விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.
இந்தப் பின்னணியில் தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் கூட்டணி நிலவரத்தைப் பார்ப்போம்.
அ.தி.மு.க வுடன் ஏறக்குறைய பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி உருவாகி விட்டது என்றே சொல்லலாம். ஆனால் இந்தக் கூட்டணி இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதற்கு ஒரே காரணம்தான். மாநிலங்களை உறுப்பினர் சீட்டையும் பாமக கேட்கிறது. அதற்கு இன்னும் அதிமுக இணங்கவில்லை. இந்த கூட்டணிக்கு அடித்தளம் போட்டவர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். 7 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒரு ராஜ்ய சபை இடம் என்று அதிமுக கூறுகிறது. ஆனால் பாமக 9 நாடாளுமன்றத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபை இடமும் கேட்கிறது. 7/1 என கூட்டணி முடியும் என்று தெரிகிறது.
அதிமுக – தேமுதிக கூட்டணியும் ஓரளவு முடிந்து விட்டது என்றே கூறலாம். ஆனாலு இரண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை. பாமகவை போலவே ஒரு ராஜ்ய சபை இடம் கேட்கிறது தேமுதிக. தன் தம்பி சுதீஷ்காக மாநிலங்களவை சீட் கேட்கிறார் பிரேமலதா. பாமகவுக்கும் ராஜ்ய சபா சீட் கொடுத்து தேமுதிகவுக்கும் கொடுப்பதில் அதிமுகவுக்கு தயக்கம் இருக்கிறது. அடுத்து தேர்தல் செலவுக்கு நிதியும் கேட்கிறதாம் தேமுதிக. இதுவும் கொஞ்சம் இடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சரி செய்யப்படும் என்கிறார் ஒரு அதிமுக மூத்த தலைவர். எடப்பாடியார் எல்லோரையும் வளைத்து விடுவார் என்று பெருமை பொங்க கூறுகிறார்.
திமுக தரப்பிலும் கூட்டணி வேலைகல் வேகமாக நடந்துக் கொண்டிருக்கின்றன. இதுவரை இடதுசாரி கட்சிகள், இந்திய இந்திய தேசிய முஸ்லீம் லீக் மற்றும் கொங்கு கட்சி கூட்டணி மட்டும் உறுதியாகி விட்டது. இடதுசாரி கட்சிகளிடம் ஒரு மாக்களவை தொகுதி ஒரு மாநிலங்களவை இடம் என்று திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் இரண்டு மக்களவை தொகுதிகள் என்பதில் உறுதியாக இருந்து விட்டார்கள்.
விடுதலை சிறுத்தைகள் குறைந்தது மூன்று இடங்கள் வேண்டும் அதுவும் பானை சின்னத்தில் தான் நிற்போம் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். நான் சிதம்பரத்தில் போட்டியிட இருக்கிறேன் என்று திருமாவளவன் கூறியிருக்கிறார். கடந்த தேர்தல் போலவே இந்த முறையும் அவர்களுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படும். கடந்த முறை ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் ரவிக்குமார் போட்டியிட்டார். இந்த முறை இரண்டு தொகுதிகளிலுமே பானை சின்னத்தில் நிற்க விசிக விரும்புகிறது. அதனால் இழுபறி இருக்கிறது.
ம.தி.மு.க விற்கு ஒரு சீட்டு தான் என்ற போது அவர்கள் இரட்டை விரலை காட்ட. சரி அப்படியானால் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று அறிவாலயம் கோரிக்கையை கேட்டு தாயகம் ஆடி விட்டது. பம்பரம் சின்னம் இல்லாமல் எவ்வளவு காலம் நிற்பது? தேர்தல் ஆணையத்தின் எங்கள் கட்சிக்கு வேண்டாமா? என்று கேட்டிருக்கிறார்கள். கடந்த முறை போலவே இந்த முறையும் மதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும்.
திமுக – காங்கிரஸ் கூட்டணியும் ஏறக்குறைய முடிந்த நிலையில்தான் இருக்கிறது. கடந்த முறை தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் கொடுக்கப்பட்டு அதில் தேனி தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. அதே போல் இந்த முறையும் காங்கிரசுக்கு 9 தொகுதிகளை கொடுக்க திமுக முன் வந்திருக்கிறது. ஆனால் காங்கிரஸ் 10 தொகுதிகள் கேட்கிறது.
திமுகவுக்கு இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. மக்கள் நீதி மய்யத்துக்காக கமல் இரண்டு தொகுதிகள் கேட்கிறார். காங்கிரசுக்கு பத்து தொகுதிகள் தருகிறோம். அதில் ஒரு தொகுதியை கமலுக்கு கொடுத்து அவரை கை சின்னத்தில் போட்டியிடச் செய்யலாம் என்கிற யோசனை முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு காங்கிரசும் கமலும் இன்னும் சம்மதிக்கவில்லை.