“பொங்கல் வாழ்த்துகள்” என்றபடி உற்சாகமாக ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
பொங்கல் விழாவை முன்னிட்டு ஆபீஸ் கேண்டீனில் ஸ்பெஷலாகச் செய்த சர்க்கரைப் பொங்கலை எடுத்து நீட்டினோம்.
“சர்க்கரைப் பொங்கலா? தமிழ்ப் புத்தாண்டு ஸ்வீட்டா தொடங்கப் போகுது” என்று வாழ்த்தி ஒரு ஸ்பூன் பொங்கலை வாயில் போட்டுக் கொண்டாள்.
“தமிழ்ப் புத்தாண்டு எல்லோருக்கும் ஸ்வீட்டா அமையுமா? தமிழ்நாட்டு கவர்னருக்கு எப்படி அமையப் போகிறது? வழக்கமாக திமுக கூட்டணிக் கட்சிகள் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்கும்போதெல்லாம் தவிர்க்கும் ஜனாதிபதி மாளிகை இம்முறை திமுக எம்பிக்களுக்கு வேக வேகமாக அப்பாயிண்ட்மெண்ட் வழங்கி இருக்கிறதே?”
“இதற்கு மத்திய பாஜக அரசுதான் காரணம் என்று பேசிக் கொள்கிறார்கள். சட்டசபையில் ஆளுநர் நடந்துகொண்ட விவகாரத்தில் தமிழக ஆளும் கட்சியான திமுகவைத் தாண்டி அரசியல் விமர்சகர்கள், மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினர் இடையே எதிர்ப்பு எழுந்துள்ளதை மத்திய அரசுக்கு உளவுத் துறை ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. குடியரசுத் தலைவர் சந்திக்க மறுத்தால் அதுவும் அரசியலாகும் என்று பாஜக மேலிடம் கருதியுள்ளது. ஜனாதிபதியை சந்திக்க திமுக எம்பிக்கள் தரப்பு அவகாசம் கேட்டதும் சம்மதிக்குமாறு ஜனாதிபதி மாளிகைக்கு ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது. இதன் எதிரொலிதான் டி.ஆர்.பாலு அனுமதி கேட்ட ஒரு மணி நேரத்தில் மறுநாள் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது.”
“ஆளுநரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படாமல் ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறதே?”
“ஆமாம். ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வைத்தால் அந்த மனுவை ஜனாதிபதி வாங்கமாட்டார். நேரடியாக வாங்குவதைத் தவிர்த்து ஜனாதிபதி மாளிகை அலுவலகத்தில் கொடுக்குமாறு அவர் சொல்ல வாய்ப்புள்ளதாக முதல்வருக்கு நியூஸ் கிடைச்சிருக்கு. அப்படி நடந்தால் கோரிக்கை மனுவை குடியரசுத் தலைவர் வாங்க மறுத்துவிட்டார். அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வந்தனர் திமுகவினர் என்று செய்தி வரும் என்பது முதல்வருக்கு தெரியும். எனவே, ‘ஆளுநர் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குகிறார். தேசிய கீதத்தை புறக்கணித்துள்ளார். அவருக்கு தகுந்த அறிவுரை வழங்குங்குங்கள் என்று மட்டும் மனுவில் குறிப்பிட்டார் முதல்வர்.”
“தமிழக ஆளுநருக்கு மத்திய அரசு அறிவுரை ஏதும் சொல்லவில்லையா?”
“ஆளுநரின் அரசியல் விமர்சனங்களை அமித்ஷா விரும்பவில்லை என்று சொல்கிறார்கள்.”
“அப்படியென்றால் அமித்ஷா சொல்லிதான் ஆளுநர் செய்கிறார் என்று சொல்வது பொய்யா?”
”அப்படியில்ல. மேலே இருந்து உத்தரவுகள் வராமல் ஆளுநர் பேசமாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எந்த அளவு பேச வேண்டும் என்பதைத் தாண்டி ஆளுநர் பேசுவதை அமித்ஷா ரசிக்கவில்லை என்கிறார்கள். ஏற்கெனவே எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக ஆளுநர்கள் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தேசிய அளவில் முன்வைக்கப்படுகிறது. இப்போது தமிழக ஆளுநர் வெளிநடப்பு என்ற பெயரில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டார்’ என்று நினைக்கிறாராம் அமித் ஷா. முக்கியமாய் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில் அம்பேத்கர், காமராஜர் ஆகியோரின் பெயரை சொல்லாமல் விட்டது பாஜகவின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்று கடுப்பாகியிருக்கிறார். இம்முறை டெல்லிக்கு செல்லும் தமிழக ஆளுநரிடம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?, என்ன செய்யக்கூடாது என்று தெளிவுபடுத்த அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக டெல்லி பட்சிகள் சொல்கின்றன.”
“இந்த விஷயத்தில் தமிழக அரசின் அடுத்த மூவ் என்ன?”
“பொதுவாக சட்டசபை கூடும் காலத்தில் சட்டப்பேரவை செயலகத்திலிருந்து சட்டசபையில் இன்று விவாதம் செய்ய இருக்கும் பொருள், கேள்வி நேரம், தீர்மானம் என்ற அளவில் தான் கடிதங்கள் அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை அனைத்து கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் ஆளுநர் உரைக்கு நன்றியும் வருத்தமும் பதிவு செய்யக்கோரி எல்லா கட்சி உறுப்பினர்களுக்கும் சட்டப்பேரவை செயலாளர் கடிதம் அனுப்பியிருக்கிறார். அதே நேரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘ஆளுநரை சீண்டும் வகையில் ஆளுநரை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யும் வகையில் யாரும் எதுவும் பேசக்கூடாது. திராவிட முன்னேற்ற கழகம் ஆளுநர் பிரச்சனையை மத்திய அரசு, குடியரசுத் தலைவர், சட்டப் போராட்டம் என்று கொண்டு செல்ல முடிவு செய்திருப்பதால் தொகுதி பிரச்சினைகளை மட்டும் சட்டப்பேரவையில் பேசினால் போதும் என்று சொல்லிவிட்டாராம்.”
“ஆளுநர் விஷயத்தில் எடப்பாடியின் அதிமுக முழுக்க முழுக்க பாஜக பக்கம் நிற்கிறதே..”
“அப்படியும் சொல்லிவிட முடியாது. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘ஆளுநருக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு குரல் கொடுத்து பேச வேண்டாம். ஆளுநர் – திமுக விஷயத்தில் பாரதிய ஜனதா முதலில் வெளிப்படையாக தங்கள் கருத்தை சொல்லி செயல்படட்டும். திமுக ஆட்சியை விமர்சனம் செய்து நீட் தேர்வு போன்ற மக்கள் பிரச்சனைகளை சொல்லி திமுகவை விமர்சனம் செய்து மட்டும் பேசுங்கள். ஆளுநர் விவகாரத்தைப் பற்றி யாரும் எதுவும் பேச வேண்டாம்’ என்று சொல்லிவிட்டாராம்.”
“ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத் தேர்தலில் பாஜக தனியா போட்டியிடுறாங்களாமே?”
“ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பரீட்சார்த்த முறையாக பாஜக தனித்து போட்டியிடலாம் என்ரு டெல்லி தலைமைக்கு சொல்லி இருக்கிறாராம் அண்ணாமலை. அதிமுக இப்போது இரண்டாக பிரிந்துள்ள நிலையில் பாஜக அங்கு போட்டியிட்டால் நிறைய வாக்குகளை அள்ளலாம் என்பது அவரது திட்டம்.”
”மேலிடம் என்ன சொல்லிச்சாம்?”
“அதிமுக என்ன செய்கிறது என்று பார்ப்போம் என்று கூறியிருக்கிறார்கள். எடப்பாடியும் தனித்துப் போட்டியிடலாம்ங்கிற எண்ணத்துல இருக்கிறார். தனியா பலத்தை டெஸ்ட் பண்ணி பாத்துரலாம்கிறது இந்தக் கட்சிகளோட எண்ணம்?”
“இவங்க ரெண்டு பேரும் தனியா நின்னா. திமுகவுக்கு ஈசியா ஜெயிச்சுடுமே?”
“ஆமாம், அது அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் தெரியும். ஆனா, வாக்கு வங்கி எவ்வளவுனு தெரிஞ்சிருச்சுனா அதுக்கேத்தப்படி 2024 நாடாளுமன்றத் தேர்தல்ல முடிவெடுக்கலாம்ல. அதுதான் திட்டம்”
“பாமக என்ன செய்யப் போகிறது? சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடுப்பு சட்டத்துக்கு ஒப்புதல் தர சொல்லி ஆளுநருக்கு பதாகை காட்டிய பாமக, மறுபக்கம் என்எல்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவதுடன் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டி இருக்கிறதே? அவர்கள் திமுக பக்கமா பாஜக பக்கமா?”
“அது டாக்டர் ராமதாசுக்குத்தான் வெளிச்சம். இப்போதைக்கு எந்த பக்கமும் அவர்கள் சாய்வதாக இல்லை. மய்யமாக நடந்துகொள்ள விரும்புகிறார்கள். இதன்மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கான டிமாண்டை அதிகரித்துக் கொள்வது ராமதாஸ் ஐயாவின் திட்டம்.”
”அவங்க போடுற திட்டம்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா ஜெயிக்கதான் முடியலை”
”உண்மை” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.