No menu items!

அடம் பிடித்த ஆளுநர்: டாக்டர் ஆகாமலே மறைந்த மக்கள் தோழர்!

அடம் பிடித்த ஆளுநர்: டாக்டர் ஆகாமலே மறைந்த மக்கள் தோழர்!

சுதந்திர போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான என். சங்கரய்யா (வயது 102) உடல் நலக் குறைவின் காரணமாக இன்று (நவம்பர் 15, 2023) காலை 9.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக போராடிய சங்கரய்யாவின் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க அரசு எடுத்த முயற்சிக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அந்த முயற்சி நிறைவேறாமலே சங்கரய்யா காலமாகியுள்ளது இடதுசாரிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

என். சங்கரய்யா ஆன பிரதாப சந்திரன்

பொதுவாக இடது சாரி இயக்கத்தவர்கள் வாழ்க்கை போராட்டங்களால் நிரம்பியிருக்கும். ஆனால், சங்கரய்யா போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர். பள்ளிப் பருவத்தில் தொடங்கிய சங்கரய்யாவின் போராட்டம் மக்கள் உரிமைகளுக்காகவும் சமூகக் கேடுகளுக்கு எதிராகவும் நூறு வயதைக் கடந்தும் தொடர்ந்தது. இந்த போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய போலீஸாரை எதிர்த்து துணிச்சலுடன் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்றவர் சங்கரய்யா. இதனாலேயே  ‘உழைக்கும் மக்களின் தோழர்’ எனப் போற்றப்பட்டார். எட்டு வருடங்கள் சிறைத் தண்டனை, ஐந்து வருடங்கள் தலைமறைவு வாழ்க்கை என கழிந்த சங்கரய்யாவின் போராட்ட வாழ்க்கை இன்றைய தலைமுறைக்கு நம்ப முடியாததாக இருக்கும்.

என். சங்கரய்யா கோவில்பட்டியில் 1922ஆம் ஆண்டு பிறந்தவர். தூத்துக்குடியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி, அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பயின்றார். இவரது தாத்தா பெயர் தான் சங்கரய்யா. இவருக்கு வீட்டில் விட்ட பெயர் பிரதாப சந்திரன் என்பதுதான். ஆனால், ஓரளவுக்கு விவரம் தெரிய ஆரம்பித்தவுடன், தாத்தா பெயர்தான் தனக்கும் வேண்டும் என்று வீட்டில் அடம்பிடித்து, பள்ளிக்கு போக மாட்டேன் என்று உண்ணாவிரதம் இருந்து, இறுதியில் அதில் வெற்றியும் பெற்று, சங்கரய்யா ஆனார்.

பள்ளிப் பருவத்திலேயே பாரதியார் கவிதைகள் சங்கரய்யாவுக்கு பெரும் உந்துசக்தியாக விளங்கின. புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களையும் ஆழ்ந்து கற்றார்.

பள்ளிக் கல்வி முடிந்த பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை வரலாறு படித்தார். வரலாறு படித்தாலும் தமிழ் மீதான ஆர்வம் காரணமாக அமெரிக்கன் கல்லூரி பரிமேலழகர் தமிழ்க் கழகத்தின் இணைச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தான் செயலாளாராக இருந்த காலகட்டத்தில் அம்மன்றத்துக்கு ராஜாஜி, சத்தியமூர்த்தி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட பல தலைவர்களை அழைத்துவந்து மாணவர்களிடையே பேச வைத்தார். 1939-ல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மதுரை வந்தபோது மாணவர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் நேதாஜியை உரையாட வைத்தார்.

முற்றுப் பெறாமல் முடிந்த வழக்கறிஞர் கனவு

1938-ல் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் ‘சென்னை மாணவர் சங்கம்’ என அமைத்து சுதந்திரப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர். இதேபோல மதுரையிலும் மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டு அதன் செயலராக சங்கரய்யா இருந்தார்.

ஓரளவுக்கு வசதியான குடும்பத்தில் பிறந்தாலும், தனது போராட்ட குணத்தால், வலிய வந்து வறுமையை ஏற்றுக்கொண்டவர் சங்கரய்யா. மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியிலும் சேர்ந்த சங்கரய்யா கட்சி நடத்திய பல போராட்டங்களிலும் பங்கேற்றார். அக்காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவற்றில் சங்கரய்யா கலந்துகொண்டார். மேலும், ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டத் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி மாணவர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார். அப்போது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதானார். இதனால், சங்கரய்யாவின் கல்லூரிப் படிப்பு முடிவுக்கு வந்தது. மகன் வழக்கறிஞராக வேண்டும் என்ற இவரது தந்தையின் ஆசை நிராசையானது.

சங்கரய்யா சிறையில் இருந்த நாட்களில் காமராஜர், ப. ஜீவானந்தம், எம்.ஆர். வெங்கட்ராமன் உள்ளிட்ட பல தலைவர்களைச் சந்தித்தார். அவர்கள் சங்கரய்யா மீது செலுத்திய பாதிப்பால் விடுதலையாகி வெளியே வந்த பிறகு பொது வாழ்க்கைக்குத் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதன் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக சங்கரய்யா வளர்ந்திருந்தார்.

கட்சி சார்பாக, தொழிலாளர் நலனுக்காக ஏராளமான பொதுக்கூட்டங்கள், மாநாடுகளை நடத்தியதோடு களப்பணிகளிலும் துடிப்புடன் ஈடுபட்டவர் சங்கரய்யா. களப்பணியுடன் பல்வேறு இதழ்களில் தனது கருத்துகளைக் கட்டுரைகளாகவும் எழுதிவந்தார். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கப்படுவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார். ஒன்றிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் ‘ஜனசக்தி’ இதழில் மூன்று ஆண்டுகள் ஆசிரியராக சங்கரய்யா பணியாற்றியுள்ளார்.

ரேஷன் கடைகள் உருவாக காரணமான உரை

1967, 1977, 1980 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கரய்யா, மொத்தம் 11 ஆண்டுகள் உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார். இந்த 11 ஆண்டுகளில் சட்டப் பேரவையில் பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான உரைகளை ஆற்றியுள்ளார். தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் ஆரம்பிக்க சங்கரய்யாவின் சட்டமன்ற உரையே அடிப்படையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி இருவருமே சங்கரய்யாவுடன் மிக நெருக்கமான நட்பு கொண்டிருந்ததுடன் அவர் மீது பெரும் மதிப்பும் கொண்டிருந்தனர். அதுவும் கருணாநிதி, சட்டமன்றத்தில் சங்கரய்யாவின் ஆழமும் அக்கறையும் கொண்ட உரைகளை தவற விடமாட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சியில் பல பொறுப்புகளை வகித்து, அவற்றில் திறம்பட செயலாற்றி ஓய்வுபெற்ற பின்னரும்கூட, மூப்பின் காரணமாக உடல் தளர்ந்த நிலையிலும் கட்சி அலுவலகத்துக்கு வருவது, ஆலோசனைகள் வழங்குவது உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்தார். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் என பதவிகள் வகித்தாலும் கடைசி வரை எளிமையான வாழ்க்கைதான் வாழ்ந்தார், கதராடையே அணிந்து வந்தார்.

அடம்பிடித்த ஆளூநர், நிறைவேறாத முதல்வர் ஆசை

தமிழ்நாட்டில் பொது உடமை இயக்கத்தை வலுப்படுத்தியதற்காவும் மக்களின் உரிமைக்காக முன்னெடுத்த போராட்டங்களுக்காவும் சங்கரய்யாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ‘தகைசால் தமிழர்’ என்ற பட்டம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் அறிக்கையொன்றின் வாயிலாக தெரிவித்திருந்தார். அதன்படி, தோழர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கு அனுமதி வழங்க கோரி ஆளுநருக்கு அனுப்பியும் வைக்கப்பட்டது. ஆனால், அரசியல் காரணங்களால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்தார். ஆளுநரின் இந்த செயலைக் கண்டித்து, தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பட்டமளிப்பு விழாவையும் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் வசித்து வந்த என். சங்கரய்யாவுக்கு, கடந்த சில நாட்களாக சளி தொந்தரவு, காய்ச்சல் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆக்சிஜன் குறைவும் ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று (நவ.15) பிரிந்தது.

“சங்கரய்யா உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலும் மதியம் 2 மணி முதல் தியாகராய நகர், வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ள சி.பி.ஐ(எம்) மாநிலக் குழு அலுவலகத்திலும் வைக்கப்படவுள்ளது.

இறுதி நிகழ்ச்சிகள் நாளை (நவம்பர் 16) காலை 10 மணியளவில்,  சி.பி.ஐ(எம்) அகில இந்திய தலைவர்களின் பங்கேற்போடு நடைபெறும். கட்சியின் அனைத்து கிளைகளும் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் ஒரு வார காலம் நிகழ்ச்சிகளை ரத்து செய்து துக்கம் கடைப்பிடிக்கப்படும்” என சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

லால் சலாம் காம்ரேட் (சிகப்பு வணக்கம் தோழர்).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...