No menu items!

கொஞ்சம் கேளுங்கள்.. ஹிந்தியா..? இந்தியாவா? – திருப்புமுனையில் தேர்தல் களம்!

கொஞ்சம் கேளுங்கள்.. ஹிந்தியா..? இந்தியாவா? – திருப்புமுனையில் தேர்தல் களம்!

“நாடாளுமன்றம் பழைய கட்டடத்தில்தான் கூடியது. புதிய கட்டடத்தில் இன்னமும் வேலை நடக்கிறது. புதிய கட்டடத்தில் கூடியிருந்தால் உறுப்பினர்கள் கவனம் மாறியிருக்கும். எம்.பி.க்கள் குறிப்பாக பி.ஜே.பி. எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூடிக் கூடி அரசியல் பேசுவதை பார்க்க முடிந்தது” என்று பேச்சை ஆரம்பித்து வைத்தார் டெல்லி நிருப நண்பர். ஒட்டுக்கேட்பது இயலாது என்றார். தமிழக சூழ்நிலையை அறிவதற்காக சென்னை வந்திருக்கிறார் அவர்.

“அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை தங்கள் முத்திரையோடு நடத்த விரும்புகிறது ஆர்.எஸ்.எஸ். இலவு காத்த கிளிபோல காத்துக் கிடந்தது போதும். தங்கள் இயக்க கொள்கைகள் அடுத்து வரும் தேர்தலில் ஒலித்தே தீரவேண்டும். அவை வெற்றி பெற்றே தீரவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். உறுதியோடு இருக்கிறார்கள். சொல்லப் போனால் இந்திய அரசியல்… ஏன் இந்திய திருநாடே ஒரு திருப்புமுனைக்கு வருகிறது” என்றார் அருகில் இருந்த இடதுசாரி அரசியல் பிரமுகர்.

அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருவேறு கருத்துகள் மோதப்போகிறது. மக்கள் பல கோணங்களில் திடமாக சிந்தித்து ஓட்டுப் போடவேண்டிய நேரம் நெருங்குகிறது என்றார் அவர்.

எமர்ஜென்சிக்கு பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலைவிட வரப்போகிற நாடாளுமன்ற தேர்தல் வேறு மாதிரியானது என்பது அவர் சொல்ல வந்தது.

நேரு குடும்பத்தின் மீது இருந்த பற்றுதலை இந்திய மக்கள் அப்போது தள்ளி வைத்தார்கள். சர்வாதிகார ஆசை முளைவிட இடமே தரக்கூடாது என்று மக்கள் முடிவு செய்து அன்று இந்திராவுக்கு எதிராக – எதிர்க்கட்சி கூட்டணியை வெற்றி பெற செய்தார்கள். மக்கள் முன் வைக்க இப்போது எதிர்க்கட்சி கூட்டணிகள் என்ன பெரும் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள்? பிரதமர் மோடி மீது எந்த விதத்தில் குறைகூற முடியும்?

“அடுத்த எம்.பி. தேர்தலில் பிஜேபி முன்னிறுத்தப் போவது ஆர்.எஸ்.எஸ். லட்சியங்களாகவே இருக்கப் போகின்றன. வாஜ்பாய் வழிநடத்திய பிஜேபியாக இருக்காது. அயோத்தியில் மக்கள் திரண்டு நடத்தும் கும்பாபிஷேகம், ஆர்.எஸ்.எஸ். லட்சியத்திற்கு மக்கள் நடத்தும் கும்பாபிஷேம் என்று கருதுவார்கள்” இடதுசாரி அரசியல் பிரமுகர் அழுத்தமாக கூறினார்.

எமர்ஜென்சிக்கு பிறகு நடந்த கூட்டணி ஆட்சியில் வாஜ்பாயும், அத்வானியும் இருந்தார்கள். அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் பல மாநிலங்களுக்கு விஜயம் செய்தார். தமிழ்நாட்டுக்கும் வந்தார். முதலாளிகளின் பலத்த வரவேற்பு. ஆனால் ஆர்.எஸ்.எஸ். கொள்கை பிரச்சாரம் எதுவுமே பலமாக நடத்த முடியவில்லை. பிரதமர் மொரார்ஜியின் ஆதரவு இல்லை. வாஜ்பாய் ராஜதந்திர மௌனம் காட்டினார்.

“முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதுபோல தமிழ்நாட்டில் கவர்னர் ஐயா ஆர்.எஸ்.எஸ். தேர்தல் பிரச்சாரத்தை முன்பே துவக்கி வைத்துவிட்டார். ‘அதென்ன தமிழ்நாடு என்ற பெயர்’ என்று கேள்வி எழுப்பினார். சனாதான தர்மம்தான் இந்தியாவிற்கு நல்லது என்கிறார். தமிழ்நாடு தேசிய இயக்கத்தில் கலக்க அனுமதிக்கப்படவில்லை என்றார். இவை எல்லாம் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கும்” என்றார் அவர்.

ஊழல் அம்புகளால் மாநில கட்சிகள் சாய்க்கப்படும் என்று பிஜேபி ஒருபுறம் திட்டம் தீட்டுகிறது. கூர்மையான மதரீதியான ஆர்.எஸ்.எஸ். லட்சியங்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் இரண்டுக்கும் நடுவே திமுக உட்பட தென்னக மாநில கட்சிகளை திணறடிக்க முடியும் என்பது அவர்களது உறுதியான முடிவு. டெல்லி நிருபர் ஆமோதித்து பேசினார் இடையில்.

“தமிழ்நாட்டில் சுனாமி போல அடுக்கடுக்காக வரும் ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக சமாளிக்குமா…? தடுமாறுமா?” என்று கேள்வி எழுப்பினார் டெல்லி நிருபர்.

“ஊழல் குற்றச்சாட்டுகள் நாடாளுமன்ற தேர்தலில் மக்களிடம் எடுபடுமா? திமுகவை நோக்கி பிஜேபி ஆள்காட்டி விரலை நீட்டி குற்றம்சாட்டினால் மற்ற மூன்று விரல்கள் அவர்களை நோக்கி நீள்கிறது. அங்கே என்ன வாழ்கிறதாம்! ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு திரைமறைவில் – சனாதன தர்மம் இருப்பதை திரை நீக்கி காட்டும் சக்தி திமுகவுக்கு இருக்குமா? பிஜேபி ஆட்சியில் இருக்கப்போகும் ‘ஹிந்தியா’ – எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்த ‘இந்தியா’வின் துணையோடு மோதி ஜெயிக்க முடியுமா திமுக” இப்படி கேள்விகளை எழுப்பிக் கொண்டே போனார் அரசியல் பிரமுகர்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகிய நிலையில் மத்தியிலும், மாநிலத்திலும் இருவேறு கட்சிகள் ஆண்டாலும், சகிப்புத்தன்மை என்பது மத்திய அரசுக்கு இல்லாத நிலை. ஏராளமான அதிகாரங்களுடன் மத்திய அரசு. மாநில அரசு கையேந்தும் நிலை நீடிக்கிறது.

ஒரே கட்சி நாடு முழுவதும் ஆளும் என்றால், மாநில உணர்வுகள் மதிக்கப்படுமா? என்றார் அரசியல் பிரமுகர்.

“உதாரணமாக வேளாண் பூமியான தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும் விஷயம். சோழநாடு சோறுடைத்து என்பதே போய்விடுமே. ஒரு நாட்டின் நலனுக்கு ஒரு மாவட்டத்தின் தன்மை போனால் என்ன என்று ஒரு தமிழக பிஜேபி தலைவர் கூறியது உண்டு. இது மிக ஆபத்தான கருத்து அல்லவா” என்றார் அவர்.

ஆர்.எஸ்.எஸ். பிடியில் இந்தியா – ஹிந்தியாவாக மாறும். தமிழ் என்னவாகும். முன்புபோல வீர முழக்கத்தோடு இதுபற்றி வாதாடும் சக்தி திமுகவுக்கு இருக்கிறதா. டெல்லி நிருபருக்கு சந்தேகம்.

இந்த கேள்விகள் எழமாமல் போகாது என்றார் அரசியல் தலைவர். சனாதன தர்மம் என்பது இந்தியாவை பின்னுக்கு தள்ளும் என்பதை ஆவேசமாக சுட்டிக்காட்டுவோர் இல்லாமலா போவார்கள்? தேர்தல் நேரத்தில் நிச்சயம் இந்த கேள்விகள் பிஜேபிக்கு பெரும் தலைவலி தரும் என்றார்.

எதிர்க்கட்சிகள் கூட்டணியில் சுருக்கமான பெயரான ‘இந்தியா’ மக்களை ரசிக்க செய்திருக்கிறது. ராகுல் காந்தியை மக்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள். அவர் பக்கம் அனுதாப அலை வீசுகிறது. திரைமறைவில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை பிஜேபி முன்னிருத்துவதை வெளிச்சம் போட்டு காண்பிக்கப்படுமானால்………….

நிறுத்திவிட்டார் இடதுசாரி அரசியல் பிரமுகர். டெல்லி நிருபர் அவநம்பிக்கையுடன் சிரித்தார். வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் பல்வேறு பிரச்னைகளில் இந்தியா பயணிக்கப்போகும் திசையை முடிவு செய்யும்என்பதை அவர்கள் இருவரும் சுட்டிக்காட்டினார்கள்.

எதிர்காலம் பற்றி இமயம் முதல் குமரி வரையிலான பிரம்மாண்ட கேள்விக்குறி ஒன்று எழும்பி நிற்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...