No menu items!

கர்நாடக சங்கீதம் பாட பக்தி அவசியமா?

கர்நாடக சங்கீதம் பாட பக்தி அவசியமா?

டி.எம். கிருஷ்ணா Vs ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் சர்ச்சையில், ‘கர்நாடக சங்கீதத்தின் உயிர்நாடி பக்தி ரசம், அதை கடவுள் மறுப்பாளர் பாட முடியுமா’ என டி.எம். கிருஷ்ணாவை கேள்வி கேட்கிறார் எழுத்தாளர் சாரு நிவேதிதா. கர்நாடக சங்கீதம் பாட பக்தி அவசியமா?

“ஆம், கலை வடிவங்களுக்கு கடவுள் பக்தி அவசியமே. அது இல்லாத போது ஒரு படைப்பு உயிரற்றதாக இருக்கிறது” என்கிறார், எழுத்தாளர் அபிலாஷ்.

எழுத்தாளர் போகன் சங்கரும் சாரு நிவேதிதாவின் கருத்தை ஆமோதிக்கிறார். ‘இசை மட்டுமல்ல இலக்கியம் உட்பட மற்ற செவ்வியல் நுண்கலைகள் யாவுமே முதலில் கடவுளுடன் கோவிலுடன் மதத்துடன் தொடர்புடைய ஒன்றாகத்தான் ஆரம்பித்திருக்கும். இது ஒரு சரித்திர பூர்வமான உண்மை. கர்நாடக இசையில் அதன் கட்டமைப்புக்குள் எதையும் பாடலாம். ஆனால், அடிப்படையில் அது ஒரு கோவில் இசையாகவே தோன்றி நீடித்ததால் பக்திப் பாடல்களை பாடுவதற்கே உகந்தது.

கர்நாடக இசையில் பக்தி பாடல்கள் அல்லாதவற்றையும் பாடலாம். அந்தக் கட்டமைப்பு அதை அனுமதிக்காது என்று இல்லை; நிறைய தமிழிசைப் பாடல்கள் அவ்வாறு உள்ளன. ஆனால், பக்தியை முதன்மை உத்தேசமாகக் கொண்டு தியாகையர் முதலியோர் இயற்றிய கீர்த்தனைகளை பக்தி இல்லாமல் பாடுவது, மாற்றிப் பாடுவது இவையெல்லாம் ரசக் குறைவானவை. தெய்வ நிந்தனை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால், நிச்சயமாக அதில் ஒரு ரசகுறைவு தென்படுகிறது.

ஓண சத்ய என்று வீட்டுக்கு கூப்பிட்டு விட்டு நூடுல்ஸ் பாவ் பாஜி இதெல்லாம் சேர்த்துப் பரிமாறக்கூடாது. அல்லது அதை ஓண சத்ய என்று அழைக்க கூடாது’ என்கிறார், போகன் சங்கர்.

சாருநிவேதாவையும் போகன் சங்கரையும் மறுக்கும் எழுத்தாளர் சத்யபெருமாள் பாலுசாமி, ‘உலகின் அத்தனை செவ்வியல் இசைகளும் காதலை, காமத்தை, விரகத்தை, வேதனையை, விடுதலையைப் பாடிய பொழுது எதற்காகக் கர்னாடக இசை மட்டும் இறைவனைப் பாடிக் கொண்டிருக்கிறது? எதற்காக இறைவனிடம் விடுதலை வேண்டி மன்றாடிக் கொண்டிருக்கிறது?

போர்களை, வெற்றிகளை, வேதனைகளை, காதலை, அரசியலை, அறிவியலை, கொடையை, வாழ்வின் கொண்டாட்டங்களைப் பேசிக் கொண்டிருந்த தமிழ் இலக்கியத்தை யார் பக்தி இலக்கியமாக மாற்றினார்களோ, அவர்கள்தான் வெகுமக்களின் வாழ்வுடன் கலந்திருந்த செவ்வியல் இசையையும் பக்திக்கானதாக மடை மாற்றினார்கள். சிலப்பதிகாரத்தில் உள்ள கானல் வரிகளில் எத்தனை காதல் தளும்புகிறது! எத்தனை காமம் கொப்பளிக்கிறது!! எத்தனை வலியுடன் காதற்பிரிவு பேசப்படுகிறது!!! எத்தனை வலிமையுடன் ஊடல் பாடப்படுகிறது!!!! இதெல்லாம் பிற்காலத்தில் என்னவானது? எப்படி இசை என்பதே கடவுளைப் பாடுவதற்கான/ கடவுளை அடைவதற்கான வழி மட்டும்தான் என்று கட்டமைக்கப்பட்டது?

தமிழின் இயலும் இசையும் நாடகமும் கடவுளின் நிமித்தமோ மதத்தின் நிமித்தமோ தோற்றுவித்து வளர்க்கப்பட்டவை அல்ல. தமிழின் இயலும் இசையும் நாடகமும் மக்களுக்காக மக்களால் தோற்றுவிக்கப்பட்டனவே தவிர எந்த மதத்தாலோ கடவுளாலோ தோற்றுவிக்கப்பட்ட மாய வஸ்துக்கள் அல்ல.

தமிழ் தொல் இலக்கியங்களில் கடவுளுக்கான இடம் என்பது, ஐந்திணைகளின் முதற்பொருள்களான இடம், பொழுது ஆகியவற்றிற்கு அடுத்த நிலையில் வைக்கப்பட்ட கருப்பொருள்களான அந்தந்தத் திணைக்குரிய தொழில், உணவு, விலங்கு, பறவை, பண், யாழ், மலர், மரம், ஊர், நீர் போன்ற பத்துப் பொருட்களுடன் வைக்கப்பட்ட பதினோராவது பொருள்தானே யொழிய முழுப்பொருளோ முழுமுதற்பொருளோ கிடையாது.

அதனால்தான், தமிழின் தொல் இலக்கியங்களில் கடவுள் அரிதாகத் தென்படுகிறார். தமிழின் முதற் காப்பியமான சிலப்பதிகாரமும் ஒரு நாத்திகக் காப்பியமாக இருக்கிறது.

கர்னாடக இசை கோவில் இசையாகத் தோன்றியது என்று சொன்னால் தியாகையர் கூட‌ ஏற்றுக்கொள்ளமாட்டார். பக்தியை முதற்பொருளாகக் கொண்டிராத தமிழ் இசை தானே கடவுளுடன் இணைக்கப்பட்டுக் கர்நாடக சங்கீதமாக்கப்பட்டது? காமம் பக்தியாக்கப்பட்டது, காதலனாகிய நாயகனின் இடம் கடவுளுக்குக் கொடுக்கப்பட்டது, காதலியின் இடம் பக்தர்களுக்குக் கொடுக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்திலும் இசையிலும் தலைமையாக இருந்த தலைவன்-தலைவி காதல் என்பது பக்தி இலக்கியத்திலும் பக்தியிசையிலும் நாயக நாயகி பாவமாக மாற்றப்பட்டது என்பதுதானே உண்மை வரலாறு?

தனது இசையை மீட்டுக்கொள்ள விழையும் தமிழுக்கு, தமிழருக்கு, கர்நாடக சங்கீதத்திலிருந்து கடவுளையும் பக்தியையும் தூக்கி எறியும் உரிமை மட்டும் இருந்துவிடாதா? இருந்துவிடக் கூடாதா?

கர்னாடக சங்கீதம் பக்திக்கானது என்று சொல்லிக்கொள்வார்களே தவிர‌ அது முழுக்க முழுக்க ஸ்வரதானக் கணக்கு வழக்குகள் சம்பந்தப்பட்டது என்று அவர்கள் நன்றாக அறிவார்கள். அதற்குள் மற்றவர்கள்‌ வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், கடவுள், பக்தி இத்யாதி என்ற காவலரண்களை எல்லாம் போட்டு வைத்திருக்கிறார்கள்.

பக்தி இல்லாமலே அட்டகாசமாக பக்திப் பாடல்களைப் பாட முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம், புகழ்பெற்ற பக்தி கீதங்களான, ‘ஹரிவராசனம்’ பாடலுக்கும் ‘செத்தி மந்தாரம் துளசி’ பாடலுக்கும் இசை அமைத்த தேவராஜன் மாஸ்டர் ஒரு பழுத்த நாத்திகவாதி” என்கிறார்.

எழுத்தாளர் வாசுதேவன் இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவில், ‘இறையுணர்வுக்கும் புனிதத்திற்கும் இசைக்கும் உள்ள தொடர்பு அனைத்து மதங்களிலும் உண்டு. வேதங்களை குறிப்பிட்ட உச்சரிப்பு லயத்தில் பாடுவதும் இசையின் ஒரு அங்கம். இந்து மத சடங்குகளின் போது இசைப்பதற்காக இயற்றப்பட்டது சாம வேதம் என்பர்.

கிறிஸ்துவ மரபிலும் இசைக்கு முக்கிய பங்குண்டு. தேவாலாயங்களிலும் கிறிஸ்துவ மத சடங்கிலும் இசை முக்கியத்துவம் பெருகிறது.

இஸ்லாமில் இறையுணர்வையும் இசையை இணைத்ததில் சுஃபியிசத்தற்கு முக்கிய பங்குண்டு. இஸ்லாம் வழங்கிய மற்றொரு கொடை இந்துஸ்தானி.

பூர்வ குடிமக்களின் கலாச்சாரத்தில் இசை முக்கிய பங்கு வகிக்கிறது. ஷாமான், பில்லி, சூனியம், ஜனனம், மரணத்திலும் இசைதான் பிரதானம். அஸ்டெக் நரபலி சடங்கில் இசைக்கு முக்கியத்துவம் அதிகம்.

இசை என்பது சாந்தம், அமைதி, இறை நம்பிக்கை போன்ற உணர்வுகளோடு சம்பந்தப்பட்டாலும் மறுபுறத்தில் இதற்கு எதிர் திசையிலும் இசையின் பங்களிப்பை மறுக்க முடியாது.

இசைக்கும் புனிதம், இறையுணர்வு, அமைதிக்கும் தொடர்பில்லை என்பதற்கும் சான்றுகள் உண்டு. மவுரிஸ் ரேவல், ஷாஸ்டோகோவிச், ஃபிராங் சப்பா என நூற்றுக்கணக்கன மேற்கத்திய இசை மேதைகள் கடவுள் மறுப்பாளர்கள். பீத்தோவன், பாக் மேதைகள் ஆழ்ந்த இறை நம்பிக்கை இருந்ததாக சான்றுகள் இல்லை” என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...