தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தியின் பங்கு ஒன்னுமே இல்லை என்றும் தேச தந்தை நேதாஜிதான் எனவும் பேசியுள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஆளுநர் ஏன் இப்படி பேசினார்? உண்மையில் சுந்தரப் போராட்டத்தில் என்ன நடந்தது? காந்திக்கும் சுபாஷ் சந்திர போஸுக்கும் இடையே இருந்த உறவு எப்படிப்பட்டது?
ஆளுநர் என்ன பேசினார்?
இந்தியா முழுவதும் நேற்று (23-01-24) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நேதாஜி பிறந்த நாள் விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்தார். அப்போது மாணவர்கள் மத்தியில் ஆளுநர் உரையாற்றியதுதான் தற்போதைய சர்ச்சைக்கு காரணம்.
ஆளுநர் பேசும்போது, “இந்திய தேசிய ராணுவத்தின் கடற்படை மற்றும் விமானப்படையின் புரட்சியே இந்தியாவின் சுதந்திரத்திற்கு காரணம். நமது நாட்டின் கலாச்சார சின்னமாகவும் ஆன்மீக சின்னமாகவும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் விளங்குகிறார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் இந்திய ராணுவ படையில்தான் தமிழர்கள் அதிகளவு நிறைந்திருந்தனர். வேலு நாச்சியார், வ.உ.சி போன்றவர்களை போல நேதாஜியின் தியாகம் போற்றப்பட வேண்டியவை. சுதந்திரத்திற்காக போராடிய தமிழ்நாட்டு வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. வேலு நாச்சியார், வ.உ.சி போன்றவர்களை போல நேதாஜியின் தியாகத்தையும் போற்ற வேண்டும். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு படையை கட்டமைப்புக்கு பின் பல தலைமுறைகளுக்கு பிறகே இந்திய ராணுவத்தில் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் சுதந்திரத்தை பொறுத்த அளவில், இந்திய தேசிய காங்கிரஸின் ஒத்துழையாமை இயக்கம் ஆங்கிலேயரை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கான காரணமில்லை என இங்கிலாந்து முன்னாள் பிரதமர் அட்லீ பதிவு செய்துள்ளார். மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் பலன் அளிக்கவில்லை. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்தான் காரணம். நாட்டின் தேச தந்தை நேதாஜிதான்” என்று கூறியிருந்தார்.
கொந்தளித்த காந்தியவாதிகள்
காந்தி குறித்த ஆளுநரின் பேச்சுக்கு காந்தியவாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விசிக ஆகியவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “ரவி, ஆளுநரை போல அல்லாமல் ஆர்.எஸ்.எஸ். ஊழியரை போல செயல்படுகிறார்” என விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநரை இந்திய விடுதலைப் போராட்ட தேசபக்தர்களின் ஆன்மா மன்னிக்காது. மகாத்மா காந்திக்கும் சுபாஷ் சந்திர போசுக்கும் எத்தகைய உறவு இருந்தது என்பதை ஆர்.என். ரவி அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1938இல் ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இளமை துடிப்புடன் செயல்பட்டு வந்த சுபாஷ் சந்திர போசை தலைவராக நியமிக்க பரிந்துரை செய்தவர் காந்தியடிகள்.
1939இல் திரிபுரியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசை விட்டு வெளியேறியதோடு, இந்தியாவை விட்டு வெளியேறி ஆயுதம் ஏந்திய போராட்ட முறையை ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து பிரிட்டீசாரின் பகை நாடுகளின் தலைவர்களான ஹிட்லரையும் முசோலினியையும் சந்தித்து அவர்களது ஆதரவை பெற்று, ஜப்பான் நாட்டின் ஒத்துழைப்போடு இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அணுகுமுறை பலன் தரும் என்று அவர் நம்பினார்.
ஆனாலும், பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போர் தொடங்கிய போது சிங்கப்பூர் வானொலியில் மகாத்மா காந்தியின் வாழ்த்துகளை கோருகிற வகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேசும் போது, ‘தேசப்பிதாவே எங்களை வாழ்த்துங்கள், இன்ப துன்பங்களிலும் வெற்றி தோல்விகளிலும் நான் உங்களுடன் இருப்பேன். இந்தியா விடுதலை அடைவதற்கு எங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் மனமுவந்து அளிப்போம்” என்று அவர் பேசிய உணர்ச்சிமிகு உரை, இந்தியா எங்கும் எதிரொலித்தது.
அப்போது அவர்கள் பயன்படுத்திய கொடி என்பது காங்கிரஸ் மகாசபை ஏற்றுக்கொண்ட கைராட்டை சின்னம் பொறித்த மூவர்ண கொடி தான் என்பதை அரை வேக்காடு ஆர்.என். ரவி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக சுபாஷ் சந்திரபோஸ் தொடுத்த போராட்டம் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு உந்துசக்தியாக இருந்ததை எவரும் மறுக்க முடியாது. ஆனால், இரண்டாவது உலகப் போரில் சுபாஷ் சந்திரபோசை ஆதரித்த நாடுகள் தோல்வியடைகிற நிலை ஏற்பட்ட போது, இவரது முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதை அனைவரும் அறிவார்கள்.
150 ஆண்டு கால பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சையில் வழியில் போராடித் தான் வெற்றி பெற முடியும் என்ற மகாத்மா காந்தியின் அணுகுமுறை மூலமாகத் தான் இந்தியா விடுதலை பெற்றது” என்று கூறியுள்ளார்.
நேரு – நேதாஜி நட்பு
எழுத்தாளர் ரதன் சந்திரசேகர் இது தொடர்பாக எழுதியுள்ள பதிவில், ‘சுபாஷ் போஸை ஏற்றுவதாக நினைத்து மகாத்மா காந்தியை இழித்திருக்கிறார் ஆர்என்.ரவி. சுபாஷ் சந்திர போஸை, காந்திக்கும் நேருவுக்கும் எதிரியாக நிறுவ தொடர்ந்து பாடுபடுகிறார்கள். அதில் உச்சமாக காந்தியால் சுதந்திரம் வரவில்லை என்று ஆளுநர் பேசியுள்ளார்.
ஆனால், உண்மையில் என்ன நடந்தது…
1928இல் கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்தில் ‘இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வேண்டும்’ என்று காந்தி முன்மொழிந்தபோது, அதை எதிர்த்துத் தீர்மானம் கொண்டுவந்தார் நேதாஜி சுபாஷ் போஸ். அப்போது, நேதாஜிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து ஒட்டுமொத்தக் காங்கிரசையும் திகைக்க வைத்தார் நேரு. “காந்திஜி மீது அன்பு, மரியாதை, எல்லாம் இருக்கிறது. அதற்காக எங்கள் நிலைப்பாட்டை விட்டுத் தரமுடியாது. இந்த விஷயத்தில் சுபாஷின் பக்கம்தான் நியாயம். எனவே நான் அவர்பக்கம் நிற்கிறேன்!” என்று உறுதியாக சொன்னார் நேரு.
தான் தலைவராவதை காங்கிரஸிலுள்ள வலதுசாரிகள் எதிர்க்கிறார்கள் என்று ஒருமுறை பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார் போஸ். அது தவறான குற்றச்சாட்டு என்று வருந்திய காந்தி, அதை எதிர்த்து செயற்குழு அறிக்கை விடவேண்டுமென்று கோரினார். அந்த அறிக்கையை வல்லப பாய் படேல் தயாரித்து வெளியிட்டார். அதில் கையெழுத்திட மறுத்து, காந்தியின் வருத்தத்துக்கு ஆளானவர், சாட்சாத் நேருவேதான்.
நேரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரம் அவர் மனைவி கமலாவை காச நோய் தாக்கியிருந்தது. சிகிச்சைக்காக கமலா ஐரோப்பா செல்ல வேண்டி வந்தது. அவருக்கு அந்த அந்நிய மண்ணில் – மருத்துவமனையில் – துணையாய் உடனிருந்து கவனித்துக்கொண்டவர் சுபாஷ் சந்திர போஸ்! கமலா, சுவிட்சர்லாந்தில் இறந்தபோது கண்ணீர் உகுத்த நேருவைத் தோளில் சாய்த்து ஆறுதல் சொன்னவரும் அவரேதான்.
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் வீரர்கள் பின்னடைவைச் சந்தித்து, பிரிட்டிஷ் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். வழக்கு விசாரணை டில்லி செங்கோட்டையில் நடந்தது. அப்போது, நேதாஜியின் படை வீரர்களைக் காப்பாற்றுவதற்காக இருபத்தி ஐந்து வருடங்கள் அணியாமலிருந்த வழக்கறிஞர் உடையை அணிந்த நேரு, மூத்த வழக்கறிஞர் புலாபாய் தேசாயுடன் இணைந்து வழக்காடியதை வரலாற்றுத் திரிபாளர்கள் மறந்தும் வெளியே சொல்வது கிடையாது!
காந்தி மீது மரியாதை வைத்திருந்த நேதாஜி
பின்னாட்களில் காந்தி, நேருவுடனெல்லாம் கருத்துவேறுபாடு கொண்டு காங்கிரஸில் இருந்து விலகிச்சென்ற நேதாஜி, இந்திய தேசிய ராணுவத்தை (INA) அமைத்தபோது, ராணுவத்தின் கெரில்லா படைப் பிரிவுகளுக்கெல்லாம் பெயர் சூட்டினார். அப்போது பெண்கள் பிரிவுக்கு அவர், ‘ஜான்சிராணி பேரைச் சூட்டினார், ஜான்சிராணி பேரைச் சூட்டினார்’ என்று நூறு தரம் சொல்பவர்கள். அவர்கள் சொல்லாமல் மறைத்த இரண்டு பெயர்கள் உண்டு. ஒரு படைப்பிரிவின் பெயர், காந்தி பிரிகேட்! மற்றொன்று நேரு பிரிகேட்!
இந்தியாவைவிட்டு வெளியேறி, ஐஎன்ஏ படையை நிறுவிய போஸ், ‘கடல் கடந்த சுதந்திர இந்திய அரசை’ப் பிரகடனம் செய்து வானொலியில் பேசியபோது சொன்ன வார்த்தை, “இந்த அரசை நான் நம் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு சமர்ப்பணம் செய்கிறேன்!” என்பதுதான்” என்று குறிப்பிடுகிறார் ரதன் சந்திரசேகர்.
இதை உறுதிபடுத்தும், மூத்த பத்திரிகையாளரும் ‘பிரன்ட்லைன்’ ஆங்கிலப் பத்திரிகை முன்னால் ஆசிரியருமான விஜயசங்கர், “காந்திக்கும் போஸுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் ஆழ்ந்த மரியாதை வைத்திருந்தனர். போஸ் தன் இந்திய தேசிய ராணுவத்தினை ஐந்து பிரிகேடுகளாகப் பிரித்து காந்தி, நேரு, ஆசாத், போஸ் மற்றும் ராணி ஜான்சி என்றே பெயர் சூட்டியிருந்தார். அதேநேரம், இந்து மகாசபை மற்றும் லீகின் மதவாதத்தைக் உக்கிரமாகத் தாக்கினார், நேதாஜி” என்கிறார்.
ஆளுநர் ஏன் இப்படி பேசினார்?
ஆளுநர் பேச்சு கண்டனம் தெரிவிக்கும் அதேநேரம் அந்த பேச்சில் கொஞ்சம் உண்மையும் இருக்கிறது என்கிறார் எழுத்தாளர் விமலாத்தன் மணி. இது தொடர்பாக அவர் எழுதியுள்ள பதிவில், ‘ஆங்கிலேயன் ஆலன் ஆக்டேவியன் ஹியூமால் ஆரம்பிக்கப்பட்டு ஆங்கிலேயரின் மனசாட்சியாக எலைட் பணக்காரர்களின் கூடாரமாக மட்டுமே இருந்த காங்கிரஸ் கட்சியை, ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் நசுக்கப்பட்ட ஏழைகளின் வாழ்வியல் உரிமைகளுக்காக போராடும் ஒரு தேசிய மக்கள் இயக்கமாக மாற்றியது காந்தியடிகளின் மிக பெரும் அளப்பரிய சாதனை. தேசிய அளவில் ஒத்துழையாமை இயக்கம், வரிக்கொடாமை, சத்தியாகிரகம் போன்ற அஹிம்சையை அடிப்படையாக கொண்ட நடவடிக்கைகளை கட்டமைத்து மக்களின் மனதில் அடங்காத சுதந்திர வேட்கையை உருவாக்கியவர் மகாத்மா காந்தி தான்.
ஆனாலும், காந்தியடிகள் முன்னெடுத்த இந்த அஹிம்சையின் அடிப்படையிலான போராட்டங்கள் இந்தியா உட்பட மொத்த உலகையே ஆண்ட ஆங்கிலேயனை பெரிதாக அசைத்து பார்க்கவில்லை என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லும் உண்மை. இப்படி காந்தி மாதிரியே அஹிம்சை வழியில் போராடிய தென்னாபிரிக்கா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைய பல வருடங்கள் ஆகியது என்பதை பல பத்தாண்டுகள் சிறையில் இருந்த நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை படித்தவர்கள் புரிந்துகொள்வார்கள். நெல்சன் மண்டேலாவின் நீண்ட நெடிய அஹிம்சை போராட்டங்களுக்கு பிறகு 1961இல் தான் முழு சுதந்திர நாடாக தென்னாப்பிரிக்கா மாறியது.
இந்நிலையில், 1945இல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜப்பானிய அரசின் உதவியுடன் ஆரம்பித்த INA படை செய்ய ஆரம்பித்த தொடர்ச்சியான ஆயுதமேந்திய போராட்டங்களே இந்தியாவுக்கு விடுதலை கொடுத்து தொலைத்தால் என்ன என்று ஆங்கிலேயர்களை எண்ண வைத்தது. இதன் தொடர்ச்சியாக, ஏற்கெனவே தேசிய அளவில் அஹிம்சை அடிப்படையிலான சுதந்திர போராட்டங்களை தீவிரப்படுத்தி இருந்த காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு 1947இல் இந்தியா விடுதலை அடைந்தது. நேதாஜியும் அவருடைய 20 ஆயிரம் சொச்ச INA வீரர்களும் செய்த போராட்டங்களும் அவர்களின் உயிர் தியாகங்களும் இந்தியா சுதந்திரம் அடைவதில் ஆற்றிய பெரும் பங்கும் எவராலும் மறுக்கவே முடியாத ஒன்று.
அதேநேரம், காந்தியடிகள் இந்திய சுதந்திரத்துக்காக ஒன்றுமே செய்யவில்லை என்ற தமிழக ஆளுநர் ரவியின் வழக்கமான பொய் பேச்சை ஏற்பதற்கு இல்லை. காந்தி அஹிம்சை வழியில் தேச மக்களை ஒன்று திரட்டி ஆரம்பித்த தேசிய அளவிலான சுதந்திர போராட்டத்துக்கு தன்னுடைய ஆயுத போராட்டங்கள் மூலம் வலு சேர்த்தவர் சுபாஷ் சந்திரபோஸ். ஆகையால் இந்திய சுதந்திரத்தில் காந்தி, நேதாஜி இருவருக்கும் பெரும் பங்கு உண்டு என்பதே உண்மை. மேலும் இது சம்பந்தப்பட்ட வரலாற்று தரவுகளை அறிய விரும்புபவர்கள் ‘Bose Or Gandhi Who got freedom for India’ என்ற புத்தகத்தை படிக்கலாம்.
இன்று நேதாஜியை சொந்தம் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஒருவர்கூட INA படையில் இருந்ததாக எங்கேயும் எந்த வரலாற்று குறிப்பும் இல்லை. நேதாஜியின் INA படைக்கு எதிராக சாவர்க்கர் தலைமையில் ஆங்கிலேயர் படைக்கு ஆள் சேர்த்தவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ். என்பதே வரலாறு தரவுகள் நமக்கு சொல்லும் உண்மை. ஏற்கனவே பட்டேல், அம்பேத்கரை அபகரித்தாகிவிட்டது. இப்போது நேதாஜியை அபகரிக்க பார்க்கிறார்கள், அவ்வளவுதான் மேட்டர்” என்கிறார் விமலாதித்தன் மணி.
ஆளுநருக்கு தகுதியில்லை – என்.ராம்
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தி இந்து ஆங்கில நாளிதழ் ஆசிரியர் என். ராம், “ஆளுநர் இந்திய சரித்திரத்தை ஆழமாக படிக்க வேண்டும். படிக்கவில்லை என்றால் அதுபற்றி மேடையில் பேசக்கூடாது. 1942க்குப் பிறகு காங்கிரஸ் கட்சி பெரும் போராட்டங்கள் எதையும் செய்யவில்லை என்று ஆளுநர் சொல்கிறார். ஆனால், இதே காலகட்டத்தில்தான் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ நடத்தப்பட்டது. காந்தி, நேரு உட்பட பெரிய தலைவர்கள் எல்லாம் சிறையில் இருந்த நிலையிலும் இந்தியா முழுவதும் நகரம், கிராமம் என வித்தியாசம் இல்லாமல் மக்கள் ஆதரவுடன் பெரும் போராட்டமாக அது வெடித்தது. எனவே, காந்தியின் பங்களிப்பு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேநேரம், நேதாஜியின் படை அழுத்தம் காரணமாகத்தான் சுதந்திரம் கிடைத்தது என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஹிட்லர், முசோலினி, ஜப்பான் என நேதாஜி சென்ற தவறான பாதைகள் எல்லாம் இரண்டாம் உலகப் போரில் பின்னடைவைத்தான் சந்தித்தன என்பதையும் படித்திருந்தால் ஆளுநர் தெரிந்துகொண்டிருப்பார்.
ஆர்.என். ரவிக்கு தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கும் தகுதி கிடையாது. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல மற்ற எந்த மாநிலத்துக்கும், ஒரு யூனியன் பிரதேசத்துக்கூக்கூட ஆளுநராக இருக்க தகுதியில்லாதவர் தான் ஆர்.என். ரவி” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.