No menu items!

Mr.360 Suryakumar: இந்தியாவின் புதிய நாயகன்

Mr.360 Suryakumar: இந்தியாவின் புதிய நாயகன்

இந்திய கிரிக்கெட் உலகின் லேட்டஸ்ட் சென்சேஷன் என்று சூர்யகுமார் யாதவைச் சொல்லலாம். கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் என்று அணிக்குள் பல ஹீரோக்கள் இருந்தாலும் இந்திய அணியின் இப்போதைய சூப்பர் ஹீரோ சூர்யகுமார் யாதவ்தான்.

இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இந்திய அணியை அரை இறுதிச் சுற்றுவரை அழைத்துச் சென்றதில் சூர்யகுமார் யாதவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. லீக் போட்டிகளில் இந்தியா ஆடிய 5 ஆட்டங்களில் சூர்யகுமார் யாதவ் எடுத்துள்ள மொத்த ரன்கள் 225. இந்த ரன்களை 193 .96 என்ற ஸ்டிரைக் ரேட்டில் சூர்யகுமார் யாதவ் எடுத்துள்ளார் என்பதுதான் கிரிக்கெட் உலகில் அவரைப் பற்றி பரபரப்பாக பேச வைக்கிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் மிஸ்டர் 360 என்ற பட்டம் இதுவரை தென் ஆப்பிரிக்க வீரரான டிவில்லியர்ஸுக்குதான் சொந்தமாக இருந்தது. இப்போது டிவில்லியர்ஸுக்கு போட்டியாக அந்த பட்டத்தை பங்கிடும் நிலைக்கு உயர்ந்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

அவரது ஆட்டத்தைப் பற்றி புகழ்ந்து தள்ளியுள்ள இந்தியாவின் கிரிக்கெட் பிதாமகனான சுனில் கவாஸ்கர், “கிரிக்கெட் உலகின் புதிய மிஸ்டர் 360 டிகிரி என்று சூர்யகுமார் யாதவைச் சொல்லலாம். மைதானத்தின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் தன் விருப்பப்படி பந்தை விரட்டியடிக்கும் அவரது ஆற்றல், இந்திய அணி அரை இறுதிச் சுற்றுக்கு செல்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அவரது புத்தகத்தில் அனைத்து வகையான ஷாட்களுக்கும் இடம் உண்டு. சூர்யகுமார் யாதவ் மட்டும் இல்லாவிட்டால் பல போட்டிகளில் இந்திய அணி 150 ரன்களைத் தாண்டவே சிரமப்பட்டிருக்கும்” என்கிறார்.

இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து நாயகர்களும் சூர்யகுமார் யாதவைக் கொண்டாடுகிறார்கள். கோலியைவிட தாங்கள் சூர்யகுமார் யாதவையே மிகப்பெரிய அச்சுறுத்தலாக பார்ப்பதாகச் சொல்கிறார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்.

இப்படி எல்லோராலும் கொண்டாடப்படும் சூர்யகுமார் யாதவுக்கு அணியில் நுழையும் வாய்ப்பு அத்தனை சுலபமாக கிடைக்கவில்லை. 1990-ம் ஆண்டில் மும்பையில் பிறந்த சூர்யகுமார் யாதவுக்கு சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம். தெருவில் சூர்யகுமார் யாதவ் கிரிக்கெட் ஆடுவதைப் பார்த்த அவரது அப்பா, தனது மகனுக்கு கிரிக்கெட்டில் மிகச்சிறந்த எதிர்காலம் இருப்பதாக நம்பினார். அவரை வெங்சர்க்கார் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்த்தார். அன்றிலிருந்து அவருக்கு எல்லாமே கிரிக்கெட் என்றாகிப் போனது.

2010-11லேயே ரஞ்சி கோப்பை கிர்க்கெட்டில் ஆடத் தொடங்கினாலும், இந்திய அணிக்கு அவர் தேர்வாக கடுமையாக போராடவேண்டி வந்தது. ரஞ்சி கோப்பை மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடும் சூர்யகுமார் யாதவ், ஒவ்வொரு முறையும் அணித் தேர்வு நடைபெறும்போது அதில் தனது பெயர் இருக்கும் என்று நம்புவார். ஆனால் அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். இப்படி 2015-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்கு தேர்வு பெறுவார் என்று ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்து ஏமாந்து போனார்.

கடைசியில் சூர்யகுமார் யாதவின் 31-வது வயதில்தான் அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. லேட்டாக வந்தாலும் தான் லேட்டஸ்டாக வந்தவர் என்பதை தனது திறமையால் நிரூபித்த சூர்யகுமார் யாதவ், இந்த ஆண்டில் மட்டும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்துள்ளார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்த ஆண்டில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இத்துடன் அவரது பணி நிறைவடையவில்லை. இன்னும் அதிக ரன்களைக் குவித்து இந்த ஆண்டில் இந்திய அணிக்கு அவர் டி20 உலகக் கோப்பையை வென்றுகொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். அவர் அதை செய்துமுடிப்பார் என்று நம்புவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...