No menu items!

கவர்னர் ரவி மாற்றப்படுகிறாரா? – மிஸ் ரகசியா

கவர்னர் ரவி மாற்றப்படுகிறாரா? – மிஸ் ரகசியா

“முதல்வர் படு உற்சாகமா இருக்கார்போல. கார் ஓட்டுறார், வாக்கிங் போகும்போது மக்கள்கிட்ட பேசுறார், மேடைல பாட்டுப் பாடுறார்….உற்சாகத்துக்கு காரணம் என்ன?” என்று அலுவலகம் வந்த ரகசியாவிடம் கேட்டோம்.

“எல்லாம் கவர்னர் மேட்டர்தான். உச்ச நீதிமன்றம் கவர்னருக்கு குட்டு மேலே குட்டு வச்சதுல அவருக்கு ரொம்ப சந்தோஷம். இது மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கணும்னு மத்த தலைவர்கள்கிட்ட சொன்னாராம்”

“அதான் ஊரெல்லாம் Sign or Resignனு கவர்னருக்காக திமுககாரங்க போஸ்டர் ஓட்டுனாங்களா?”

“அது மட்டுமில்ல, உச்ச நீதிமன்றம் கவர்னரை கேட்ட கேள்வியையெல்லாம் மேடை போட்டு ஊர் ஊரா சொல்லணும்னு சொல்லியிருக்கிறார். திமுக தலைவர்களுக்கும் இதில் ரொம்ப சந்தோஷம்”

“சரி, கவர்னர் திடீர்னு டெல்லி கிளம்பி போயிருக்கிறாரே என்ன விசேஷம்? தமிழக அரசு போட்ட வழக்கை பத்தி ஆலோசனை நடத்தத்தான் ஆளுநர் டெல்லி போனாரா?”

“அப்படி இல்லைன்னு ராஜ்பவன் வட்டாரத்துல பேசிக்கறாங்க. தீபாவளி கொண்டாட ஆளுநரோட பேரன் ராஜ் பவனுக்கு வந்திருந்தார். அவரை திரும்ப கொண்டுபோய் விடத்தான் ஆளுநர் டெல்லி போனார்னு சொல்றாங்க. டெல்லில தமிழ்நாடு இல்லத்தில் தங்கின அவர் மறுநாளே சென்னை திரும்பிட்டார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, 5 மாநில தேர்தல்ல பிஸியா இருந்த்தால அவரைச் சந்திக்கல. ஆளுநரும் அதுக்கு முயற்சியும் செய்யலைன்னு சொல்றாங்க. டெல்லியில இருக்கற தன்னோட சொந்தபந்தங்களை பார்க்கத்தான் அவர் அடிக்கடி டெல்லி போறார்னு ஒரு பேச்சு இருக்கு.”

“அப்போ ஒரே அடியா சொந்தபந்தங்களைப் பார்க்க டெல்லி பக்கம் கிளம்பிட வாய்ப்பு இருக்கா?”

“அப்படியும் ஒரு செய்தி இருக்கு. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால கவர்னரை மாத்திட்டா நல்லாருக்கும்னு தமிழ்நாட்டு பாஜகவில் சிலர் டெல்லி தலைமைக்கு லெட்டர் போட்டிருக்காங்களாம். கவர்னரோட நடவடிக்கையால பாஜகவுக்கு கெட்டப் பேருனு சொல்லியிருக்காங்களாம்”

“டெல்லில என்ன சொன்னாங்களாம்?”

“கவர்னரே டெல்லி அனுப்பின ஆள்தானே. அவங்க எப்படி இந்த லெட்டரை எல்லாம் பார்ப்பாங்க. ஆனாலும் கவர்னரை மாத்துறதுக்கான முயற்சிகள் நடக்கும்னு சொல்றாங்க”

”இதெல்லாம் கேட்டா முதல்வர் இன்னும் உற்சாகமா ஆகிருப்பாரே?”

“ஆமாம். ஆனா அவரோட ஹெல்த் பத்தி கொஞ்சம் கவலை இருக்கு”

“என்னாச்சு?”

” முதல்வருக்கு இப்படி அடிக்கடி களைப்பு வந்துருதுனு சொல்றாங்க. கடினமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம்னு டாக்டர்கள் அட்வைஸ் பண்ணி இருக்காங்க. அதேபோல வெளியூர் பயணங்களையும் தவிர்க்கச் சொல்லி இருக்காங்க. டாக்டர்களோட கடுமையான எச்சரிக்கையாலதான் கிருஷ்ணகிரிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் செய்ய இருந்த திட்டத்தை முதல்வர் கைவிட்டார்னும் கோட்டையிலயும், அறிவாலயத்துலயும் பேசிக்கறாங்க.”

”ஆனாலும் முதல்வர் விழாக்கள்ல முதல்வர் கலந்துக்கிட்டுதானே இருக்கிறார். இன்னைக்கு கூட பி.சுசீலாவுக்கு நடந்த பாராட்டு விழாவுல பாட்டு எல்லாம் பாடியிருக்கிறாரே?”

“டாக்டர்கள் ஓய்வெடுக்கச் சொன்னாலும், முதல்வர் அதைக் கேட்கிறதா இல்லை. அவர் மனசெல்லாம் இப்ப ஓய்வைவிட நாடாளுமன்ற தேர்தல்லதான் இருக்கு. இந்த தேர்தல் வரைக்கும் இந்தியா கூட்டணி உறுதியா இருக்கணும்னு விரும்பறார். நவம்பர் 27ஆம் தேதி மாநிலக் கல்லூரில நடக்கப் போற வி.பி.சிங் சிலை திறப்பு விழாவுல கலந்துக்கப் போகிறார். இந்த விழாவுக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் எல்லாரையும் கூப்டிருக்கார். இந்தத் தேதில ஒரு சிறப்பு இருக்கு தெரியுமா?”

“என்ன சிறப்பு?”

“27-ம் தேதி உதயநிதி ஸ்டாலினோட பிறந்தநாள் வருது. அந்த நாள்ல முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவை வச்சிட்டா, அதுக்கு வர்ற இந்தியா கூட்டணி தலைவர்கள் உதயநிதியை சந்திச்சு வாழ்த்து சொல்வாங்க. அப்ப அவங்களுக்கும், உதயநிதிக்கும் இடையில நல்ல நட்பு மலர வாய்ப்பு இருக்குன்னு முதல்வர் கிட்ட சிலர் ஆலோசனை சொல்லியிருக்காங்க. சிலை திறப்பு விழாவை 27-ம் தேதி வச்சதுக்கு இதுவும் ஒரு காரணம்.”

”வி.பி.சிங்குக்கு சிலை நல்ல விஷயம்தான். அப்போ திமுகவினர் மகிழ்ச்சியா இருக்காங்கனு சொல்ற?”

“அப்படி முழுசா சொல்ல முடியாது. துரைமுருகனுக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கு”

“என்ன வருத்தம்?”

“அமலாக்கத் துறை. மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பா ஏற்கெனவே அமலாக்கத் துறை அதிகாரிகள் தலைமை பொறியாளர் முத்தையாவை விசாரிச்சு இருக்காங்க. அடுத்ததா அமைச்சர் துரைமுருகனையும் அவங்க விசாரிக்கப் போறதா ஒரு பேச்சு சாஸ்திரி பவன்ல சுத்திட்டு இருக்கு. தலைமை பொறியாளரும் விசாரணை முடிஞ்சதும் நேரா அமைச்சர் துரைமுருகனை சந்திச்சு இந்த தகவலை சொல்லி இருக்கார். இதைக் கேட்டதும் அவர் டென்ஷன் ஆகிட்டாராம். உடனடியா முதல்வரைச் சந்திச்சு புலம்பி இருக்கார். ‘அமலாக்கத் துறை என்னையும் விசாரணைக்கு கூப்பிடும்போல தெரியுது’ன்னு முதல்வர்கிட்ட வருத்தப்பட ‘நான்தான் பலமுறை எச்சரிக்கையா இருக்கச் சொல்லி உங்ககிட்ட சொன்னேனே. நீங்க எங்க என் பேச்சைக் கேட்டீங்க. சரி பரவாயில்லை விடுங்க. இதை நான் பார்த்துக்கறேன்’ன்னு ஆறுதல் சொல்லி அவரை அனுப்பி இருக்கார். இதையெல்லாம் வச்சுப் பார்த்தா அமலாக்கத் துறையோட டிசம்பர் மாத டார்கெட் துரைமுருகனாத்தான் இருக்கும்னு அறிவாலயத்துல பேசிக்கறாங்க.”

“செந்தில்பாலாஜி எப்படி இருக்கிறார்?”

“போன வாரம் தன்னைச் சந்திச்ச வழக்கறிஞர்கள்கிட்ட பேசுன செந்தில்பாலாஜி, ‘என்னைக் கட்சி கைவிட்டதா ஒரு செய்தி தொடர்ந்து வருது. என்ன நடக்குதுன்னு நான் தெரிஞ்சுக்கணும். நான் கைது செய்யப்பட்டப்ப முதல்வர் உள்பட அவரோட குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் ஓடிவந்து என்னை பார்த்தாங்க. நாங்க இருக்கோம் கவலைப்படாதீங்கன்னு சொன்னாங்க. ஆனா என் ஜாமீன் விஷயத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கல’ன்னு புலம்பினாராம். இதைத் தொடர்ந்துதான் அவரை மருத்துவமனைக்கு கொண்டுவர ஏற்பாடு நடந்ததா சொல்றாங்க.”

“அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, விஜயபாஸ்கர் மேல குற்ற நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி வழங்கி இருக்காரே?”

“ஆளுநர் மேல தமிழக அரசு தொடர்ந்த வழக்குல இதையும் குறிப்பிட்டு இருந்தது. அதனால கோர்ட் தன்னை கண்டிச்சுடக் கூடாதேன்னு ஆளுநர் இதுக்கு அனுமதி அளிச்சிருக்கார். இத்தனைக்கும் விஜயபாஸ்கர் பாரதிய ஜனதாவோட நெருக்கமான தொடர்பில் இருக்கார். அப்படியிருந்தும் இது தவிர்க்க முடியாத விஷயமாகிடுச்சு. சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் இப்ப டென்ஷனாகிட்டாங்க. இந்த நேரத்துல பாஜக கூட்டணிலருந்து விலகிட்டோமேனு தலைமைகிட்ட சொல்லியிருக்காங்க. எதுவும் நடக்காது பயப்படாதிங்கனு தலைமை அவங்களுக்கு உறுதி கொடுத்திருக்கு”

“நாடாளுமன்ற தேர்தல்ல தேனி தொகுதியில தினகரன் போட்டியிடப் போறதா ஒரு நியூஸ் வருதே?”

“தினகரனுக்கு தேனி ரொம்ப பழக்கமான தொகுதி. ஏற்கனவே அவருக்கு அங்க நிறைய செல்வாக்கு இருக்குங்கிறதால இந்த முடிவை எடுத்திருக்கார். இந்த தகவல் ஓபிஎஸ்-க்கு தெரிஞ்சதும் அவர் அதிர்ச்சியாகி இருக்கார். தேனி தொகுதியில இப்ப அவர் மகன்தான் எம்.பியா இருக்கார். அடுத்த முறையும் தன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தர்தான் அங்க எம்.பியாகணும்கிறது அவரோட விருப்பம். ஆனா திடீர்னு தினகரன் களத்துல குதிக்கறதால என்ன பண்றதுன்னு அவருக்கு தெரியல. ஏற்கெனவே அவருக்கு இருக்கற பிரச்சினைகள்ல இப்ப இதுவும் சேர்ந்திருக்கு.”

”ஓபிஎஸ்க்கு எங்க போனாலும் பிரச்சினைதான்..பாவம்”

“என்ன செய்யறது. அவர் தர்மயுத்தம் செய்த நேரம் சரியில்லை” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...