No menu items!

இந்தியா Vs பாகிஸ்தான் – கிரிக்கெட் யுத்தம்

இந்தியா Vs பாகிஸ்தான் – கிரிக்கெட் யுத்தம்

போர்க்களத்துக்கு அடுத்ததாக இந்தியா – பாகிஸ்தான் மோதல் தீவிரமாக இருப்பது கிரிக்கெட் களத்தில்தான். சாதாரண கிரிக்கெட் போட்டிகள் முதல் உலகக் கோப்பை போட்டிகள் வரை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் ஆட்டம் என்றால் கூடுதலாக அனல் பறக்கும்.

சம்பந்தப்பட்ட கோப்பையை வெல்ல முடியாமல் போனாலும், இந்த போட்டியில் மட்டும் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்ற வெறி வீரர்கள் மற்றும் ரசிகர்களின் கண்களில் தெரியும். அப்படியொரு போட்டிதான் நாளை நடக்கப்போகிறது.

துபாயில் நாளை (ஆகஸ்ட் 29) நடக்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதப் போகின்றன. கடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்ற பிறகு இந்த போட்டியில்தான் நேருக்கு நேர் சந்திக்கின்றன. அதனால் கடந்த முறை அடைந்த தோல்விக்கு பழிவாங்க வேண்டும் என்ற வேகத்துடன் இந்தியா இப்போட்டியை எதிர்கொள்கிறது.

கடந்த முறை பாகிஸ்தானிடம் தோற்ற சில நாட்களிலேயே விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இப்போது ரோஹித் சர்மாவின் தலைமையில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா.

ஆசிய கோப்பை முக்கியமானது என்றாலும், உலகக் கோப்பை அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் சில பரீட்சார்த்த முடிவுகளை இந்திய அணி எடுத்துள்ளது. முன்னணி பந்துவீச்சாளர்களாக பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் பந்துவீச்சாளர்களான ஆவேஷ் கான், ஹர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மூத்த வேகப்பந்து வீச்சாளர்களில் புவனேஸ்வர் குமார் மட்டுமே இந்த அணியில் இடம்பெற்றுள்ளார் என்பதால் பந்துவீச்சு சற்று பலவீனமாக தெரிகிறது. புவனேஸ்வர் குமார், அஸ்வின், சாஹல் ஆகிய மூவரையே இந்திய அணி பெரிதும் சார்ந்திருக்கிறது.

கடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு காரணம் மந்தமான பேட்டிங். இத்தொடரின் பவர் ப்ளேவில் இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடவில்லை.

ஆனால் ரோஹித் சர்மா அணித்தலைமையை ஏற்ற பிறகு, அணியை அட்டாக்கிங் மோடுக்கு கொண்டு வந்துள்ளார். கடந்த சில டி20 போட்டிகளில் முதல் 6 ஓவர்களைக் கொண்ட பவர் பிளேவில் இந்தியா ஆடுவதை வைத்தே இது தெரிகிறது.

இந்த தொடரைப் பொறுத்தவரை ரிஷப் பந்த் அல்லது கே.எல்.ராகுலுடன் இணைந்து ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் சற்று பலவீனமாக இருந்தாலும் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா என வலுவான பேட்டிங் வரிசையுடன் இந்தியா களம் இறங்குகிறது.

இந்திய பேட்ஸ்மேன்களைப் பொறுத்தவரை விராட் கோலிதான் சற்று சிக்கலான நிலையில் இருக்கிறார். இஷான் கிஷன், ஹூடா, சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் வெளியில் உள்ள சூழலில், இந்திய அணியில் தனது இடத்தைத் தக்கவைக்க வேண்டுமானால் இந்த தொடரில் சிறப்பாக ஆடவேண்டிய நிர்பந்தத்தில் விராட் கோலி இருக்கிறார்.

தன் வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை வென்ற கோலி, இந்த முறையும் சவால்களை முறியடித்து ஆசிய கோப்பையில் தனது ஆதிக்கத்தை நிறுவுவார் என்று எதிர்பார்க்கிறார்கள் இந்திய ரசிகர்கள்.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை ஐக்கிய அரபு அமீரகத்தை அவர்களின் இரண்டாவது தாய்வீடு என்று சொல்லலாம். தீவிரவாதம் காரணமாக பாகிஸ்தானுக்கு பல கிரிக்கெட் அணிகளும் செல்லாத நிலையில், அந்த அணி தங்கள் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் அடி வருகிறது. எனவே இங்குள்ள மைதானங்கள் அவர்களுக்கு அத்துப்படியாக உள்ளது.

பாகிஸ்தானின் பேட்டிங் வரிசை, கேப்டன் பாபர் அசாமை நம்பியுள்ளது. கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல்களில் சமீப காலமாக விராட் கோலியை முந்திச் செல்லும் பாபர் அசாம் சிறப்பாக ஆடினால், அவரைச் சுற்றி நின்று திறமைகாட்ட முகமது ரிஸ்வான், ஷடப் கான், பசர் சமான் என்று பலரும் உள்ளனர். வேகப்பந்து வீச்சிலும் பாகிஸ்தான் வலுவாகவே உள்ளது. எனவே போட்டி கடுமையாக இருக்கும்.

பொதுவாக ஐசிசி தொடர்களில் இந்தியாவை பாகிஸ்தான் அதிகம் வென்றதில்லை. அது இந்த தொடரிலும் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...