டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி அக்டோபர் 6-ம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை 2007-ம் ஆண்டில் நடந்த முதலாவது டி20 உலகக் கோப்பையில் வென்றதோடு சரி. அதன்பிறகு இத்தொடரில் இந்திய அணி பெரிதாக சாதித்ததில்லை. இந்த உலகக் கோப்பையிலாவது அதை மாற்றவேண்டும் என்ற வெறியுடன் கிளம்புகிறது ரோஹித்தின் இந்தியப் படை.
துடிப்பான இளம் வீரர்கள், மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி, சூர்யகுமார் யாதவின் மிதமிஞ்சிய ஸ்டிரைக் ரேட் என்று இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் பல விஷயங்கள் உள்ளன. அதே நேரத்தில் சில குறைகளும் உள்ளன. அப்படி இந்திய கிரிக்கெட் ராசிகர்களுக்கு கவலையளிக்கும் விதத்தில் அணியில் இருக்கும் சில குறைகள் என்னவென்று பார்ப்போம்…
பும்ராவின் காயம்:
டி20 உலகக் கோப்பை நடக்கும் ஆஸ்திரேலியாவின் ஆடுகளங்கள் பெரும்பாலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானவை. இந்திய அணியைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சில் துருப்புச் சீட்டாக இருப்பவர் ஜஸ்பிரித் பும்ரா. குறிப்பாக அவர் வீசும் யார்க்கர்களுக்கு எதிரணி பேட்ஸ்மேன்கள் திணறுவதால், அணியின் மிகப்பெரிய பலமாக அவர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பு காயம் காரணமாக அவர் அணியில் இருந்து வெளியேறியது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவில் பல தொடர்களில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த பும்ரா இல்லாமல், நமது அணி அங்கு செல்வது வாள் இல்லாமல் போர்க்களத்துக்கு செல்வதைப் போன்றது. பும்ரா இல்லாத சூழலில், இப்போது யாரை வைத்து அவரது இடத்தை நிரப்புவது என்ற முடிவை தேர்வுக்குழுவால் இதுவரை எடுக்க முடியவில்லை.
ரிஷப் பந்த்தின் பேட்டிங்
கடந்த 2 ஆண்டுகளாக கோலி அவுட் ஆஃப் பார்மில் இருந்தாலும் இந்திய அணி பல போட்டிகளில் வென்றதற்கு காரணமாய் இருந்தவர் ரிஷப் பந்த். முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக்கின் சாயலில் அதிரடி ஷாட்களை விளையாடும் ரிஷப் பந்த், டெஸ்ட் போட்டிகள் உள்பட பல போட்டிகளில் தனியொருவனாக இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.
ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை. விராட் கோலி ஃபார்முக்கு திரும்பிய நேரத்தில், ரிஷப் பந்த்தின் ஃபார்ம் காணாமல் போய்விட்டது. சமீப காலமாக அவர் 30 ரன்களைக் கடப்பதே பெரிய விஷயமாகி விட்டது. இது இந்திய அணியின் மிடில் ஆர்டர் என்ற முதுகெலும்பை முறிக்கிறது.
கடைசி 5 ஓவர்கள்:
கடந்த ஆசிய கோப்பை டி20 தொடர்முதலாக இந்தியாவுக்கு கவலைதரும் விஷயம் டெத் ஓவர்கள். கடைசி 5 ஓவர்களை டெத் ஓவர்கள் என்று அழைக்கிறார்கள். ஆட்டத்தின் முதல் 15 ஓவர்களை ஓரளவு சிறப்பாக வீசி எதிரணியை கட்டுக்குள் வைக்கும் இந்திய பந்துவீச்சாளர்கள், டெத் ஓவர்களில், அதாவது கடைசி 5 ஓவர்களில் வள்ளலாய் மாறி ரன்களை வாரி வழங்கி வருகிறார்கள். இதைச் சரிசெய்யாவிட்டால் இந்த டி20 உலகக் கோப்பையை மறந்துவிட வேண்டியதுதான்.