இளையராஜா எல்லோருக்கும் மேலானவரா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், “அவர் அமைதியானவர், அடக்கமானவர், நீதிமன்றத்தை மதித்து நடக்கக் கூடியவர்” என இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
காப்பிரைட்ஸ் வழக்கு
இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்துவதற்கு ‘எக்கோ’, ‘அகி’ என்ற இரண்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. இந்நிலையில், ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை குறிப்பிட்ட நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாக ஆட்சேபனை தெரிவித்து இளையராஜா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ” இளையராஜாவுக்கு அவரது பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறது. ஆனாலும், திரைப்பட தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது” என 2019ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து, “படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருக்கிறது. அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது” என்று ‘எக்கோ’ (ECHO) நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை – நீதிபதி கருத்து
‘எக்கோ’ (ECHO) நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு கடந்த 10ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இசை நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛திரைப்படத்துக்காக தயாரிப்பாளரிடம் ஊதியம் பெறும் இசையமைப்பாளர் ராயல்டி தவிர மற்ற அனைத்து உரிமைகளையும் இழந்துவிடுகிறார். இந்த விஷயத்தில் இளையராஜாவுக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்பது இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும். இளையராஜா, தான் தான் அனைவருக்கும் மேலானவர்” என நினைக்கிறார் என்று தெரிவித்தார்.
இந்த வேளையில் குறுக்கீட்ட இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சதீஷ் பரசரண், ‛‛ஆமா இளையராஜா அனைவருக்கும் மேலானவர் தான்” எனக் கூறினார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், ‛‛இசை மூர்த்திகளான முத்துஸ்வாமி தீக்சீதர், தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் எல்லோருக்கம் மேலானவர்கள் என்று கூறலாம். ஆனால், நீங்க அப்படி சொல்வதை கேட்க முடியாது” என தெரிவித்தார்.
இதையடுத்து இளையராஜா தரப்பு வழக்கறிஞர், ‛‛எல்லோருக்கும் மேலானவன் எனக்கூறியது, பாடல்கள் மீதான காப்புரிமை விவகாரத்தில் மட்டுமே. மற்றபடி இளையராஜா, தன்னை அப்படி கூறிக்கொண்டது இல்லை என்பது உங்களுக்கே தெரியும். இளையராஜா அமைதியானவர், அடக்கமானவர், நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதித்து நடக்கக் கூடியவர்” என தெரிவித்தார்.