திமுக அரசு பொறுப்பேற்றப் பிறகு முதல் முறையாக பெரிய அளவில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாய் உள்துறை செயலர் பிரபாகரும் மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டது பலருக்கு அதிர்ச்சி.
என்ன நடந்தது?
திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததுமே பல நல்ல ஐஏஎஸ் அதிகாரிகள் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டனர். தலைமைச் செயலராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். டிஜிபியாக சைலேந்திரபாபு பணியமர்த்தப்பட்டார். பிரபாகர் உள்துறை செயலாராக பொறுப்பேற்றார்.
முதல்வர் செயலகத்திலும் கெட்டிக்கார அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். பல வருட அனுபவத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினே இந்த அதிகாரிகளை தேர்ந்தெடுத்து முக்கிய பொறுப்புகளில் நியமித்தார்.
திமுக ஆட்சி ஓராண்டு கடந்த நிலையில் தமிழ் நாடு முழுவதும் பல துறைகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சி மாறி திமுக ஆட்சி வந்துமே அதிமுக ஆட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்த செயலர்கள் மாற்றப்படுவார்கள் என்ற கருத்து இருந்தது. ஆனால் அப்படி எல்லா துறைகளிலும் நடக்கவில்லை. முக்கியமாய் சுகாதாரத் துறை செயலராக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் இருந்து வந்தார். திமுக ஆட்சிக்கு வந்தப்பிறகும் அவர் அதே பணியில் தொடர்ந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த 2021 மே மாதம் கொரோனா இரண்டாம் அலை கடுமையாக இருந்தது. அந்த சூழலில் சுகாதாரத் துறை செயலரை மாற்றுவது கொரோனா தடுப்பு முயற்சிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிந்திருந்தார்.
மருத்துவத் துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றிருந்த மா.சுப்பிரமணியனுக்கு இந்தத் துறை புதிது. அதனால் ஏற்கனவே கொரோனா கட்டுப்படுத்துவதில் அனுபவமிக்க ராதாகிருஷ்ணனே அந்தத் துறையில் தொடருவது நல்லது என்று திமுக தலைமை கருதியது.
உள்துறை செயலராக பிரபாகர் நியமிக்கப்பட்டதும் அரசு வட்டாரங்களில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் பிரபாகர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது அவருக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். அதிமுக ஆட்சியிலும் உள்துறை செயலராக இருந்தவர். அவரை ஏன் உள்துறை செயலராக நியமிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் அப்போதே திமுக வட்டாரங்களில் பேசப்பட்டது.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவருக்கு தனிச் செயலராக இருந்தவர் பிரபாகர். அதனால் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அவருக்கு ஏற்கனவே பழக்கம் உண்டு. அந்த நட்பின் அடிப்படையில் திமுக ஆட்சியிலும் உள்துறை செயலராக தொடர்ந்தார்.
இந்த இருவரும் இப்போது மாற்றப்பட்டதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.
தமிழ் நாட்டில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதை உள்துறை செயலர் முறையாக கண்காணிக்கவில்லை என்ற விமர்சனம் அவர் மீது உண்டு.
அது மட்டுமின்றி, உள்துறை செயலர்தான் காவல்துறை உயர் அதிகாரிகள் நியமனத்துக்கு பொறுப்பு. காவல்துறையில் சரியான அதிகாரிகளை உள்துறை செயலர் அரசுக்கு பரிந்துரைக்கவில்லை என்ற விமர்சனமும் உண்டு.
இந்த விமர்சனங்களும் அவர் மாற்றப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டதற்கும் சில காரணங்கள் உண்டு.
அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவராக ராதாகிருஷ்ணன் அறியப்பட்டவர். இருந்தாலும் கொரோனா சூழலினால் அவரை மாற்றுவது சரியாக இருக்காது என்பதால் அவர் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனின் நெருங்கிய உறவினர் ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா முடிந்தப் பிறகு ராதாகிருஷ்ணனின் கொரோனா அனுபவம் சுகாதாரத் துறைக்கு அவசியமில்லை என்று அரசு கருதியதும் ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டதற்கு ஒரு காரணம்.
அமைச்சர்களின் ஊழல்களை அம்பலப்படுத்தப் போவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து சில தகவல்களையும் கூறினார். அவர் சொல்வது உண்மையோ இல்லையோ அண்ணாமலைக்கு எப்படி தகவல்கள் போகின்றன என்ற சந்தேகம் அரசுக்கு எழுந்துக் கொண்டே இருந்தது.
பொதுவாய் ஒரு ஆட்சி மாறியதும் முந்தைய ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் முழுமையாக மாற்றப்படுவார்கள். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்படி செய்யவில்லை. ஆட்சி மாறினால் அதிகாரிகளை மாற்றுவது என்பது சரியான நடவடிக்கை இல்லை என்பது அவர் கருத்து. ஆனால் பத்தாண்டுகள் தொடர்ந்து அதிமுக ஆட்சியிலிருந்திருக்கிறது.
2014லிருந்து மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கிறது, இந்த ஆட்சிக் காலத்தில் நல்ல தொடர்புகளை இந்தக் கட்சிகள் ஏற்படுத்தியிருக்கும். அந்த தொடர்புகளை அறுக்க வேண்டும் என்று திமுகவின் மேலிடத்துக்கு ஆலோசனை கூறப்பட்டதன் விளைவும் அதிகாரிகள் மாற்றத்துக்கு காரணம்.
அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலர் ஒருவரின் மீது குற்றாச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அவரும் விரைவில் மாற்றப்படலாம் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது அரசுக்கு கெட்டப் பெயர் தேடித் தந்த விவகாரங்களில் இந்த அதிகாரியின் பெயர்தான் அடிபடுகிறது. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் கோலோச்சியவர். இப்போதும் அதே அதிகாரத்துடன் இருக்கிறார் என்பது அறிவாலயம் முன்னணியினரின் வருத்தம். விரைவில் அவருக்கும் மாறுதல் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதிகாரிகள் மாற்றம் இன்னும் சில மாதங்களுக்கு தொடர்கதையாக இருக்கப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்.