எறும்புகளை நாம் மிகச் சாதாரணமாக நினைக்கிறோம். ஆனால் இந்த உலகிலேயே மிக அதிகமாக வாழும் உயிரினம் எறும்புதான் என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்த உலகில் மொத்தம் 20 குவார்டிரிலியன் (அதாவது 20,000,000,000,000,000) எறும்புகள் இருப்பதாக கணக்கிட்டுள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கணக்குப்படி பார்த்தால் உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் இணையாக சராசரியாக 25 லட்சம் எறும்புகள் உள்ளன.
மற்றொரு தகவலையும் இந்த ஆய்வு வெளியிட்டுள்ளது. இந்த உலகில் உள்ள மொத்த எறும்புகளின் எடையானது, ஒட்டுமொத்த மிருகங்கள் மற்றும் பறவைகளின் எடையைவிட அதிகமானதாக இருக்கும் என்பதே அந்த தகவல். இந்த உலகில் மொத்தம் 12,500 வகை எறும்புகள் இருப்பதாகவும், உலகின் சுற்றுச்சூழல் கெடாமல் இருப்பதற்கு எறும்புகளும் ஒரு காரணம் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
செவ்வாய் கிரகத்தில் குப்பை!
தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் குப்பை போடுவது மனிதர்களின் வழக்கமாக இருக்கிறது. இதற்கு லேட்டஸ்ட் உதாரணம் செவ்வாய் கிரகம்.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பல நாடுகளும் தொடர்ந்து செயற்கைக்கோள்களை அனுப்ப, அதனால் செவ்வாய் கிரகத்தில் 15,694 பவுண்ட் குப்பைகள் ஏற்பட்டிருப்பதாக யுனைடெட் நேஷன்ஸ் ஆபீஸ் ஃபார் அவுட்டர் ஸ்பேஸ் அஃபேர்ஸ் ( United Nations Office for Outer Space Affairs) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக உலகில் இருந்து அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் பலவும், சில காலத்தில் செயலிழந்து அந்த கிரகத்திலேயே விழுந்துள்ளன. அந்த வகையில் இதுவரை 9 செயற்கைக்கோள்கள் செவ்வாய் கிரகத்தில் விழுந்துள்ளன. அதன் உதிரி பாகங்களால் இந்த குப்பைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செவ்வாய் கிரகத்துக்கு எதிர்காலத்தில் செயற்கைக் கோள்களை அனுப்பும்போது இந்த குப்பைகளால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் யுனைடெட் நேஷன்ஸ் ஆபீஸ் ஃபார் அவுட்டர் ஸ்பேஸ் அஃபேர்ஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.
பணக்காரர்களின் நகரம் மும்பை
இந்தியாவிலேயே அதிக பணக்காரர்கள் வாழும் நகரம் என்ற பெருமையை மும்பை பெற்றிருக்கிறது. IIFL Wealth Hurun India நடத்தியுள்ள ஆய்வில் இந்தியாவிலேயே மிக அதிகமாக 283 மல்டி மில்லியனர்கள் வசிக்கும் நகரமாக மும்பை இருப்பது தெரியவந்துள்ளது.
இந்திய பணக்காரர்கள் வரிசையில் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ள அதானி, அம்பானி ஆகிய இரு வரும் மும்பை நகரத்தில்தான் வசிக்கிறார்கள். இந்தியாவில் முன்னணியில் உள்ள பணக்காரர்களின் வரிசையை வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதிக பணக்காரர்கள் வசிக்கும் நகரங்களின் பட்டியலில் டெல்லி (185 பணக்காரர்கள்) இரண்டாவது இடத்திலும், பெங்களூரு (89) மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்த வரிசையில் 51 பணக்காரர்களைக் கொண்டுள்ள சென்னை 5-வது இடத்தில் உள்ளது. சென்னையைத் தவிர தமிழகத்தின் இன்னொரு முக்கிய நகரமான கோவையும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இங்கு 14 முன்னணி பணக்காரர்கள் வசிக்கின்றனர்.