சகல விஷயங்களிலும் பாரதிய ஜனதாவுக்கு டஃப் கொடுப்பது என்ற முடிவில் இருக்கிறார் மம்தா பானர்ஜி. அதற்கு லேட்டஸ்ட் உதாரணம் அவரது அரசு கட்டிவரும் கோயில். இந்துக்களின் வாக்குகளை கவர மத்திய பாஜக அரசு அயோத்தியில் ராமர் கோயிலை கட்டி முடிக்க, அதற்கு நிகராக மேற்கு வங்கத்தில் ஒரு கோயிலைக் கட்டிக்கொண்டிருக்கிறார் மம்தா பானர்ஜி. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வரும் மார்ச் மாதத்தில் இந்த கோயிலின் கும்பாபிஷேகத்தை பிரம்மாண்டமாக நடத்த அவர் திட்டமிட்டு இருக்கிறார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டிகா என்ற ஊரில்தான் மம்தா பானர்ஜி கட்டிவரும் ஜகன்நாத் தாம் கோயில் அமைந்திருக்கிறது. 22 ஏக்கர் நிலப்பரப்பில், 143 கோடி ரூபாய் செலவில் இந்த கோயில் கட்டப்பட்டு வருகிறது. தான் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பாஜகவின் பிரச்சாரத்தை முறியடிக்க, நடாளுமன்றத் தேர்தலுக்குள் இந்த கோயிலைக் கட்டி கும்பாபிஷேகத்தை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் மம்தா பானர்ஜி. மம்தாவின் கட்டளையைத் தொடர்ந்து கோயில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து வருகிறார்கள்.
ஜகன்நாத் தாம் கோயிலைக் கட்டும் பணிகள் 2019-ம் ஆண்டில் தொடங்கியது. இடையில் கொரோனா காரணமாக சில காலம் பணிகள் தடைபட்ட நிலையில் 2021-ம் ஆண்டுமுதல் இதன் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. இப்போது இந்த கோயிலின் கட்டுமானப் பணிகள் வேகமாக நிறைவடைந்து வருகின்றன. இந்த பணிகளில் ஒரிசா, பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1,000 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அயோத்தி ராமர் கோயிலைக் கட்ட பயன்படுத்தப்படும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சலவைக் கற்கள் இந்த கோயிலைக் கட்டவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த லியாகத் அலி என்ற 72 வயது கைவினைக் காலைஞரின் தலைமையில் ஏராளமான கலைஞர்கள் இந்த கோயிலுக்கான தூண்களை அழகான வேலைப்படுகளுடன் தயாரித்து வருகிறார்கள்.
இதைக் கோயில் என்று மேற்கு வங்க அரசு சொன்னாலும், “அது கோயில் அல்ல. வெறும் கலாச்சார மையம்தான். பாஜகவுக்கு போட்டியாக செயல்பட வேண்டும் என்ற காரணத்துக்காக மக்களின் வரிப்பணத்தை வீணடித்து மேற்கு வங்க அரசு இதைக் கட்டி வருகிறது” என்று மேற்கு வங்க பாஜகவினர் புகார் கூறுகிறார்கள். பதிலுக்கு பாஜக மட்டும் அயோத்தியில் கோடிக்கணக்கில் செலவு செய்து கோயில் கட்டவில்லையா என்று குரல் எழுப்புகிறார்கள் திருணாமூல் காங்கிரஸ் கட்சியினர்.