“காவாலா காவாலா” என்று பாடிக் கொண்டே உற்சாகமாய் அலுவலக அறைக்குள் வந்தாள் ரகசியா.
“ஜெயிலர் பாத்துட்ட போல” என்றோம்.
“ஆமாம். என்னைக்குனாலும் தலைவர் மாஸ்தான். என்னா ஸ்டைல்”
“படம் ஹிட் போல. நல்ல கலெக்ஷனா?”
“அப்படிதான் இண்டஸ்ட்ரில சொல்றாங்க. மொத்த முதல் நாள் வசூல் 72 கோடி ரூபாயாம்”
“72 கோடி. தமிழ்நாட்டுல மட்டும் 24 கோடி ரூபாய். ஆந்திரா, தெலங்கானா, கர்நாடாகவுல சேர்த்து 20 கோடி ரூபாய். கேரளாவுல 6 கோடி. அமெரிக்காவுல 11 கோடினு கலக்கிட்டு இருக்கு”
“அப்ப ரஜினிதான் இன்னைக்கும் சூப்பர் ஸ்டாரா?”
“கலெக்ஷன் இருக்கோ இல்லையோ அவர் சூப்பர் ஸ்டார்தான். இது முன்னால கபாலி, காலா, பேட்ட, தர்பார், அண்ணாத்தே படம்லாம் இத்தனை வேகமா கலெக்ஷன் ஆகல. அதனலா ரஜினி சார்ந்தவர்களுக்கு ரொம்ப சந்தோஷம்”
”நெல்சன் – ரஜினி படமே இவ்வளவு கலெக்ஷன்னா லோகேஷ்-விஜய் படம் எவ்வளவு கலெக்ட் பண்ணும்?”
“வீணா வம்பை இழுக்காதிங்க. ஏற்கனவே விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கு அங்கங்க சண்டை நடந்துக்கிட்டு இருக்கு”
“நமக்கெதுக்கு வம்பு. நாம அரசியல் பக்கம் போகலாம். நம்பிக்கை வாக்கெடுப்புல பாஜக ஜெயிச்சிருச்சே”
“அது ஜெயிக்கும்னு எல்லோருக்கும் தெரியும். பிரதமரை அவைல பேச வைக்கணும்கிறதுதான் எதிர்க் கட்சிகளோட நோக்கம். அது நிறைவேறிருச்சு”
‘அது மட்டும்தான் நோக்கமா?”
“இல்லை. எதிரணி எவ்வளவு ஒற்றுமையா இருக்குனு பார்க்கிறதுக்கு இது ஒரு டெஸ்ட் மாதிரி”
“மணிப்பூர் பிரச்சினை விவாதத்துல தமிழ்நாட்டைப் பத்தியும் திமுக பத்தியும்தான் பாஜகவினர் நிறைய பேசியிருக்காங்களே?”
“அதுக்கு ரெண்டு காரணம் இருக்கு. ஒண்ணு, காங்கிரசுக்கு எந்த நிபந்தனையில்லாம ஆதரவு கொடுக்கிறது திமுகதான். அதனால திமுக மேல கடுப்பு இருக்கிறது. திமுக மேல கடுப்பா இருக்கிறதை வெளில காட்டுனாதான் திமுககாரங்கள் பயப்படுவாங்கன்னும் பாஜக நினைக்கிறாங்க”
“திமுககாரங்க பயந்தா மாதிரி தெரியலையே? எதிர் பேச்சு பேசிக்கிட்டு இருக்காங்களே?”
“பேச்செல்லாம் நமக்கு தெரிறது. நமக்கு தெரியாத சில காரியங்களையும் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. திமுக அமைச்சரவைல இரண்டு அமைச்சர்கள் ரிட்டயர்டான ஒரு பெரிய மனிதரை சந்திச்சிருக்காங்க. அவரு சொந்த ஊரு ஆந்திரானாலும் அஞ்சு வருஷம் டெல்லில பெரிய பொறுப்புல இருந்திருக்காரு. அதைவிட பெரிய பொறுப்பு வரும்னு எதிர்பார்த்தாரு. ஆனா அவருக்கு அந்தப் பொறுப்பு கிடைக்கல. அந்த வாய்ப்பை அம்மையார் ஒருத்தங்களுக்கு கொடுத்துட்டாங்க. அதனால தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லினு வாழ்ந்துட்டு இருக்கிறாரு. அவர் அந்த பெரிய பொறுப்புக்கு வருவதற்கு முன்னாடி மத்திய அமைச்சரவைலயும் ரொம்ப வருஷம் இருந்திருக்கிறாரு. அவருக்கு டெல்லில தெரியாத விஷயங்களே இல்லை.”
”யாருனு புரியுது. இதுக்கு வெங்கையா நாயுடுனு அவர் பேரையே சொல்லியிருக்கலாம்”
‘அது உங்க இஷ்டம். நீங்க என்ன வேணா நினைச்சுக்கங்க. நான் என் சோர்ஸ்கிட்ட பேர் சொல்லமாட்டேன்னு சொல்லியிருக்கிறேன்” என்று சிரித்தாள் ரகசியா.
“சரி, சொல்லு எந்த அமைச்சர்கள் போய் சந்திச்சாங்க?”
“அந்தப் பேரெல்லாம் வேண்டாம். ஆனா முதல்வருக்கு வலதுகரமா இருக்கிறவங்க. டெல்லிலருந்து நடவடிக்கையா எடுத்துட்டு இருக்காங்க. கொஞ்சம் சொல்லுங்கனு சொல்லியிருக்காங்க. அவரும் பார்க்கிறேன்னு சொன்னதா ஒரு தகவல் வருது”
”திமுக அமைச்சர்கள் மேல் இன்னும் நடவடிக்கை தொடருமா?”
“ஆமாம். அடுத்த டார்கெட் அமைச்சர் மூர்த்தியா இருக்குமோன்னு கட்சிக்காரங்க சந்தேகப்படறாங்க. மதுரைக்கு நடைப்பயணம் வந்த அண்ணாமலை, அடுத்து மூர்த்தி மேல நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்னு பேசினது இந்த சந்தேகத்தை கிளப்பிவிட்டுருக்கு”
”சொத்துக் குவிப்பு வழக்குல அமைச்சர் பொன்முடியையும் அவர் மனைவியையும் வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செஞ்சதை எதிர்த்து அந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்வந்திருக்காரே?”
“கீழமை நீதிமன்றங்களோட உத்தரவுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தின் அடிப்படையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கறதா அவர் சொல்லி இருக்கார். இதுவரை நான் பார்த்ததில் மிக மோசமான வழக்கு இது. அதனால்தான் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன்னு அவர் சொல்லி இருக்கார். நீதிமன்ற வரலாற்றில் கீழமை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நீதிபதிகள் யாரும் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செஞ்சதில்லை. இது நீதிமன்ற வரலாற்றில் புதுசு. சென்ற வாரம் அமலாக்கத்துறை இந்த வாரம் உயர் நீதிமன்றம்னு தன்னை ரவுண்டு கட்டி அடிக்கறதால அமைச்சர் பொன்முடி நொந்து போய் இருக்காராம்.”
“செந்தில் பாலாஜி விவகாரம் ஏதாவது தெரியுமா?”
“செந்தில் பாலாஜிகிட்ட கைப்பற்றின சொத்து ஆவணங்களை அவர்கிட்ட காட்டி, ‘இதெல்லாம் உங்க பேர்ல இல்லை. ஆனா உங்ககிட்ட இருந்துதான் இதையெல்லாம் கைப்பற்றினோம். உங்க பேர்ல இல்லாத இந்த பத்திரங்களையும், ஆவணங்களையும் நீங்க ஏன் வச்சிருக்கீங்க? அதுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்’ன்னு அமலாக்கத்துறை அதிகாரிங்க கேட்டிருக்காங்க. அதுக்கு முதல்ல தெரியாதுன்னுதான் செந்தில் பாலாஜி பதில் சொல்லி இருக்கார். ஆனா ‘உண்மையைச் சொன்னா உங்களுக்கு நல்லது. அதனால உங்களுக்கு எந்த சிக்கலும் வராம நாங்க பாத்துக்கறோம்’னு அதிகாரிங்க சொல்லி இருக்காங்க. அதுக்கு அப்புறம் அவர் கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சு இருக்கறதா சொல்றாங்க.”
”அதிமுகவோட மதுரை மாநாட்டு வேலையெல்லாம் எப்படியிருக்கு?”
“மதுரை மாநாட்டு பொறுப்பை ஆர்.பி.உதயகுமார் ஏத்துக்கிட்டு இருக்கிறார். ஆனா இந்த மாநாட்டுக்கு நம்ம ஆளுங்க யாரையும் அனுப்பக் கூடாதுனு ஓபிஎஸ்ஸும் தினகரனும் அவங்க சமூகத்து பெரியவங்ககிட்ட சொல்லியிருக்காங்க. எடப்பாடி பழனிசாமி நம்ம சமூகத்தை கட்சியைவிட்டு அகற்றிட்டார். அவருக்கு நீங்க ஆதரவு கொடுக்கக் கூடாதுனு சொல்லிட்டு வராங்க. அதை உடைச்சு எல்லோரையும் வர வச்சுரணும்னு ஆர்.பி. உதயகுமார் போராடிக்கிட்டு இருக்கிறார்.”
“ஓபிஎஸ், தினகரன் பேச்சைக் கேப்பாங்களா? உதயகுமார் பேச்சை கேப்பாங்களா?”
“இப்போதைக்கு உதயகுமார் கைதான் ஓங்கியிருக்குனு மதுரை அதிமுகவுல பேசிக்கிறாங்க”