கீர்த்தி சுரேஷ் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பாலிவுட்டுக்குள் நுழைய கடும் முயற்சி செய்தார். இதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதனால் பாலிவுட்டில் இப்பொழுதும் பிரபலமாக இருக்கும் சைஸ் ஸீரோ உடற்கட்டைப் பெற முயற்சித்தார். கன்னங்கள் வற்றிப் போய், எலும்பும் தோலுமாக இருந்த கீர்த்தி சுரேஷைப் பார்த்து பரிதாப பட்டார்களே தவிர வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் தமிழ் சினிமா பக்கம் திரும்பினார். சில தெலுங்குப் படங்களிலும் நடித்தார். இப்படியே போனதால் இதுவரை அவரது பாலிவுட் கனவு நிறைவேறவே இல்லை.
ஆனால் இப்போது பாலிவுட் படமொன்றில் நடிக்கும் வாய்ப்பை புத்திசாலித்தனமாக கைப்பற்றி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அந்தப் படம் பாலிவுட் நடிகர் வருண் தவானின் 18-வது படம். அதாவது தமிழில் விஜயை வைத்து அட்லீ இயக்கிய ‘தெறி’ படத்தின் ரீமேக்தான் இந்தப்படம். இதற்கு ‘பேபி ஜான்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்தமுறை ஹிந்தியில் இயக்கப்போவது அட்லீயின் உதவியாளர் ஏ. காளீஸ்வரன். தயாரிப்பு அட்லீ. இந்த இரண்டு விஷயங்கள்தான் கீர்த்தி சுரேஷூக்கு பாலிவுட் வாய்ப்பைப் பெற்று கொடுத்திருக்கின்றன.
கீர்த்தி சுரேஷூம், அட்லீயின் மனைவி ப்ரியாவும் நெருங்கிய தோழிகள். ஷூட்டிங் இல்லாவிட்டால் அட்லீ வீட்டிற்கு கீர்த்தி செல்வது வழக்கம். அந்த சமயங்களில் கீர்த்தியும், ப்ரியாவும் ஷாப்பிங், சோஷியல் மீடியா ரீல்ஸ் என பிஸியாக இருப்பார்கள். இந்த நட்புதான் கடைசியில் பாலிவுட் வாய்ப்பைப் பெற்று கொடுத்திருக்கிறது.
அட்லீ விஜய்க்கு ரொம்பவே நெருக்கம் என்பது கூடுதல் சமாச்சாரம்.
இதனால் சமந்தாவையே நடிக்க வைக்கலாம் என்ற எண்ணத்தை மாற்றிவிட்டார்கள். சமந்தாவுக்குப் பதிலாக கீர்த்தி சுரேஷ் இப்போது நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாகவே, பாலிவுட்டின் கலாச்சாரத்திற்கு கீர்த்தி சுரேஷ் தயாராகிவிட்டார் என்கிறார்கள். வருண் தவானுடன் மும்பையில் ஆட்டோவில் பயணம் செய்வது, டின்னர் போவது என கீர்த்தி சுரேஷ் இப்போது பிஸியாக இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.
அனிருத்தை வேண்டாமென்ற ரஜினியின் மகள்
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் ‘லால் சலாம்’ படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாக இருக்கிறது, இந்தப் பட த்தில் ரஜினியும் நடித்திருக்கிறார். ரஜினியின் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரம் அதிகம் பேசப்படும் என்று ப்ரமோஷனில் லால் சலாம் படக்குழுவினர் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் திடீரென ரஜினியின் இளைய மகள் செளந்தர்யாவும் புதிய படமொன்றை இயக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன.. இவர் ஏற்கனவே ரஜினியை வைத்து ‘கோச்சடையான்’, அடுத்து தனுஷை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி’ என இரண்டுப் படங்களை இயக்கி இருக்கிறார்.
ராகவா லாரன்ஸ் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். செளந்தர்யா, ராகவா லாரன்ஸ் என்ற கூட்டணியைப் பார்த்து கலைப்புலி தாணு தான் அந்தப்படத்தை தயாரிக்க தயார் என்றும் கூற இப்போது அந்த பட வேலைகள் மளமளவென நடந்து வருகின்றன.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யாரென்று பேச்சு கிளம்பிய போதுதான் புது பிரச்சினை எழுந்ததாம். தயாரிப்பாளர் தரப்பில் அனிருத்தை கூறினார்களாம். ஆனால் இதற்கு செளந்தர்யா தரப்பில் எந்த உற்சாகமும் இல்லையாம்,
ஆனால் அனிருத் வேண்டாமென செளந்தர்யா கூறிவிட்டாராம்.
இதை யாரும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். அனிருத்தை செளந்தர்யா வேண்டாமென்று சொல்ல என்ன காரணமென முதலில் யாருக்கும் புரியவில்லை. அதன் பிறகுதான் விஷயம் வெளியே வந்திருக்கிறது.