காதல்படுத்தும் பாடு என்பதை பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம். நிஜ வாழ்க்கையிலும் பார்த்திருப்போம்.
அப்படியொரு சம்பவம் இது.
காதல் சாமனியர்களை மட்டும் படுத்தாது, கற்றுத் தேர்ந்த கனவான்களையும் கள்ளத்தனத்தில் தள்ளிவிடும் என்பது இந்த சம்பவத்தில் தெரிகிறது.
சென்னை ஐஐடியில் படித்து பொறியியல் பட்டம் பெற்றவர் ஹேமந்த் குமார் ரகு. ஐஐடியில் சீட் கிடைத்து படித்து முடிப்பது என்பது சாதாரண விஷயமுள்ள. கடின உழைப்பும் அதற்கேற்ற அறிவாற்றாலும் இருந்தால் மட்டுமே முடியும். அது ஹேமந்துக்கு இருந்தது. அதுவு அவர் படித்தது கெமிக்கல் என்ஜினியரிங். சற்று கடினமான படிப்பு.
ஐஐடியில் படிப்பு முடிந்ததும் உடனேயே நல்ல வேலை துபாயில் கிடைத்தது. நல்ல வேலை, நல்ல சம்பளம், சொகுசான வாழ்க்கை. எல்லாம் நன்றாகதான் போய்க் கொண்டிருந்தது, அந்தப் பெண்ணை சந்திக்கும் வரை.
அந்தப் பெண் இரவு விடுதியில் நடனமாடும் மங்கை. அவரிடம் காதல்வயப்பட்டார் ஹேமந்த். அந்தப் பெண்ணுடனே வலம் வந்தார். அந்தப் பெண்ணிடம் மயங்கிக் கிடந்தார். ஆனால் அவருக்கு அந்தப் பெண்ணிடம் ஒரு விஷயம் பிடிக்கவில்லை. அது, இரவு விடுதிகளில் நடனமாடுவது. துபாயில் இருக்கும்வரை நடனமாடுவதை விட முடியாது என்று கூறியிக்கிறார் அந்தப் பெண்.
இறுதியில் இருவரும் ஒரு ‘டீலு’க்கு வந்தார்கள். அந்தப் பெண்ணின் சொந்த ஊர் பீஹாரில் இருக்கிறது. துபாயிலிருந்து கிளம்பி பீஹாரில் செட்டில் ஆவது எந்த முடிவில் இருவரும் துபாயிலிருந்து கிளம்பிவிட்டார்கள்.
துபாயில் மிக நல்ல சம்பளத்தில் இருந்தார் ஹேமந்த். நிறைய பணத்தை சேமித்தும் வைத்திருந்தார். அத்தனை பணத்தையும் எடுத்துக் கொண்டு பீஹார் வந்திருக்கிறார்கள். கையில் இருந்த பணத்தில் காதல் வாழ்க்கை இனிமையாக போயிக் கொண்டிருந்திருக்கிறது.
ஆனால் சம்பாதிக்காமல் செல்வழித்துக் கொண்டே இருந்தால் எத்தனை நாட்கள் சேமித்தப் பணம் கையிலிருக்கும்?
ஹேமந்த் கையிலிருந்த பணம் கரைந்துவிட்டது. ஆனால் காதலியுடன் இனிமையாக காலத்தை கழிக்க அவருக்கு பணம் தேவை. அதற்கு என்ன செய்வது?
ஐஐடி கெமிக்கல் என்ஜினியரிங் படித்த ஹேமந்த்துக்கு அப்போது தோன்றிய யோசனை, திருடுவது.
ஐஐடியில் படித்த அறிவு வேலை செய்ய ஒரு கிரிமினல் நெட்வொர்க்கை உருவாக்கியிருக்கிறார் ஹேமந்த். அந்த நெட்வொர்க் தரும் தகவல்களின் அடிப்படையில் திருடுவது, கொள்ளையடிப்பது போன்ற செயல்களில் ஈடுப்பட்டிருக்கிறார்.
சமீபத்தில் பீஹாரில் மாதோபூர் நகரில் ஒரு பெண்ணிடம் இருந்து இரண்டரை லட்ச ரூபாயை திருடும்போது இந்தக் கும்பல் மாட்டிக் கொண்டது. கும்பலின் தலைவன் யார் என்று பார்த்தால் அது ஐஐடி என்ஜினியர் ஹேமந்த்.
இத்தனை பெரிய படிப்பு படித்து, பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு இந்தத் திருட்டு வேலைகளை ஏன் செய்தீர்கள் என்று காவல்துறை விசாரணையில் கேட்டால் அவர் சொன்ன பதில், என் காதலியை மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்ள பணம் தேவைப்படது என்பதுதான்.