No menu items!

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி தப்புமா? – மிஸ் ரகசியா

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி தப்புமா? – மிஸ் ரகசியா

“சிஎம் செம்ம கடுப்பில் இருக்கிறார்” என்று பரபரப்பாக உள்ளே வந்தாள் ரகசியா.

“என்னாச்சு? செந்தில் பாலாஜி மேட்டரா?”

’செந்தில் பாலாஜி மேட்டருக்கு அப்புறம் வரேன். சிஎம் கடுப்புக்கு காரணம் கவர்னர் ரவி. சும்மா போய் தொழிலதிபர்களை சந்திச்சு பேசுனாலாம் முதலீடு வராதுனு துணைவேந்தர்கள் மாநாட்டுல கவர்னர் பேசுனது முதல்வருக்குப் பிடிக்கல. இப்பதான் முதல்வர், சிங்கப்பூர், ஜப்பான்லாம் முதலீட்டுக்காக போய்ட்டு வந்தார். நேரடியா தன்னையே தாக்கியிருப்பதாக முதல்வர் வருத்தப்பட்டிருக்கிறார்”

“ஆமாம். கவர்னரும் ரொம்ப ஓவராதான் பேசியிருக்கிறார். சிஎம் என்ன செய்யப் போகிறார்?”

“கவர்னருக்கு எதிரா உச்ச நீதிமன்றத்துல வழக்குப் போடலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க. ஆனா தனியா மாநில அளவுல செய்யாம எதிர்க் கட்சிகள் இணைந்து வழக்குப் போட்டு கவர்னர் பதவியை முடக்கிறதோ அல்லது அவரது அதிகாரங்களை குறைக்கிறதோ பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க. இன்னைக்கு காலைலருந்து பல வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள்கிட்ட ஆலோசனை கேட்டுக்கிட்டு வராங்க”

”எல்லா எதிர்க் கட்சிகளும் ஒண்ணா வருமா? பாட்னாவுல நடக்கிறதா இருந்த எதிர்க் கட்சிகள் கூட்டமே தள்ளிப் போயிருக்கே?”

“ஆமாம். ரயில் விபத்து காரணமா தள்ளிப் போட்டுருக்காங்க. அது மட்டுமில்ல ராகுல் காந்தி அமெரிக்காவுல இருக்கிறார். ராகுல் இல்லாம கூட்டம் வேண்டாம்னு திமுக சொல்லியிருக்கு. அது மட்டுமில்ல, ஒருங்கிணைந்த எதிர்க் கட்சிகள் கூட்டத்தை சென்னைல நடத்தலாம்னு ஸ்டாலின் யோசிக்கிறாராம். இங்க நடத்தின் எதிர்க் கட்சித் தலைவர்களை கவர்னருக்கு எதிரா பேச வைக்கறதுக்கும் ஒரு திட்டம் இருக்கு”

”எதிர்க் கட்சிகள் இப்படி முனைப்பா இருக்கும்போது ராகுல் காந்தி இங்க இல்லையே?”

“அமெரிக்கா பயணம் இந்த வாரம் முடிஞ்சுருது. ராகுல் காந்தி வெளிநாடு போவதை எலெக்‌ஷன் வரைக்கும் நிறுத்திக்கணும்னு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேகிட்ட ஸ்டாலின் சொன்னதாகவும் ஒரு தகவல் இருக்கு”

“அவர் என்ன சொன்னாராம்?”

“நான் சொன்னா சரியா இருக்காது, நீங்க பிரியங்கா காந்திக்கிட்ட சொல்லுங்க. பிரியங்கா சொன்னா ராகுல் கேட்டுப்பாருனு சொல்லியிருக்கிறார்”

“சரி, செந்தில் பாலாஜி மேட்டரை சொல்லு…அவரை அமைச்சரவைலருந்து நீக்கப் போறாங்கனு சொல்றாங்களே? அப்படியா?”

“ஆமானும் சொல்ல முடியல இல்லனும் சொல்ல முடியல. முன்னலாம் ஒரு வாரத்துல ரெண்டு நாளாவது சிஎம் கூட மதிய உணவோ இரவு உணவோ சாப்பிடுவாரு செந்தில் பாலாஜி. ஆனால் இப்ப அது நின்னுப் போச்சு. வருமானவரித் துறை சோதனைக்கு அப்புறம்தான் இந்த மாற்றம். இதைதான் அறிவாலயத்துல பேசிக்கிறாங்க. அதனால அவர் பதவிப் போகுதுனு பேச்சு வந்திருக்கு.”

“சிஎம் கூப்பிடலனா சிஎம் குட் புக்ஸ்ல செந்தில் பாலாஜி இல்லனுதானே அர்த்தம்?”

“ஆமா நீங்க சொல்ற லாஜிக் கரெக்ட். ஆனா சிஎம் குட்புக்ஸ்ல இல்லனா செந்தில்பாலாஜி சோகமா இருக்கணும்ல. அவர் அப்படி இல்லை. ரொம்ப உற்சாகமா எல்லோரையும் தலைவானு கூப்பிட்டுக்கிட்டு ஜாலியா இருக்கார். இப்படி ரெண்டு விதமா இருந்தா எதைனு சொல்றது?”

“உனக்குதான் எல்லா இடத்திலேயும் சோர்ஸ் இருக்குமே? அவங்க என்ன சொல்றாங்க?”

“இப்போதைக்கு செந்தில் பாலாஜி பதவிக்கு பிரச்சினை இல்லைனு சொல்றாங்க”

”பிடிஆர் பதவி எப்படி? அவர் அமெரிக்காவுக்குப் போகிறார்னு திரும்பத் திரும்ப சொல்றாங்களே?”

“இந்து அறநிலையத் துறை அமைச்சராக்குங்கள் என்று முதல்வருக்கு தூது விட்டிருக்கிறார். ஆனால் முதல்வர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம். இந்தத் துறையை சிறப்பா நடத்துங்கனு சொல்லியிருக்கிறார். அதுல பிடிஆர் கொஞ்சம் அப்செட். என்ன நடக்குதுன்றதை பொறுத்திருந்து பார்ப்போம்”

”தமிழ்நாட்டுல வருமானவரித் துறை சோதனையெல்லாம் முடிஞ்சிருச்சா?”

”வருமான வரித்துறை சோதனை இரண்டாம் பாகம் கரூரில் தொடங்கும் என்கிறார்கள். ஏற்கனவே நடந்த சோதனைகளின் அடிப்படையில் புதுசா 18 பேர் பட்டியலை தயார் பண்ணியிருக்காங்களாம். அந்த 18 பேர் வீடுகள் அலுவலகங்களில் சோதனை நடக்குமாம்”

“ஏற்கனவே நடந்த சோதனை விவரம் எதுவும் வெளில வரலையே?”

“அந்த வேலையும் நடந்துக்கிட்டுதான் இருக்கு. நிறைய பேருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கு. நோட்டீஸ் வந்தவங்களாம் விசாரணைக்கு வந்துட்டு போய்ட்டு இருக்காங்க. செந்தில் பாலாஜி சகோதரர் மூணு தடவை விசாரணைக்கு வந்திருக்கிறார்”

”பல்கலைக் கழக துணை வேந்தர்கள் வருத்தமா இருக்காங்கனு ஒரு நியூஸ் வருதே?”

”ஆமாம். உண்மைதான். கவர்னர் ரவி பேச்சை கேக்குறதா அமைச்சர் பொன்முடி பேச்சைக் கேக்குறதானு குழப்பத்துல இருக்காங்க. நாங்கதானே சம்பளம் கொடுக்கிறோம் அரசு பேச்சைக் கேளுங்கனு அமைச்சர் சொல்றாராம். அதுக்கு நேர்மாறா கவர்னர் உத்தரவு போடுறாராம். துணை வேந்தர்கள் கவர்னர் சொல்றதைதான் கேக்குறாங்கன்ற வருத்தம் அமைச்சருக்கும் இருக்கு”

“அண்ணாமலை பிறந்த நாள் சிறப்பா போச்சு போல. ஒரே வாழ்த்தா குவிஞ்சிருக்கே”

”நல்லா கவனிச்சிங்களா.. சிலர்கிட்டருந்து வாழ்த்துக்கள் வரல”

“அப்படியா? யார்கிட்டருந்துலாம் வரல?”

“கூட்டணிக் கட்சியான அதிமுகவின் தலைவர் எடப்பாடி பழனிசாமிகிட்டருந்தோ அதிமுக சார்ந்தவங்ககிட்டருந்தோ வரல. இதை அரசியல்ல முக்கியமா பார்க்கிறாங்க. அண்ணாமலை பிறந்த நாளுக்கு ரெண்டு நாள் முன்னாடி வந்த தமிழிசை பிறந்த நாளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து சொன்னார். ஆனால் அண்ணாமலைக்கு வாழ்த்து சொல்லல”

”அந்த அளவு நட்பு இருக்குப் போல. இதுக்கு அண்ணாமலை என்ன ரியாக்ட் பண்ணார்?”

“அவர் யாரைப் பத்தியும் கவலைப்படல. நான் செய்யறதைதான் செய்வேன் என் வழி தனி வழினு போய்க்கிட்டு இருக்கார்”

”எஸ்.வி.சேகர் வேற அவருக்கு எதிரா ஓபனா பேசிக்கிட்டு இருக்காரே?”

“அண்ணாமலை தலைவரா இருந்தா பிராமணர்கள் பாஜகவுக்கு ஓட்டுப் போட மாட்டாங்கனு சொல்றார். பிராமணர்கள் ஓட்டு அதிமுகவுக்குப் போகும்னு கட்சித் தலைமைக்கும் சொல்லியிருக்கிறாராம். அது மட்டுமல்லாம் பாஜகவிலிருக்கிற பிராமணர்கள் அனைவரையும் ஒன்று திரட்டவும் முயற்சிக்கிறார். அதுக்கு அத்தனை வரவேற்பு இல்லைனு சொல்றாங்க. எஸ்.வி.சேகர் ஒரு பிரச்சினைனா ராதாரவியும் பிரச்சினையைக் கிளப்பிக்கிட்டு இருக்கார்”

”அவர் என்ன செய்யறார்?”

“மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவங்களுக்கு பாஜகவுல மதிப்பு இல்ல, அதிமுகவுக்கு போயிரலாம்னு கூப்ட்டுக்கிட்டு இருக்கிறாராம். பாஜகவிலிருந்து சிலர் அதிமுகவுக்குப் போக வாய்ப்பிருக்கிறது”

“தமிழ்நாடு பாஜகவுல இத்தனை குழப்பமா?”

”ஏதோ அசைவு இருக்கிறதுனாலதானே குழப்பம் வருது. அந்த வகைல பாஜககாரங்களுக்கு மகிழ்ச்சிதான்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...