No menu items!

கொஞ்சம் கேளுங்கள்: அவர்கள் நடந்தார்கள்… எதற்காக!

கொஞ்சம் கேளுங்கள்: அவர்கள் நடந்தார்கள்… எதற்காக!

“நடந்தாய் வாழி காவேரி… என்று பிரமித்து கூறினார் இளங்கோ. காவிரி வடக்கே திரும்பும் இடங்களில் பார்த்தால் இளம் பெண் போல் துள்ளியும் அசைந்தும் நடப்பது போல் இருக்கும். தமிழகத்தை வளப்படுத்த நடந்து வந்தாள் காவேரி” – இலக்கியவாதி உருக்கமாகவும், உற்சாகமாகவும் ஆரம்பித்து வைத்தார்.

நடைப்பயணங்களை பற்றி பேச ஆரம்பித்தபோதுதான்!

“அரசியல்வதிகளை சற்று தள்ளி வைப்போம். நம்ப முடியாத சாதனை படைத்த மனித உருவில் வாழ்ந்த சிலரைப் பற்றி பேசினால் என்ன?” என்றார் இடதுசாரி அரசியல்வாதி.

“சாதி ஏற்றத் தாழ்வுகளை மறுத்த ராமானுஜரைப் பற்றி சமீபத்தில் ஒரு ”’லெக்சர்’ கேட்டேன். திருக்குறுங்குடி பெருமாள், ‘ராமானுஜரே! ஜனங்கள் நான் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார்கள். நீங்கள் சொன்னால் மட்டும் மறுக்காமல் கேட்பதன் ரகசியம் என்ன?’ என்று கேட்டாராம். அப்படி நம்மை வாழ்விக்க வைத்த மாமனிதர் ராமானுஜர் நடந்த நடை என்ன! திருவரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு நடந்து சென்றார் குருவிடம் உபதேசம் பெற! குரு பலமுறை அவரை ஏற்காதது போல திருப்பி அனுப்ப, விடாமல் 18 முறை நடந்து சென்று அந்த ரகசிய உபதேசம் பெற்றார். ஊரார் அத்தனை பேரையும் கூட்டி கோயில் கோபுரம் மீது ஏறி அனைவரும் கேட்கும்படி அந்த ரகசிய உபதேசத்தை சொன்னார் ராமானுஜர். எல்லோருக்கும் பயன்பெற வேண்டும் என்று.”

“தான் பெற்றதை அனைவருக்கும்! ஆச்சரியம்தான்.”

“முதிய வயதிலும் அவர் நடந்தார். மேலக்கோட்டையிலிருந்து திருவரங்கம் நடந்து வந்தபோது அவருக்கு வயது மிக அதிகம். நடந்த வழியெங்கும் மனிதர்களை மனிதர்களாக மதிக்கச் சொல்லி மக்கள் மனங்களை மாற்றினார். ஏழைக் குடியானவர்கள் நெல் மூட்டைகளை சுமந்து செல்லும் காட்சிகளை பார்த்தார். சுமை தாங்கிகளை அமைத்து அவர்கள் இளைப்பாற வழி செய்தார். ராமானுஜர் நடந்தார்… தமிழகம் புதிய வழியில் நடக்கத் தொடங்கியது” – இலக்கியவாதி அமைதிக் காத்தார்.

நம் காலத்தில் காஞ்சி மகா பெரியவர் நடந்தாரே…. அவர் காலடி படாத இடமுண்டா? பல்லக்கில் சற்று தூரம் அவர் போன நாட்கள் உண்டு. மனிதனை மனிதனே பல்லக்கில் தூக்குவதா என்று பெரியார் சீடர்கள் சுவர்களில் எழுதி வைத்தார்கள்! அவர் சென்னை வந்தபோது! 1956ல் இருந்து பல்லக்கை முற்றிலும் துறந்தார். இத்தனைக்கும் அவருக்கு மெலிதான தேகம். எடையே இல்லை. ஒருமுறை அவர் பல்லக்கில் வந்தபோது குலுக்கிய குலுக்கலில் கீழே விழுந்து விட்டார். பல கிலோ மீட்டர் போன பிறகே அவர் பல்லக்கில் இல்லாதது தெரிந்தது! தேடி வந்தபோது ஒரு கல்வர்ட்டில் அமர்ந்து விவசாயி ஒருவரிடம் நடவு பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

“உண்மைதான். மடத்துக்கு அதிபதியாக இருக்கும் வரை, அதன் சம்பிரதாயங்களை அவர் மீறவில்லைதான். அப்போதும் எளிமை. கிராமத்தில் ‘பெருசுகள்’ குந்திக் கொண்டு அமர்ந்திருப்பார்களே… அதுபோல காஞ்சி பெரியவர் அமர்ந்திருப்பார். இன்று எந்த சாமியாராலும் இப்படி உட்கார முடியுமா?” – கேட்டார் இடதுசாரி தலைவர்.

“அவரோடு ஒருமுறை சென்னையில் நடந்திருக்கிறேன். காலை நேரம். கடற்கரை ஓரமாக அவர் நடந்து வந்தபோது ஒரு மீனவ பெரியவர் சூரியனை பார்த்து இரு கைகளை உயர்த்தி வணங்கும் காட்சியை சுட்டிக்காட்டி ‘அவரைப் பாருங்கள். உண்மையான பக்தியை பாருங்கள்’ என்றார்” – இலக்கியவாதி கூறியது.

எங்கும் நடந்து சென்ற காஞ்சி பெரியவர் ஆந்திராவில் ஒரு கிராமத்தை விட்டு புறப்பட்டபோது ஒரு ஏழை சிறுவன் அவரோடு நடந்து வந்தான். பெரியவர் பூஜை செய்ய வில்வ இலைகளை தினமும் தேடிக்கொண்டு வந்து கொடுத்த சிறுவன். ‘எங்கே வருகிறாய் வீட்டை விட்டு, என்ன வேண்டும் என்றார் பெரியவர்.’ ‘மீண்டும் பிறக்காமல் முக்தி அடைய வேண்டும் என்பார் என் அப்பா. எனக்கு அதுபோல முக்தி வேண்டும்’ என்றான் அந்த விளையாட்டு சிறுவன். ‘உனக்கு இல்லாததா’ என்றார் காஞ்சி பெரியவர்.

பல பல வருடங்கள் கழித்து பெரியவர் ஒரு நாள் காஞ்சிபுரத்தில் திடீரென சென்று ஒரு குளத்தில் இறங்கி பலமுறை மூழ்கி குளித்தார். காரணம்? அந்த சிறுவன் பெரியவனாகி காலமான செய்தி வந்திருக்கிறது. பலமுறை குளித்து அவனுக்கு ஜென்மங்களே இல்லாமல் செய்தார் என்று பேசிக்கொண்டார்கள்.

இடதுசாரி தலைவர் அங்கிருந்த அமைதியை கலைத்தார். மகாத்மாவின் தண்டி யாத்திரை பற்றி பேசினார்.

“குஜராத் மாநிலத்தில் உள்ளது தண்டி. தண்டி யாத்திரை இந்திய வரலாற்றில் முக்கியமானது அல்லவா. ஆங்கில ஆட்சி நம் மீது விதித்த உப்பு வரியை எதிர்த்து நடந்தார் காந்தியடிகள். சபர்மதி ஆசிரமத்தில் இருந்து புறப்பட்டார். 240 மைல் தூரத்தில் உள்ள தண்டிக்கு. 24 நாட்கள் நடந்தார். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை நடைப்பயணத்தில் சேர்க்கவில்லை. சபர்மதி ஆசிரமத்தில் இருந்த கடுமையான ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்தவர்களை தேர்ந்தெடுத்தார். 4 மாவட்டங்கள்…. 48 கிராமங்கள் வழியே நடந்தார். ஒவ்வொரு நாளும் இரவில் தங்க வேண்டிய இடம், நடைப் பயண வழி இவை முடிவு செய்யப்பட்டன. வழியில் கிடைத்ததை சாப்பிட்டார்கள். சாலையோரத்தில் உறங்கினார்கள். வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் காந்தியின் இந்த ‘போர்க்கோல’ காட்சி காண குழுமினர்” இடதுசாரி தலைவர் சற்று நிறுத்தினார்.

காந்தியின் சத்தியாகிரகத்தில் இது ஒரு தலையாய காட்சி. ‘சத்திய’ என்றால் உண்மை. ‘ஆக்ரஹ’ என்றால் உறுதியாக பற்றிக்கொள்ளுதல் என்று பொருள்.

“உப்பு வழியாக அரசுக்கு ஏழைகள் செலுத்தும் வரி மிக குவிந்தது. உப்பு, நீர், காற்று இவை ஏழைகளின் சொத்து என்றார் காந்தி” – இடதுசாரி தலைவர். இந்த போராட்டத்தால் விடுதலைக்கான கதவுகள் திறக்கப்பட்டன” என்றார்.

“ராமானுஜர், காஞ்சி பெரியவர், மகாத்மாவின் நடைப்பயணங்கள் உளமாற புரட்சிகள் நிகழ்த்தியதை பார்த்த நாடு இது. மக்களிடையே சாதிகளற்ற ஒற்றுமை, எளிமை, பொறுப்புணர்ச்சி வளர்த்த நடைப்பயணங்கள் அவை…. இப்போது…” என்று கூறி நிறுத்தினார் இலக்கியவாதி.

“அவர்கள் தனியாக நடந்தார்கள். மனித மனமும் மண்ணும் இன்பக் காற்றை அனுபவிக்க வைத்தார்கள். அரசியல்வாதிகள் நடக்கிறார்கள்… எதையோ பிடிக்க படையெடுத்து வருவது போல் பெரும் கும்பலோடு” என்றார் இடதுசாரி தலைவர்.

மூவரின் சிரிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...