சினிமாவில் வாரிசுகள் [varisu] நடிக்க வந்தால், குறிப்பாக ஹீரோயினாக அறிமுகமானால், ரொம்பவே அலட்டல்கள் இருக்கும். கூடவே ஓட்டை விழுந்த ஒசோன் வளையத்தை போல் இல்லாமல் பாதுகாப்பு வளையங்கள் அதிகமிருக்கும். பேட்டி என்று வந்துவிட்டால் பத்திரிகையாளர்கள் ஒரு கேள்வியைக் கேட்பதற்கு முன்பாக கேள்விகளை ஹீரோயினுக்கு அனுப்பவேண்டும். அதை தாண்டி கேள்வி கேட்டால் என் அம்மாவைக் கேட்கவேண்டும்’ என்ற வகையறாவில் பல வாரிசு நடிகைகள் அடக்கம்.
இதில் முற்றிலும் மாறுப்பட்டவராக இருக்கிறார் கல்யாணி ப்ரியதர்ஷன் [Kalyani Priyadarshan]. அப்பா ப்ரியதர்ஷன். பெரும் இயக்குநர் [Director]. அம்மா லிஸி. முன்னாள் முன்னணி நடிகை [Actress]. இப்படி இருந்தும் இவர்கள் இருவரையும் தனது படவிவகாரங்களில் தலையிட கல்யாணி ப்ரியதர்ஷன் விடுவதில்லை.
‘கதை கேட்க, படம் கமிட் பண்ண அப்பா அம்மாகிட்ட கேட்க மாட்டீங்களா என்று கேட்கிறார்கள். சினிமா சம்பந்தமில்லாத விஷயங்களில் அவங்களோட கருத்தை கேட்பேன். ஆனால் சினிமா என்பது என் வாழ்க்கை. நடிக்க வந்தது, இத்தனை படங்களில் நடித்தது எல்லாமே என்னோட தனிப்பட்ட முடிவுதான்.
பத்தாவது படித்து முடித்த பிறகு நான் சிங்கப்பூர்ல போர்டிங் ஸ்கூலில் படித்தேன். அடுத்து அமெரிக்காவில் படித்தேன். அங்கேயே வேலையும் பார்த்தேன். இப்படி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நான் யாருடைய ஆதிக்கமும் இல்லாமல் தனியாக, சுதந்திரமாக வளர்ந்தவள்.
சினிமாவில் நடிக்கும் போது மட்டும் நான் ஏன் அம்மாவையோ அப்பாவையோ கதை கேளுங்கள். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வாருங்கள் என்று கேட்கவேண்டும். ஒரு படம் கமிட்டானால், இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று அவர்களிடம் சொல்வேன் அவ்வளவுதான். என்னுடைய அப்பாவும் அம்மாவும் எனக்கான ஒரு இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.’’ என்று வெளிப்படையாகவே பேசுகிறார் கல்யாணி ப்ரியதர்ஷன்.
கவர்ந்திழுக்கும் காந்தத்தை இழந்த காந்தாரா
கன்னட சினிமா உலகில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் திரையரங்குக்குச் சென்று கண்டு ரசித்த படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் ‘காந்தாரா’ [Kantara], பாக்ஸ் ஆபீஸிலும் [BoxOffice] 400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக இந்திய சினிமாவில் சூட்டைக் கிளப்பி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ‘காந்தாரா’ ஒடிடி தளத்திலும் வெளியாகி இருக்கிறது.
OTT-யில் வெளியானதுமே அதைப் பார்ப்பதற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்பும் அதிகரித்து இருக்கிறது.
ஆனால் ஒடிடி-யில் காந்தாராவைப் பார்த்தவர்கள் எல்லோரும் சொல்லி வைத்தாற்போல் அடிக்கும் கமெண்ட், ’திரையரங்கில் பார்த்தபோது இருந்த அந்த ஆத்மார்த்தமான உணர்வும், ஈர்ப்பும் இப்போது இல்லை’ என்பதே.
விஷயம் இதுதான். ‘காந்தாரா’ பெரும் வரவேற்பைப் பெற்றதுக்கும், எல்லோரையும் கதையின் களத்திற்குள் கவர்ந்து இழுத்ததிற்கும் காரணம் ‘வராஹ ரூபம்’ [Varaja Roopam] பாடல்.
இந்தப் பாடலின் இசை கேரளாவைச் சேர்ந்த ‘தாய்க்குடம் ப்ரிட்ஜ்’ [Thaikudam Bridge]-ன் ‘நவரசம்’ [Navarasam] பாடலை அப்படியே தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு சர்ச்சை கிளம்பியது. இதை நீதிமன்றமும் ஆமோதிக்க, வேறு வழியில்லாமல் அப்பாடலை திரையரங்குகளில் இருந்து நீக்க வேண்டும். டிஜிட்டல் தளங்களிலும் பயன்படுத்த கூடாது’ என்று தீர்ப்பு வெளியானது.
இதனால் ‘காந்தாரா’வை ஒடிடி-யில் வெளியிட்ட நிறுவனம் இப்பாடலை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக வேறொரு பாடலை பின்னணியில் ஓடவிட்டிருக்கிறது. இப்படியொரு சூழலில் ’வராஹ ரூபம்’ இல்லாத ’காந்தாரா’ முதலில் படம் பார்க்கும் போது ஒரு வழக்கமான படம் பார்ப்பதைப் போல இருப்பதாக படம் பார்த்துவிட்டு கமெண்ட் அடித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
பகவானின் பரிசு என் மகன்கள் – புது அம்மா நமீதா
கவர்ச்சியில் ‘மச்சான்’களைக் கட்டிப்போட்ட நமீதா [Namitha], இப்போது மகன்களின் பாசப் பிணைப்பில் கட்டுண்டு இருக்கிறார்.
கவர்ச்சியையும், சினிமாவையும் ஓரங்கட்டிவிட்டு, இல்லறத்தில் செட்டிலான நமீதாவுக்கு டபுள் ஹிட்டாக ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள்.
சொந்த ஊரான சூரத்தில் தனது மகன்களின் பெயர் சூட்டும் விழாவை உற்சாகமாக கொண்டாடியிருக்கிறார் நமீதா.
கிருஷ்ணா ஆதித்யா, கியான் ராஜ் இதுதான் இரண்டு பொடிசுகளின் பெயர்கள். இந்த இரண்டு பெயர்களுமே கிருஷ்ணருடன் தொடர்புடைய பெயர்களாம்.