No menu items!

ஜஸ்பிரித் பும்ரா நம்பர் 1

ஜஸ்பிரித் பும்ரா நம்பர் 1

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜஸ்பிரித் பும்ரா. இதன்படி இன்றைய சூழலில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இவர்தான் நம்பர் 1 பந்துவீச்சாளர். இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் 6-வது இடத்திலிருந்து ஒரே வாரத்தில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார் பும்ரா.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் ஒருநாள் போட்டிகளில் 718 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார் பும்ரா. இந்த பட்டியலில் அவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நியூஸிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட், 712 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இப்பட்டியலில் பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி (681 புள்ளிகள்) 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஹசல்வுட் (679 புள்ளிகள்) நான்காவது இடத்திலும், ஆப்கானிஸ்தானின் முஜிபுர் ரஹ்மான் (676 புள்ளிகள்) ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

இந்தியப் பந்துவீச்சாளர், அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் சர்வதேச அளவில் முதலிடத்தை பெறுவது சற்று கஷ்டமான விஷயம்தான். இந்தச் சாதனையை ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன் செய்த பும்ரா, பின்னர் பட்டியலில் பின்தங்கி இருந்தார். தற்போது மீண்டும் போராடி முதல் இடத்துக்கு வந்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் உச்சாணிக் கொம்பில் பும்ரா நிற்பதற்கு காரணம், அவரது யார்க்கர்கள். பும்ராவின் ஸ்பெஷல் ஆயுதமான யார்க்கர் பந்துவீச்சுக்கும் அவரது அம்மாவின் தூக்கத்துக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

சிறு வயதில் கிரிக்கெட்டில், குறிப்பாக பந்து வீச்சில் ஆர்வம் கொண்டிருந்த பும்ராவுக்கு அவரது தாயார் தல்ஜீத் 2 கட்டளைகளை போடுவது உண்டு. முதல் கட்டளை வீட்டுக்குள் விளையாட வேண்டும். 2-வது கட்டளை, விளையாட்டின்போது சத்தம் எழுப்பி தனது தூக்கத்தை கெடுக்கக் கூடாது.

இந்த 2 கட்டளைகளையும் நிறைவேற்ற பும்ரா ஒரு வழியைக் கண்டுபிடித்தார். தன் வீட்டு ஹாலில் தரையும், சுவரும் இணையும் ஸ்கர்டிங் பகுதியில் குறிபார்த்து பந்து வீசுவதுதான் அந்த வழி. அப்படிச் செய்ததால் ஒரே இடத்தில் குறிபார்த்து பந்து வீசும் பயிற்சி பெறுவதுடன் அதிக சத்தம் வராமலும் அவரால் ஆட முடிந்தது. அப்படி குறிபார்த்து பந்து வீசிப் பழகியதுதான் இன்று மிக நேர்த்தியாக பேட்ஸ்மேனின் கால்களுக்கு நெருக்கமாக யார்க்கர்களை வீச அவருக்கு உதவுகிறது.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதல் இடத்தையும் பெற உதவியது.
பும்ராவின் தந்தையான ஜஸ்பீர் சிங் இளம் வயதிலேயே ஹெபடைடிஸ் பி நோயால் இறக்க, பும்ராவையும் அவரது சகோதரியையும் பள்ளி ஆசிரியையான தாயார் தல்ஜீத்தான் வளர்த்துள்ளார்.

14-வது வயதில் தான் ஒரு கிரிக்கெட் வீரராக விரும்புவதாக தாயாரிடம் கூறியுள்ளார் பும்ரா. அவரது அம்மாவுக்கு பும்ராவை கிரிக்கெட்டில் ஈடுபடுத்துவதில் அவ்வளவு விருப்பமில்லை. தனது மகன் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்றுதான் அவர் விரும்பியுள்ளார், ஆனால் பும்ரா, தனக்கு கிரிக்கெட் வீரராக வருவதில்தான் ஆர்வம் அதிகம் என்பதில் பிடிவாதமாக இருக்க, அரை மனதுடன் அவரை கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார்.

பும்ராவுக்கு சிறுவயதில் பயிற்சி கொடுத்தவரான கிஷோர் திரிவேதி, அவரைப் பற்றி கூறும்போது, “இளம் வயதிலேயே யார்க்கர்களை துல்லியமாக வீசும் ஆற்றல் பும்ராவுக்கு இருந்தது. அவன் ஆடுகளத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஒரு அடையாளத்தை வைத்து அந்த இடத்தில் துல்லியமாக பந்தை பிட்ச் ஆகச் செய்து வீசுவான். தொடர்ந்து 45 நிமிடங்கள் வரை இதேபோன்று ஓர் இடத்தில் பந்தை பிட்ச் செய்து பயிற்சி பெறுவான்” என்கிறார்.

இளவயதில் பயிற்சி பெற்றது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ள பும்ரா, “நெஹ்ரா, ஜாஹிர் கான், மிட்செல் ஜான்சன் ஆகியோர்தான் என் இளம் வயது ஹீரோக்கள். இவர்களில் யாராவது ஒருவர் குறிப்பிட்ட ஒரு ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை வீழ்த்தினால், உடனடியாக அடுத்த சில நாட்களுக்கு அதே போன்று பந்து வீசி பயிற்சி பெறுவேன். சில நாட்களுக்கு பிறகு என் அடுத்த ஹீரோ சாதிக்கும்போது, அவரது பாணியைக் கடைபிடித்து பயிற்சி மேற்கொள்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய பும்ரா, 2013-ம் ஆண்டு, சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசிய விதம் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரான ஜான் ரைட்டை கவர்ந்துள்ளது. அவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் சேர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் அவருக்கு மலிங்காவின் அறிமுகம் கிடைத்துள்ளது. ஏற்கெனவே யார்க்கர்களை வீசுவதில் வல்லவரான பும்ராவை, மலிங்கா மேலும் கூர்தீட்டினார். ஸ்டம்புக்கு முன் காலணியை வைத்து அதைக் குறிபார்த்து பந்துவீசும் தன் பயிற்சி முறையை பும்ராவுக்கு சொல்லிக் கொடுத்தார் மலிங்கா. இதனால் பும்ராவின் ஆற்றல் மேலும் கூடியது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆர்சிபி அணிக்கு எதிராக ஆடிய முதல் போட்டியிலேயே 32 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்களை பும்ரா கைப்பற்றியுள்ளார். அதில் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டும் ஒன்று. ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது சாதனைகள் இந்திய அணிக்குள் நுழைய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்திய அணிக்குள் பும்ரா நுழைந்தது, அவருக்கு மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணிக்கும் சிறப்பான மாற்றத்தை பெற்றுத் தந்தது. பொதுவாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மைதானங்களில் வேகமாக பந்துவீசும் ஆற்றல் வாய்ந்த வீரர்கள் இல்லாததால் தடுமாறி வந்தது. ஆனால் பும்ரா அணிக்குள் வந்தபின்னர் அந்த நிலை மாறியது.

பும்ராவைப் பின்பற்றி, அவரது பாணியிலேயே பந்துவீசும் வீரர்கள் உருவாக, வெளிநாடுகளில் 250 ரன்களுக்குள் எதிரணியை இந்திய வீரர்கள் கட்டுப்படுத்தி விடுவார்கள் என்ற நம்பிக்கை துளிர்த்தது. இந்தியாவும் பல வெளிநாட்டு போட்டிகளில் வென்றது.

இந்தியாவுக்காக பும்ரா செய்த சாதனைகளுக்கு பரிசளிக்கும் வகையில் இங்கிலாந்தில் நடந்த கடைசி டெச்ட் போட்டியில் அவர் கேப்டன் ஆக்கப்பட்டார். இதன்மூலம் கபில்தேவுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனான முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

இந்த சாதனை மட்டுமின்றி மேலும் பல சாதனைகளை படைக்கும் வேகத்தில் அவர் முன்னேறி வருகிறார். இந்த முன்னேற்றம் தொடரட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...