”அண்ணாமலை மாநிலத் தலைவர் ஆனதுல இருந்து பாஜக வளருதோ இல்லையோ கோஷ்டிகள் ரொம்பவே வளருது” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“அப்படி என்னதான் நடந்துச்சு?”
“ஒண்ணா, ரெண்டா… பல விஷயங்கள் நடந்துட்டு இருக்கு. மீனம்பக்காம் ஏர்போர்ட் தங்க கடத்தல் வழக்குல அண்ணாமலைக்கு தொடர்பு இருக்கறதா ஒரு தகவல் இப்ப சமூக வலைதளத்தில் வைரலாகிட்டு வருது. ஆனா எல்லாத்துக்கும் முந்தி அடிச்சுட்டு கருத்து சொல்ற அண்ணாமலை, இந்த விஷயத்துல அமைதியா இருக்கார். இது பத்தின சில விவரங்களை அண்ணாமலையோட எதிர் கோஷ்டியைச் சேர்ந்த கே.டி.ராகவன் சேகரிச்சுட்டு இருக்காரார்னு ஒரு தகவல். இதுல தான் கண்டறிஞ்ச சில விஷயங்களை அவர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பி இருக்கார். இதைப் படிச்சுப் பார்த்த நிர்மலா சீதாராமன், இந்த விஷயத்துல என்ன நடந்துச்சுன்னு விசாரிச்சு அறிக்கை அனுப்பச் சொல்லி தமிழக சுங்க அதிகாரிகள்கிட்ட சொல்லி இருக்காராம்.”
“நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பற்றி விசாரிக்க பாஜகல குழு அமைச்சிருக்காங்களே?”
“நாடாளுமன்ற தேர்தல்ல பணப்பட்டுவாடா முறையா செய்யப்படலை… சில நிர்வாகிகள் பணத்தை சுருட்டிட்டு ஓடிட்டாங்கன்னு தமிழக பாஜகல இருந்து பலர் டெல்லி தலைமைக்கு புகார் அனுப்பி இருக்காங்க. இதுபத்தி அண்ணாமலைகிட்ட டெல்லி தலைமை விளக்கம் கேட்க, வேறு வழியில்லாம நாடாளுமன்ற தொகுதிக்கு இரண்டு பேர் கொண்ட குழுவை அமைச்சிருக்கார் அண்ணாமலை. இந்தக் குழுவில் அண்ணாமலையோட எதிர் கோஷ்டி நிர்வாகிகளையும் சேர்க்கச் சொல்லி நிர்பந்தப்படுத்தி இருக்கு டெல்லி தலைமை. இப்ப அந்த குழு ஒவ்வொரு தொகுதியிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி பண பட்டுவாடா பற்றி விசாரணை நடத்தப் போகுது. கூடிய சீக்கிரம் பணத்தை சுருட்டினது யாருங்கிறது தெரியவரும் அது அண்ணாமலைக்கு எதிரா இருக்கலாம்னு சொல்றாங்க.”
“விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யப் போகாம, வீடியோ மட்டும் வெளியிட்டிருக்காரே முதல்வர் ஸ்டாலின்.”
“விக்கிரவாண்டி தொகுதியில பாட்டாளி மக்கள் கட்சியோட தேர்தல் பணி அப்படி ஒண்ணும் சுறுசுறுப்பா இல்லை. அவங்களுக்கு சொல்லிக்கற மாதிரி செல்வாக்கும் இல்லை. அதனால நீங்க பிரச்சாரத்துக்கு வர வேணாம். நாங்களே பாத்துக்கறோம்னு முதல்வர்கிட்ட அமைச்சர் பொன்முடி சொல்லி இருக்கார். அதனாலதான் அவர் பிரச்சாரத்துக்கு போகாம வீடியோவை மட்டும் வெளியிட்டு இருக்கார்.”
“அங்க அதிமுக ஆதரவை பெற பாமக துடிச்சுட்டு இருக்கே?”
“அதிமுக ஆதரவு இருந்தா விக்கிரவாண்டியில ஈஸியா ஜெயிச்சுடலாம்ங்கிறது பாமக எம்எல்ஏக்களோட கருத்து. இதை அவங்க ராமதாஸ்கிட்ட சொல்லி இருக்காங்க. அவரும் அதுக்கான முயற்சிகளை எடுத்துட்டு இருக்கார். ஆனா இது எதுவும் அன்புமணி ராமதாஸுக்கு பிடிக்கலையாம். அதிமுக ஆதரவு இல்லாமல் நாம ஜெயிச்சாதான் நம்ம செல்வாக்கு என்னன்னு அவங்களுக்கு காட்ட முடியும். அதனால அதிமுக ஆதரவு வேணாம்னு அன்புமணி சொல்லி இருக்காரு. ஆனா உள்ளூர் பாமக பிரமுகர்கள் இதைக் கேட்காம, பிரச்சார கூட்டங்கள்ல ஜெயலலிதா படத்தையும் பயன்படுத்தறாங்க.”
“விக்கிரவாண்டியில அதிமுக யாருக்குதான் ஆதரவு கொடுக்கும்?”
“இதைப் பத்தி அந்த கட்சி வெளிப்படையா எதையும் அறிவிக்கலை. அதேசமயம் அதிமுக மாவட்ட நிர்வாகிகள்கிட்ட ‘எந்த சூழ்நிலையிலும் நீங்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாதுன்னு நம்ம தொண்டர்களுக்கு அறிவுறுத்துங்கள்’னு எடப்பாடி சொல்லி இருக்காராம். அப்ப சில நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சிக்கு நாம ஓட்டு போடலாமான்னு கேட்டிருக்காங்க. அதுக்கு எடப்பாடி, அப்படியே செய்யுங்கன்னு தலையாட்டி இருக்கார்.”
“மாணவர்களுக்கு பரிசு கொடுக்கற நிகழ்ச்சியில, நீட் தேர்வுக்கு விஜய் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காரே?”
“இப்படி பேசினதன் மூலமாவும், மத்திய அரசை ஒன்றிய அரசுன்னு குறிப்பிட்டதன் மூலமாவும், தான் பாஜகவுக்கு எதிரானவர்ங்கிற தோற்றத்தை விஜய் ஏற்படுத்தி இருக்கார். அதே சமயம் விஜய்யோட நீட் எதிர்ப்பு கருத்துக்கு திமுக தலைமை அவருக்கு அவசர அவசரமாக நன்றி தெரிவிச்சதை சில மூத்த தலைவர்கள் ரசிக்கலை. விஜய் நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிச்சா, அது ஏதோ முக்கிய விஷயம் போல நாமே கொண்டாடறதா? அப்படிங்கிறது அவங்களோட வாதம். நாம பல வருஷமா நீட் தேர்வை எதிர்த்து போராடிட்டு இருக்கோம். அப்பல்லாம் இந்த விஜய் எங்க போனாருன்னு அவங்க கேள்வி எழுப்பறாங்க.”
“திமுகவைச் சேர்ந்த 2 மேயர்கள் பதவியை ராஜினாமா செஞ்சிருக்காங்களே?”
“கோவை திருநெல்வேலி மேயர்கள் ராஜினாமா செஞ்சதை பத்திதானே கேக்குறீங்க. அறிவாலயத்தோட உத்தரவைத் தொடர்ந்துதான் அவங்க இப்படி செஞ்சிருக்காங்க. கோவையில் தேர்தல் பொறுப்பாளரா இருந்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மேயரின் சில நடவடிக்கைகள் கோவையில் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்னு பயந்து போய் அதையெல்லாம் தேர்தலப்ப நான் சரி செய்தேன்னு சொல்லி அவரை மாத்த முதல்வருக்கு பரிந்துரை செய்திருக்கார். கோவை மேயரை தேர்தெடுத்தவர் செந்தில் பாலாஜி. அதனால செந்தில் பாலாஜி மனசு வருத்தப்படக் கூடாதுன்னு இந்த தகவலை அவர்கிட்ட முன்கூட்டியே சொல்லி இருக்காங்க. திருநெல்வேலியை பொருத்தவரை அந்த மாவட்ட பொறுப்பாளர் தங்கம் தென்னரசு மேயரை நீக்கணும்னு பல காலமா தலைமைகிட்ட சொல்லிட்டிருந்தார். அது இப்பதான் நடந்திருக்கு. அடுத்ததா காஞ்சிபுரம் சேலம் திருச்சி மேயர் ராஜினாமா விஷயமும் பரிசீலனையில் இருக்கறதா சொல்றாங்க.”
”வேற யாரெல்லாம் ராஜினாமா பண்னப் போறாங்க?”
“இப்படியெல்லாம் நோண்டி நோண்டி கேட்டால் நான் ராஜினாமா பண்ணிடுவேன்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.