணாமான்னு கேட்டிருக்கார். ஐடி விங்ல இருக்கறவங்ககூட நான் ஒரு தடவை பேசிடறேன்னும் சொல்லி இருக்கார்.”

“திருச்சியில அவர் பேசும்போது மோடி… மோடின்னு பாஜககாரங்க கத்தி இருக்காங்களே?”

“இதுவும் ஸ்டாலினுக்கு வருத்தத்தை கொடுத்திருக்கு. அவங்க மோடி மோடின்னு கத்தும்போது நம்ம கட்சிக்காரங்க பதிலுக்கு கோஷம் போட்டிருக்க வேணாமான்னு அவர் கே.என்.நேருகிட்ட கோவிச்சிருக்கார்.”

“இந்தியா கூட்டணியில தொகுதிப் பங்கீடு சிக்கல்கள் ஆரம்பிச்சுடுச்சே… காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்கத்துல 2 சீட்தான் தரமுடியும்னு மம்தா சொல்லி இருக்காங்களே?”

“அங்க மட்டும் இல்லை தமிழ்நாட்லயும் இந்த சிக்கல்கள் இருக்கு. தமிழ்நாட்ல காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிதான் கொடுக்க முடியும்னு பேச்சுவார்த்தையை ஆரம்பிச்சு. பிறகு அவங்க ரொம்ப பிடிவாதமா இருந்தா 9 சீட் கொடுக்கலாம்கிறதுதான் திமுகவோட பிளான். அதுலயும் திருச்சி போன்ற சில தொகுதிகள்ல இந்த முறை திமுக கிட்ட எதிர்பார்க்காதீங்கன்னு ப.சிதம்பரம்கிட்ட அமைச்சர் நேரு நேரடியாவே சொல்லிட்டாராம்.”

“காங்கிரஸ் கட்சிக்கே இந்த நிலைன்னா மத்த கட்சிகளோட நிலைமை?”

“யார் என்ன சொன்னாலும் இந்த முறை 21 தொகுதிகள்ல நிக்கறதுன்னு திமுக முடிவு செஞ்சிருக்கு. மற்ற கூட்டணி கட்சிகளுக்கு 9 இடம்தானாம். கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்த, வேணும்னா அவங்க சொந்த சின்னத்துலயே நிக்கலாம்னு கூடுதல் சலுகை தர திமுக திட்டமிட்டு இருக்கு.”

“காங்கிரஸ் கட்சியோட திட்டம் என்ன?”

“அவங்க திட்டமெல்லாம் ராகுல் காந்தியை நம்பித்தான் இருக்கு. ராகுல் காந்தி ஒரு பக்கம் நடைப்பயண ஏற்பாடுகள்ல பிஸியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் நாடாளுமன்ற தேர்தல் வியூக குழுக்களின் கூட்டங்கள்லயும் கலந்துகிட்டு வர்றார். அந்த கூட்டங்களில் அவர் பேசும்போது ‘இந்த முறை 50 சதவீதம் வேட்பாளர்கள் இளைஞர்களாகத்தான் இருப்பார்கள். இரண்டு முறை மூன்று முறை போட்டியிட்டவர்களுக்கு இந்த முறை நிச்சயம் வாய்ப்பு இருக்காது. யார் எனக்கு அழுத்தம் தந்தாலும் அது நிச்சயம் இது நடக்காது’ன்னு உறுதியா சொல்லிட்டு வர்றாராம்.”

”கேப்டன் விஜயகாந்த்தை புகழ்ந்து பிரதமர் மோடி ஒரு பெரிய கட்டுரையே எழுதி இருக்காரே?”

“தேமுதிக கூட்டணி மற்றும் அவ்ரோட ரசிகர்கள் வாக்குகளை மனசுல வச்சுத்தான் இந்த கட்டுரை பிரதமர் வெலியிட்டிருக்கார். இந்த கட்டுரையால தேமுதிகவுக்கு தர்ம சங்கடம். ஒருபக்கம் கேப்டனை புகழ்ந்து பிரதமர் கட்டுரை வெளியிட்டார்னா, இன்னொரு பக்கம் கேப்டன் உடலை அரசு மரியாதையோட அடக்கம் செய்ய முதல்வர் ஏற்பாடு செஞ்சிருக்கார். இதனால ரெண்டு தரப்பையும் விட்டுக் கொடுக்க முடியாத மனநிலையில அவங்க இருக்காங்க.”

”அப்போ எந்தக் கட்சியோடுதான் கூட்டணி?”

“திமுக கூட்டணில தேமுதிகவுக்கு ஒரு சீட்ன்றது உறுதியாயிருச்சுனு சொல்றாங்க. 2019 தேர்தல்ல பாரிவேந்தருக்கு கொடுத்த இடத்தை இந்த முறை பிரேமலதாவுக்கு கொடுக்கப் போறாங்களாம்”
”பெரம்பலூர் தொகுதிலயா?”

“இருக்கலாம். ஆனா பாரிவேந்தர் மாதிரி இவங்களும் பாதில கழட்டிக்கிட்டு போய்டக் கூடாது” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...