அரியானா மாநிலத்தில் உள்ள பானிப்பட். இந்திய வரலாற்றில் இடம்பிடித்த மிகப்பெரிய போர்க்களம் அது. அந்த பானிப்பட்டுக்குப் பக்கத்து ஊர் காந்த்ரா. அந்த சின்னஞ்சிறிய ஊர், ஈட்டி எறிவதில் ஓர் உலக சேம்பியனை உருவாக்கித் தரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த ஊர் உருவாக்கித்தந்த ஈடு இணையற்ற ஈட்டி வீரரின் பெயர்தான் நீரஜ் சோப்ரா.
பானிப்பட் பல போர்க்களங்களைக் கண்ட இடம். அதுபோலவே வாழ்வில் பல களங்களைக் கண்டவர் நீரஜ் சோப்ரா.
2016ஆம் ஆண்டு, அசாம் மாநிலத் தலைநகரம் கவுகாத்தியில் நடந்த தெற்காசியப் போட்டியில் தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார் நீரஜ் சோப்ரா. அந்தப் போட்டியில் நீரஜ் சோப்ராவின் ஈட்டி பறந்து இறங்கிய தூரம் 82.23 மீட்டர்.
2017ல் இவர் ஆசிய சேம்பியன். 2018ல் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில், 86.47 மீட்டர் தொலைவுக்கு நீரஜ் சோப்ராவின் ஈட்டி எகிறிப்பாய்ந்து முதலிடம் பிடித்தது. 2018ல் டோக்கியோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம்.
2020ஆம் ஆண்டு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது.
ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்றாலும்கூட தனிநபர் போட்டி களில் அவர்கள் இறுதிப் போட்டியை எட்டுவது அரிது. மில்கா சிங், பி.டி.உஷா போன்றவர்கள் இறுதிப்போட்டிகளில் பங்கேற்றாலும்கூட அவர்கள் பதக்கம் வென்றதில்லை. இந்தநிலையை முதன்முறையாக மாற்றிக் காட்டினார் நீரஜ் சோப்ரா. ஆம். ஒலிம்பிக் தடகள வரலாற்றில் அவர் முதன்முறையாக தங்கம் வென்ற இந்தியர் ஆனார்.
2020ல், ஃபின்லாந்து நாட்டின் துர்கு பகுதியில் நடந்த பாவோ நுர்மி போட்டியில் பங்கேற்றார் நீரஜ் சோப்ரா. அவரது இரண்டு வீச்சுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதனால் என்ன? கிடைத்த ஒரு கேப்பில், 89.30 மீட்டருக்கு ஈட்டி எறிந்தார் நீரஜ் சோப்ரா. இந்த வீச்சின் மூலம், 88.07 மீட்டர் என்ற தனது முந்தைய தேசிய சாதனையை அவரே முறியடித்தார். இந்தப் போட்டியில் நீரஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அதன்பிறகு 2022ல் ஸ்வீடன் நாட்டின் தலைநகரமான ஸ்டாக்ஹோமில் நடந்த டயமண்ட் லீக் போட்டி. இந்தப் போட்டியில் நீரஜ்ஜின் ஈட்டி எகிறிச்சென்ற தூரம் 89.94. இந்தப் போட்டியில் வென்று தங்கப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டார் நீரஜ் சோப்ரா.
இந்த ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக் போட்டியில், 6 வாய்ப்புகளிலும் இவர் தவறே செய்யாமல் ஈட்டி வீசியது தனிச்சிறப்பு.
இந்தநிலையில்தான், ஹங்கேரி நாட்டின் தலைநகரான புதாபெஸ்டில் நடந்த உலக தடகள வாகையர் போட்டியில் நீரஜ் கால் பதித்தார். தகுதிச்சுற்றுக்கான முதல் முயற்சியிலேயே ஈட்டியை 88.77 மீட்டருக்குப் பறக்க விட்டு அவர் தகுதி பெற்றார்.
நேற்று இறுதிப்போட்டி. அதில் நீரஜ்ஜின் முதல் முயற்சி மொக்கையான நிலையில், இரண்டாவது சுற்றில் நீரஜ் ஈட்டி வீசிய தூரம் 88.17 மீட்டர். இந்த தூரம், நீரஜ்ஜின் திறமைக்கு கொஞ்சம் குறைவான தூரம்தான். ஆனால், இந்த வீச்சே அவருக்கு உலக வாகையர் பட்டத்தைப் பெற்றுத் தந்து விட்டது.
இந்த மகத்தான வெற்றியின் மூலம், உலக தடகள வாகையர் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை நேற்று பெற்றுவிட்டார் நீரஜ் சோப்ரா.
உலக தடகள வாகையர் போட்டிகளில் இந்தியா சார்பாக இதுவரை பதக்கம் வென்றவர் ஒரே ஒருவர்தான். அவர் மகளிர் நீளம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்ற அஞ்சு பாபி ஜார்ஜ். 2003ஆம் ஆண்டு பாரிஸ் உலக தடகள வாகையர் போட்டியில் அந்த சாதனையை அஞ்சு பாபி ஜார்ஜ் நிகழ்த்தி இருந்தார். அஞ்சுவின் அந்த சாதனையை முறியடித்து இந்தமுறை இந்தியாவுக்குத் தங்கம் தேடி தந்துவிட்டார், தங்க மகன் நீரஜ் சோப்ரா.
இந்தப் போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ராவுக்கு தங்கம். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு வெள்ளிப்பதக்கம். செக் குடியரசின் யாகுப் வாட்லேவுக்கு வெண்கலப் பதக்கம்.
இதற்குமுன் ஒலிம்பிக் சேம்பியனாக இருந்து, கூடவே உலக வாகையர் பட்டத்தையும் பெற்றவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் செக் குடியரசின் யான் செலஸ்னி. இரண்டாவது நபர், நார்வே நாட்டின் ஆந்திரியாஸ் தோர்கில்சன். இந்த வரிசையில், மூன்றாவது வீரராக, வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார் நீரஜ் சோப்ரா.
ஈட்டி எறியும் போட்டியில் இதுவரை உலக சாதனையாக கருதப்படும் தொலைவு 98.48 மீட்டர். செக் குடியரசைச் சேர்ந்தவரும், மூன்று முறை ஒலிம்பிக் சேம்பியனும், மூன்று முறை உலக சேம்பியனுமான செக் வீரர் யான் செலஸ்னி, 1996ல் உருவாக்கிய சாதனை இது.
இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இதுவரை 90 என்ற இலக்கைத் தொட்டதில்லை. அதனால் என்ன? நீரஜ்ஜிக்கு இளமை இருக்கிறது. 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி உள்பட இன்னும் பல களங்கள் நீரஜ் சோப்ராவுக்காகக் காத்திருக்கின்றன.