No menu items!

கோலிவுட்டா.. டோலிவுட்டா.. – எது டாப்?

கோலிவுட்டா.. டோலிவுட்டா.. – எது டாப்?

கோலிவுட் என்று கொண்டாடப்படும் இதே சென்னையில்தான், டோலிவுட் என்றழைக்கப்படும் தெலுங்கு சினிமாவும் இயங்கி வந்தது.

இன்றைக்கு ஆர்காட் சாலையில் பிரம்மாண்டமாக இருக்கும் இதே ஃபாரம் மாலில்தான் அன்று பல தமிழ், தெலுங்கு நட்சத்திரங்கள் புழங்கிய நாகிரெட்டியின் விஜயவாஹினி ஸ்டூடியோ செயல்பட்டு கொண்டிருந்தது. பல வெற்றிப்படங்களையும், நட்சத்திரங்களையும் உருவாக்கிய ஏவிஎம் ஸ்டூடியோவின் அந்த உலக உருண்டை அப்படியே எதிர்ப்புறம் சுற்றிக்கொண்டிருந்தது. இந்த இரண்டுக்கும் பக்கத்திலேயே விக்ரம் ஸ்டூடியோ. அப்படியே ஆர்காட் சாலையில் இருந்து வலப்பக்கம் திரும்பினால், அருணாச்சலம் சாலையில் எல்.வி. பிரசாத் ஸ்டூடியோ. அந்த சாலையிலேயே மோகன் ஸ்டூடியோ, கற்பகம் ஸ்டூடியோ என கோலிவுட் ரொம்பவே பரபரப்பாக இருந்து.

ஒரு பக்கம் எம்ஜிஆர், சிவாஜி படங்களின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தால், பக்கத்து ஃப்ளோரில் ரங்கராவ், நாகேஸ்வர ராவ் படங்களின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தன.

தெலுங்கு நட்சத்திரங்கள் பலர் சென்னைவாசிகளாகவே இருந்தனர். இன்றைக்கு தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருக்கும் அவர்களது குழந்தைகள் சென்னை பள்ளிகளில், கல்லூரிகளில்தான் படித்து கொண்டிருந்தனர்.

ஆக இப்படியாக சென்னை, டோலிவுட்டின் தலைநகரமாகவும் இருந்தது வரலாறு.

1980-களின் பிந்தைய ஆண்டுகளில், மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது. தெலுங்கு சினிமா உலகம் தனது ஜாகையை ஹைதராபாத்திற்கு மாற்றியது. தெலுங்கு படங்களின் ஷூட்டிங் ஹைதராபாத்திலேயே நடைபெற்றன. இங்கே சென்னைவாசிகளாக இருந்த நட்சத்திரங்கள், தங்களது குடும்பத்தோடு ஹைதராபாத்தில் செட்டில் ஆனார்கள்.

ஹைதராபாத் டோலிவுட்டின் தலைநகரம் ஆனது.

தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா தனித்தனி அடையாளங்களைப் பெற்றன. இதற்குப் பிறகு நட்சத்திரங்களுக்கான சங்கம், தயாரிப்பாளர்களுக்கான சங்கம் என எல்லாமும் தெலுங்கு சினிமாவுக்கென உருவாக்கப்பட்டன.

ஒரே ஸ்டூடியோவில் பக்கத்து பக்கத்து ஃப்ளோர்களில் இருந்து கொண்டு நடிப்போடு நட்பையும் ஒன்றாகவே கொண்டாடிய தமிழ், தெலுங்கு நட்சத்திரங்கள் பங்காளிகளைப் போல் வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்தனர்.

தெலுங்கு சினிமாவை ரசிகர்கள் அதிகம் நேசித்தனர். இங்கு படங்களை தோல்வி படங்களாக அவர்கள் பார்க்கவில்லை. அதனால் சினிமா வாழ்ந்து கொண்டே வளர்ந்தும் கொண்டே இருந்தது.

இங்கே ரசிகர்கள் நட்சத்திரங்களை கொண்டாடினார்கள். ஒரு ஹீரோவின் ரசிகர்கள் அவருக்கு போட்டி ஹீரோவின் படங்கள் தோல்வியா இல்லையா என்பதில் அதிகம் அக்கறை காட்டினர்.

இப்படி தனித்தனியாக பயணிக்க ஆரம்பித்த தமிழ் சினிமாவும், தெலுங்கு சினிமாவும் தங்களுக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கிவிட்டன.

தென்னிந்திய சினிமாவில் வித்தியாசமான கதை, புதுமையான முயற்சி, மிரட்டும் தொழில்நுட்பம் என தமிழ் சினிமா போகிறப்போக்கில் கன்னட சினிமாவையும், தெலுங்கு சினிமாவையும் ஓரங்கட்டியது. மலையாள சினிமாவில் புதுமையான கதைகள் இருந்தாலும், அதன் மார்க்கெட் மிகச்சிறியது, என்பதால் அங்கு பிரம்மாண்டமான படங்களுக்கு பெரிய அளவில் அக்கறை காட்டப்படவில்லை. ஆக தமிழ் சினிமா தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக கொண்டாடப்பட்டது.

தமிழ் சினிமாவில் மணிரத்னம், ஷங்கர் புது வண்ணங்களையும், எண்ணங்களையும் காட்ட தமிழ் சினிமா தொழில்நுட்பத்திற்காகவும் பாராட்டப்பட்டது.

இந்த ட்ரெண்ட் எல்லாம் 2015 வரையில்தான்.

’பாகுபலி’ என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் அதிர வைத்தார் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி.

பாடல்களுக்கு வயல்வெளியின் வழியே ஓடும் பெயிண்ட் அடிக்கப்பட்ட ரயில், ஆயிரம் பேர் ஆட பரபரக்கும் பாடல்கள், பல கோடி பட்ஜெட்டில் சண்டைக்காட்சிகள் என பிரம்மாண்டத்திற்கு ஒரு அடையாளத்தை உருவாக்கி இருந்த ஷங்கரின் இமேஜை உரசிப்பார்த்தது ராஜமெளலியின் ’பாகுபலி’

படைப்பாளியான ராஜமெளலி ஒரு வியாபார வித்தகராக யோசித்ததுதான் பான் – இந்தியா மார்க்கெட். அவ்வளவுதான் அடுத்தக்கட்டத்திற்கான பாய்ச்சலோடு வேகமெடுத்தது தெலுங்கு சினிமா.

ராஜமெளலி இயக்கிய பாகுபலி -1, பாகுபலி -2, ஆர்.ஆர்.ஆர். இந்த மூன்று படங்களும் தெலுங்கு வட்டாரத்தில் மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என முக்கிய மொழிகளின் சினிமா மார்க்கெட்டிலும் நல்ல வசூலைப் பெற்றன.

பாகுபலி வரிசைப் படங்களைப் போலவே, சாஹோ, புஷ்பா, ராதேஷ்யாம், என அடுத்தடுத்து வெளிவந்த படங்களையெல்லாம் பான் – இந்திய படங்களாக முன்வைத்தது தெலுங்கு சினிமா.

இந்திய சினிமாவின் பெரிய மார்க்கெட்டான ஹிந்தி மார்க்கெட்டிலும் தெலுங்குப் படங்களுக்கு புதிதாக வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. இதனால் தமிழ் சினிமா பார்க்காத வசூலை தெலுங்குப் படங்கள் அறுவடை செய்தன.

ஆனால் இங்கே தமிழ்ப்படங்கள் வசூலில் கல்லா கட்ட முடியாமல், தெலுங்கு சினிமாவின் வளர்ச்சியை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தது.

தெலுங்குப் படங்களின் இந்த மாபெரும் வளர்ச்சிக்கு காரணம், ரசிகர்களை ஆவலோடு பார்க்க வைக்க தூண்டும் ப்ரமோஷன், வியாபாரத்தில் நுணுக்கமான யுக்திகள். பான் – இந்திய படமாக முன்வைக்க இயக்குநர், ஹீரோக்கள், ஹீரோயின்கள் என ஒட்டுமொத்த படக்குழுவும் ஹைதராபாத்தை தாண்டி, சென்னை, பெங்களூரு, மும்பை, திருவனந்தப்புரம் என இந்தியாவின் முக்கிய நகரங்களில் ப்ரமோஷனுக்காக முக்கியத்துவம் கொடுத்தது. இந்த மெனக்கெடல் தெலுங்குப் படங்களுக்கு ஒரு எதிர்பார்பை உருவாக்கின. இதேபோல் கன்னடத்தில் கேஜிஎஃப் வரிசைப் படங்களுக்கும் கொடுத்த ப்ரமோஷன் நல்ல பலனை கொடுத்தது.

இங்கே அந்தமாதிரியான எந்த சிறப்பு அம்சங்களும் பெரும் ஹீரோக்களின் படங்களுக்கும் கொடுக்கப்படவில்லை. உதாரணத்திற்கு விஜய் நடித்த நேரடி தெலுங்குப் படமான ‘வாரிசுடு’ ப்ரமோஷனுக்கு விஜய் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஆனால் கமல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த ‘விக்ரம்’ படத்தின் ப்ரமோஷனுக்கு துபாய்க்கும் பறந்தார். விளைவு கமல் இதுவரை பார்த்திராத வசூலை, லாபத்தை முதல் முறையாக ருசித்தார்.

இப்படியொரு சூழலில், தெலுங்குப் படங்கள்தான் அதிக வசூலைப் பெறுகின்றன. தமிழ்ப்படங்கள் இன்னும் அந்தளவிற்கு வேகமெடுக்கவில்லை என்ற கருத்துகள் பரவலாக பகிரப்படுகின்றன.

அப்படியானால் உண்மை நிலவரம் என்ன??

தெலுங்கு சினிமா தமிழ் சினிமாவை ஓரங்கட்டியதாக பேச்சு இருந்தாலும், உண்மையில் இப்பொழுதும் தமிழ் சினிமாவின் மார்க்கெட்தான் மிகப்பெரியதாக இருக்கிறது என்பதே தற்போதைய நிலவரம்.

‘ஜெயிலர்’ படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ், முதல் வார வசூல் இவ்வளவுதான் என 375.40 கோடிகளைக் குறிப்பிட்டு இருக்கிறது. ஜெயிலர் இந்த வசூல் பாக்ஸ் ஆபீஸில் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. இதற்கு காரணம் ‘ஜெயிலர்’ படம் ஒரு தமிழ்ப் படமாகதான் வெளியிடப்பட்டு இருக்கிறது. பான் – இந்திய படமாக ஆரம்பத்திலிருந்து ப்ரமோஷன் செய்யப்படவில்லை.

ராஜமெளலியின் படங்களைத் தவிர்த்து இதர தெலுங்கு நட்சத்திரங்களின் படங்களுக்கும் ஹிந்தி மார்க்கெட்டில் ஒரு வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் இப்படங்கள் ஓரளவிற்கு வசூலை தொடர்ந்து பெற்று வருகின்றன. ஆனால் ராஜமெளலி இயக்கத்தில் இல்லாமல், வெளிவந்த படங்களான சமீபத்திய ‘வால்டர் வீரய்யா’, ’வீரசிம்ம ரெட்டி’, மாதிரியான பெரிய ஹீரோக்களின் படங்களின் வசூல் தமிழ்ப்படங்களின் வசூலை விட குறைவு.

அதேநேரம் இங்கே தமிழில் விக்ரம், பொன்னியின் செல்வன், ஜெயிலர் என பெரிய படங்களின் வசூல் 300 கோடிகளுக்கும் மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

’ஜெயிலர்’ படத்தை ஒரு பான் – இந்திய படமாக ஆரம்பத்திலிருந்தே ப்ரமோஷன் செய்திருந்தால் இதன் வசூல் இரண்டு மடங்காகி இருக்கும் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரப் புள்ளிகள்.

ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவ்ராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப் என பல்வேறு நட்சத்திரங்களை நடிக்க வைத்ததற்கான பலன் முதல் முயற்சியிலேயே பக்காவாக வெற்றிக்கண்டிருக்கிறது. அடுத்து விஜயின் ‘லியோ’ இதே பாணியில் மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் வெளிவர இருக்கிறது. லியோவை ஒரு பான் – இந்திய படமாக ப்ரமோஷன் செய்யும் போது அதற்கான வசூலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜமெளலி என்ற ஒரு மெகா டைரக்டரை தவிர்த்துப் பார்த்தால், இதர தெலுங்குப் படங்களின் வசூல் தமிழ்ப்படங்களின் வசூலை விட குறைவே.

இப்படி கூட்டிக்கழித்துப் பார்த்தால் தமிழ் சினிமா மார்க்கெட் இன்னும் சிறப்பாகதான் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...