பெண்களுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தவர் இந்தியாவின் ஜுலான் கோஸ்வாமி. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 252 விக்கெட்களை வீழ்த்தியுள்ள இவரை கிரிக்கெட் ரசிகர்கள் ‘சக்டா எக்ஸ்பிரஸ்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள்.
இவரது வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் ‘சக்டா எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் படமாகி வருகிறது. இதில் ஜுலான் கோஸ்வாமியின் பாத்திரத்தில் அனுஷ்கா சர்மா நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவு பெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் இள்ள லீட்ஸ் மைதானத்தில் வேகப்பந்து வீசும் பயிற்சிகளை எடுப்பதற்காக செல்லவுள்ளார் அனுஷ்கா சர்மா.
சுமார் 2 வார காலத்துக்கு இந்த பயிற்சிகளை அவர் எடுக்கவுள்ளார். இந்த பயிற்சிகள் முடிந்த பிறகு ஜுலான் கோஸ்வாமி பந்துவீசும் காட்சிகள் படமாக்கப்படும் என்று ‘சக்டா எக்ஸ்பிரஸ் படத்தின் இயக்குநர் புரோசித் ராய் தெரிவித்துள்ளார்.
கணவர் விராத் கோலியிடம் டிப்ஸ் கேட்பாரா என்று தெரியவில்லை.
மோடிக்கு எதிராக போராடிய சகோதரர்
மத்திய அரசுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி போராட்டம் நடத்தியதுதான் இப்பொது டெல்லியின் ஹாட் டாபிக். அனைத்திந்திய நியாயவிலைக் கடைகள் டீலர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் என்ற வகையில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் பிரகலாத் மோடி.
இந்த போராட்டத்தைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பிரகலாத் மோடி, “வாழ்க்கை செலவுகள் அதிகரித்து விட்டதாலும், நியாயவிலைக்கடை நடத்துவதற்கான செலவுகள் அதிகரித்து விட்டதாலும் கமிஷனை கிலோவுக்கு 20 காசு மட்டும் உயர்த்துவது போதாது. மத்திய அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். எங்கள் நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் மனு அளிப்போம். எங்கள் அமைப்பின் செயற்குழு கூட்டத்துக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்வோம்” என்று கூறியுள்ளார். மேலும் மம்தா முதல்வராக இருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளதுபோல் நியாயவிலைக் கடைகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
காகிதச் சுருளில் குரான்
குரான் புனித நூலை 500 மீட்டர் கொண்ட ஒரே காகிதச் சுருளில் எழுதி சாதனை படைத்துள்ளார் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞரான முஸ்தபா ஜமீல். 14.5 அங்குல உயரம் அகலம் கொண்ட காகிதச் சுருளில் இந்த சாதனையை செய்து முடிக்க அவருக்கு 7 மாதங்கள் ஆகியுள்ளன. தனது கையெழுத்தை மேம்படுத்துவதற்காக 2017-ம் ஆண்டுமுதல் குரான் வசனங்களை எழுதத் தொடங்கியுள்ள அவர், அதன்பிறகு குரானை வித்தியாசமாக எழுதுவதில் விருப்பம் கொண்டு இந்த சாதனையை படைத்துள்ளார்.
“அதிக தரம் கொண்ட 135 ஜிஎஸ்எம் காகிதச் சுருளில் குரானை எழுதி சாதனை படைக்க நினைத்தேன். ஆனால் அந்த காகிதம் காஷ்மீரில் கிடைக்கவில்லை. இதனால் டெல்லிக்குச் சென்று அந்த காகிதத்தை வாங்கி அதில் குரானை எழுதினேன். இந்த பணியை செய்து முடிக்க எனக்கு 2.5 லட்சம் ரூபாய் செலவானது என்கிறார் முஸ்தபா ஜமீல்.
இந்த சாதனையைத் தொடர்ந்து உள்ளூர் மொழியான ஷீனாவில் குரானை மொழிபெயர்க்க திட்டமிட்டுள்ளார் ஜமீல்.