No menu items!

அண்ணாமலை Vs தமிழிசை – முடிவுக்கு வந்ததா மோதல்? – மிஸ் ரகசியா

அண்ணாமலை Vs தமிழிசை – முடிவுக்கு வந்ததா மோதல்? – மிஸ் ரகசியா

“முதல்வர் படு அப்செட்” என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் வந்தாள் ரகசியா.

“காரணம் கள்ளக்குறிச்சியா?”

“வேறு என்ன? 40க்கு 40 ஜெயிச்ச சந்தோஷத்துல இருந்த அவருக்கு இது பெரிய மனக் கஷ்டத்தைக் கொடுத்துருக்கு”

“அரசு அவர் கண்ட்ரோல்ல, அமைச்சர்கள் அவர் கண்ட்ரோல்ல, காவல்துறை அவர் கண்ட்ரோல்ல…அவர்தானே கவனிச்சிருக்கணும்”

“உண்மை. அதைதான் சொல்லி கோபப்பட்டிருக்கிறார். கலால் துறையும், உளவுத் துறையும், காவல் துறையும் இந்த விஷயத்தில் என்ன செய்து கொண்டிருந்தது? ஆளுங்கட்சியில் யாராவது அழுத்தம் தந்திருந்தால் அதை என்னிடம் சொல்லி இருக்கலாமே? நான் எப்போதும் உங்கள் தொடர்பு எல்லையில்தானே இருந்தேன்? என்னை எல்லோரும் ஏமாற்றி விட்டீர்கள்’ என்றும் ஆவேசப்பட்டிருக்கிறார். அமைச்சர்களிடமும் தன் கோபத்தைக் கொட்டியிருக்கிறார்.”

“இத்தனை பேர் இறந்தும் சம்பவம் நடந்த இடத்துக்கு முதல்வர் போகாதது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறதே?”

“முதல்வர் கள்ளக்குறிச்சிக்கு போகாததற்கு, அவரது உடல்நிலையும் ஒரு காரணம் என்று சொல்கிறார்கள். தன்னால் போக முடியாத சூழலில்தான் உதயநிதி ஸ்டாலினை தன் சார்பில் அனுப்பி இருக்கிறார். அப்படி போனவரிடம், எந்த காரணம் கொண்டும் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம். ஏதாவது சிக்கலாகிவிடும் என்று முதல்வர் அறிவுரை கூறியிருக்கிறார். அதனால்தான் மருத்துவனைக்கு போய் பாதிக்கப்பட்டவர்களை பார்த்த உதயநிதி, பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை.”

”அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த முதல்வர், அந்தப் பகுதி திமுக முக்கியஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா? அவர்களும் ஒரு காரணம்தானே”

“இந்த விஷயத்தில் முதல்வரின் கைகள் கட்டப்பட்டிருப்பதாக அறிவாலயத்துல சொல்லிக்கிறாங்க. அந்த மாவட்டப் பொறுப்பாளர் அமைச்சர் எ.வ.வேலு. இவர் முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமானவர். அவரை மீறி அந்த மாவட்டத்தில் எதுவும் செய்ய முடியாத நிலை இருக்கிறது. ஏற்கனவே கள்ளக்குறிச்சியில்தான் மாணவி ஸ்ரீமதி மரணம் ஒரு பிரச்சினையாக இன்று வரை இருக்கிறது. அப்போது நடந்த கலவரத்தையும் உளவுத் துறை சரியான முறையில் முதல்வருக்கு சொல்லவில்லை. இப்போது இந்த சோகம். எ.வ.வேலுதான் எல்லாவற்றுக்கும் காரணம், அவரை மீறி அந்தப் பகுதி செய்திகள் எதுவும் தலைமைக்கு வருவதில்லை என்று முதல்வரிடம் கொளுத்திப் போடலாம் என்றால் முதல்வர் கூடவே எ.வ.வேலு இருக்கிறார் எப்படி சொல்வது என்று திமுகவினர் புலம்புகிறார்கள்”

“கஷ்டம்தான். சரி, முதல்வர் போகாத நிலையில், முதல் ஆளாக எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சிக்கு போயிருக்கிறாரே?”

“ஆமாம். சசிகலா கள்ளக்குறிச்சி போகிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அவருக்கு முன்பு அங்கு போய்விட வேண்டும் என்று வேகமாக சென்றாராம். சம்பவ இடத்துக்குச் சென்ற முதல் அரசியல் தலைவர் அவர்தான். சசிகலா மட்டுமே அவர் நோக்கம் இல்லை. அண்ணாமலை எல்லா இடங்களுக்கும் சென்று பிரஸ்மீட்டில் அதிரடியாக பேசி கவனத்தை கவர்பவராக இருக்கிறார் அவரை ஓவர்டேக் செய்ய வேண்டும் என்ற நோக்கமும் அவரிடம் இருந்தது. இனிமேல் எடப்பாடியை பாட்ஷாவாய் பார்ப்பீர்கள் என்கிறார்கள் அதிமுகவினர் குஷியாக.. உள்ளூர் பிரமுகரான குமரகுரு நிறைய விவரங்களை சேகரிச்சு எடப்பாடிக்கு கொடுத்திருந்தார். குறிப்பா சாராய விற்பனை செய்த கன்னுக்குட்டியின் வீட்டுக்கு 150 அடி தொலைவில் கள்ளக்குறிச்சி காவல் நிலையம் இருக்கிறதுன்னும் சொல்லியிருக்கார். இதையெல்லாம்தான் செய்தியாளர் சந்திப்பில் போட்டு உடைத்திருக்கிறார் எடப்பாடி.”

“டாக்டர் ராமதாஸும் பிரஸ் மீட் நடத்தியிருக்கிறாரே?”

“பாஜக அறிவுறுத்தலின்பேரில் அவர் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தியதாக சொல்கிறார்கள். செய்தியாளர்கள் சந்திப்பில் ‘சாராய வியாபாரிகளுக்கும் திமுகவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கல்வராயன் மலையில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அதற்குக் காரணமானவர்களை கைது செய்தாலும் கூட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள ஏ.வ.வேலுவின் ஆதரவாளர், ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் இதில் தலையிட்டு அவர்களை விடுதலை செய்ய வைக்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுவதற்கு ஆளும் திமுகவின் முழு ஆதரவு உண்டு’ என்று விளாசித் தள்ளியிருக்கிறார் ராமதாஸ். சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மலையரசனுக்கு வாழ்த்து தெரிவித்து கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்ட கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜன் கள்ளக்குறிச்சி நான்கு முனை சாலையில் பதாகை வைத்திருந்த்தாகவும் அவர் திமுக மீது நேரடியாக குற்றம் சாட்டியிருக்கிறார். இதற்கு திமுக இது வரை பதில் தரலை”

“சாராய நியூஸையே அதிகம் சொல்லி சங்கடப்படுத்தாதே.. வேறு செய்திகள் இல்லையா?”

“மூணு நாள் முன்னால தமிழக பாஜகவின் மையக்குழு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு தமிழிசையும் அழைக்கப்பட்டிருந்தார். கூட்டத்தில் கலந்துகிட்ட தமிழிசை, அண்ணாமலையின் ஆதரவாளரான திருச்சி சூர்யா தன்னைப் பற்றி தவறாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்ததை குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கணும்னு சொல்லி இருக்கார். அப்ப அண்ணாமலை, ‘பாஜக நிர்வாகியான கல்யாணராமன் என்னைப் பற்றி ஏடாகூடமாக கருத்துக்களை பதிவு செய்கிறார் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’னு சொல்ல, இருவர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு மைய குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கு. ஆனால் இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கறதா பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கையெழுத்து போடாம வேறு ஒரு நிர்வாகி பெயரில் இந்த அறிக்கையை தமிழக பாஜக வெளியிட்டிருக்கு. இந்த விஷயத்துல அண்ணாமலை தன்னை கைவிட்டதுல திருச்சி சூர்யா ரொம்ப அப்செட்டாம்”

“மையக் குழு மீட்டிங்ல வேறு சுவாரசியம் இல்லையா?”

“கூட்டத்துல யாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கலனு நியூஸ் வந்துருக்கு. எல்லோரும் இறுக்கமா இருந்தாங்களாம். தமிழிசையை அமித்ஷா வறுத்தெடுத்துட்டார்னு அண்ணாமலை ஆட்கள் கிண்டல் செய்வதாக தமிழிசை வெளிப்படையாக புகார் சொன்னாராம். அதற்கு அண்ணாமலை பதில் எதுவும் தெரிவிக்கவில்லையாம்?”

“இப்போதைக்கு பாஜக கோஷ்டி பூசல் முடிவுக்கு வராதா? வர வைப்பதற்காக வெங்கய்ய நாயுடு இங்க வர்றார்னு சொல்றாங்களே அப்படியா?”

“ஆமாம். நீங்க ஒதுங்கி இருக்காதிங்க. தமிழ்நாட்டுல என்ன நடக்குதுனு பாருங்கனு அவர்கிட்ட அமித்ஷா சொல்லியிருக்கிறார்”

“அதுக்கு நாயுடு என்ன சொன்னாராம்?”

”தமிழ்நாட்டுல பாஜகவோட அப்ரோச் மாற வேண்டும்னு சொன்னாராம். அது மாறுனாதான் தமிழ்நாட்டுல வளர முடியும்னு சொல்லியிருக்கிறார்”

“வெங்கய்ய நாயுடு ஃபேமிலி தமிழ்நாட்டுல ஜஸ்டிஸ் பார்ட்டில இருந்தவங்களாச்சே. அப்படிதான் சொல்லியிருப்பார். சரி அவர் வராரா இல்லையா?”

“வர மாட்டார்ன்றதுதான் இப்போதைய நியூஸ்”

”அவர் வரல ஆனா சசிகலா வராங்களே?”

“அதுக்கும் ஒரு ஸ்டாப் போட முயற்சிக்கிறாங்க. ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி அறிக்கையில் சசிகலாவை விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சசிகலாவை ஏன் விசாரிக்கவில்லை என்று சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றம் போகப் போவதாக ஒரு தகவல் இருக்கிறது. அந்த வழக்கு வந்தால் சசிகலாவால் வேகமாக செயல்பட முடியாது என்கிறார்கள்”

“அப்ப சசிகலா மீண்டும் அமைதியாய்டுவாங்களா?”

“ஆக மாட்டாங்க. அவங்க இப்ப தாமரை வழிபாடு செய்றாங்க. அதனால பிரச்சினை எதுவும் வராது” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...