No menu items!

பிரான்ஸ் கலவரம்.. பின்னணி என்ன?

பிரான்ஸ் கலவரம்.. பின்னணி என்ன?

மோகன ரூபன்


அந்த இளைஞரின் பெயர் நகேல் மெர்சூக். வயது 17. அப்பா இல்லை. அம்மாவுக்கு அவர் ஒரே பிள்ளை. பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிசை அடுத்த நான் நான்டெர் நகரம்தான் அவரது சொந்த ஊர். வேலை டெலிவரி வாகன ஓட்டுநர் வேலை. ரஃபி விளையாட்டு வீரர். அதனால், நான்டெர் நகரத்தில் நகேலைத் தெரியாதவர்களே இல்லை. ‘அட! நகேலா? அவன் நம்ம பிள்ளையாச்சே?’ என்பார்கள் நான்டெர்காரர்கள்.

நகேல், பிறப்பால் அல்ஜீரியா நாட்டின் அரபு இனம். அல்ஜீரியா, கேமரூன், செனகல் மாதிரியான பல ஆப்பிரிக்க நாடுகள் முன்பு பிரான்ஸ் நாட்டின் குடியேற்ற நாடுகளாக இருந்தவை. ஆகவே, பிரான்ஸ் நாட்டில் இன்றும் அரபு, ஆப்பிரிக்க மக்கள் அதிகம். இந்த அரபு, ஆப்பிரிக்க முகங்களைக் கண்டால் பிரான்ஸ் நாட்டு காவல்துறையினருக்கு எப்போதுமே ஒருவித ஒவ்வாமை அதாவது அலர்ஜி உண்டு.

2017ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் காவல்துறைக்கு புதிய அதிகாரம் ஒன்று வழங்கப்பட்டது. சாலைத்தடுப்பில், ஒரு கார் ஓட்டுநர் காரை நிறுத்தச் சொன்னபிறகும் நிறுத்தாமல் போனால் அவரை சுடலாம் என்ற அதிகாரம் அது.

இளைஞன் நகேல், ஒருநாளைக்கு 5 சாலைத்தடுப்புகளைக் கடக்க வேண்டியிருந்தது. 17 வயது பையன் என்பதால் அவரிடம் ஓட்டுநர் உரிமமும் இல்லை. கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி காலை 9 மணி. போலந்து நாட்டு நம்பர் பிளேட் பொருந்திய ஒரு மெர்சிடெஸ் காரில் 2 பயணிகளுடன் நகேல் செல்ல, சாலைத்தடுப்பில் காவலர்கள் நிற்கச் சொல்ல, கார் நகர, நகேல் நடுமார்பில் சுடப்பட்டு இறந்து போனார்.

‘ஐயோ. எனக்கு பத்து பிள்ளைகள் இல்லையே. ஒரேயொரு பிள்ளைதானே? என் வாழ்க்கையே அவன்தானே?’ என்று நகேலின் தாயார் மௌனியா கூக்குரலிட, நகேல் சுடப்பட்ட சி.சி.டி.வி. காட்சி, சமூக வலைதளங்கள் மூலம் விறுவிறுவென பரவ, அவ்வளவுதான் கலவரம் பிரான்ஸ் நாட்டை கப்பென கவ்விக் கொண்டது.

தலைநகர் பாரிஸ், துறைமுக நகரமான மர்செய், லில்லி, லியொன், கிரோனபிள் நகரங்கள் என கலவரம் பற்றிப் படர ஆரம்பித்தது. கல‘வரம்’ என்பதும் சிலருக்கு ஒருவகை வரம்தானே? கார்கள், வாகனங்கள் எரிப்பு, கடைகள் சூறையாடல், காவலர்கள் மீது தாக்குதல் என கலவரம் களேபரமாக ஆரம்பித்தது. 220 பெருநகரங்கள், சிறுநகரங்களின் மேயர்களைக் குறிவைத்தும், பள்ளிகளைக் குறிவைத்தும் தாக்குதல்கள் நடந்தது விநோதம்.

லைலிய ரோஸ் நகர மேயரின் வீடு தாக்கப்பட்டு, அவரது மனைவி கால் உடைந்து போன நிலையில் குழந்தையுடன் தப்பியோடினார். பாரிஸ் நகரின் எலிசே பகுதியும் தீவைப்புகளுக்குத் தப்பவில்லை. மர்செய் நகரில் கண்ணீர்ப்புகை வீச்சுடன், கவச வாகனங்கள் குவிக்கப்பட்டன. கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர 45 ஆயிரம் காவலர்கள் களமிறக்கப்பட்டு, 900 கைதுகள் நடந்திருக்கின்றன.

சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரான நகேலின் பாட்டி நதியா, ‘கலவரம் போதும். இறந்துபோன என் பேரன் இனி உயிருடன் வரமாட்டான். இந்த கலவரம் நகேலுக்காக நடப்பது போலத் தெரியவில்லை’ என்று கூறியிருக்கிறார். நகேலின் உறவுக்கார பெண் கத்யா என்பவர், ‘நாங்கள் வெறுப்பை விதைக்க நினைக்கவில்லை. நகேலின் பெயரைச்சொல்லி திருட்டும், சூறையாடல்களும் நடப்பது சரியல்ல’ என்றிருக்கிறார். ‘கலவரம் வேண்டாம்’ என புகழ்பெற்ற கால்பந்துவீரர் எம்பாப்வேவும் கூறியிருக்கிறார். ஆனால், கலவரம் மட்டும் கட்டுக்குள் வர தயாராக இல்லை.

இதற்கிடையே, அரசின் சில நடவடிக்கைகள், எரிகிற நெருப்பில் எண்ணெய்யை வார்த்திருக்கின்றன

‘நகேலை சுட்டுக் கொன்ற காவலர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், ‘அவர் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் சுட்டார்’ என்ற அரசுத்தரப்பு வாதம், சுட்டுக் கொன்ற காவலருக்குத் தர இணையதளம் மூலம் திரட்டப்பட்ட 7 லட்சம் ஈரோ நிதி, மர்செய் நகரில் பாதிப்புக்கு உள்ளான வணிக நிறுவனங்களுக்கு 2 மில்லியன் ஈரோக்களைத் தரப்போவதாக மர்செய் நகர மேயரின் அறிவிப்பு போன்றவை, கலவரத்தை நிறுத்தவிடாமல் இன்னும் கிண்டி கிளறி வருகின்றன.

2005-ஆம் ஆண்டிலும் பிரான்ஸ் நாடு இப்படி ஒரு கலவரத்தைத் சந்தித்தது. சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் நகேல் அப்போது பிறந்திருக்கக்கூட மாட்டார். அந்த கலவரம் 18 மாதங்கள் நடந்தது. ஆனால் புறநகர்களை விட்டு அந்த கலவரம் வெளியே வரவில்லை. கட்டிடங்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் தாக்கப்பட்டன. ஆனால், காவலர்கள் நேரடியாகத் தாக்கப்படவில்லை. கொள்ளை, சூறையாடல், தீவைப்பு என்று எதுவும் இல்லை.

ஆனால் தற்போது பிரான்சில் நடக்கும் கலவரமோ, தலைநகர் பாரிஸ் உள்பட பெரு நகரங்களுக்குப் பரவி வருகிறது. இந்தமுறை காவல்துறையினர் நேரடியாகத் தாக்கப்படுகின்றனர். கடைகள், வணிக நிறுவனங்கள் சூறையாடப்படுகின்றன. பெல்ஜியம், சுவிட்சர்லாந்து போன்ற அண்டை நாடுகளுக்கும் இந்த கலவரம் மெல்ல எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறது. கலவரத்தில் ஈடுபடுபவர்களின் பெரும்பாலானோர் டீன்ஏஜ் எனப்படும் வளரிளம் பருவத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் கலவரத்தின் மூல காரணமாகக் கருதப்படுவது, சாலைத்தடுப்புகளில் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அதிக அதிகாரம்தான். இளைஞர் நகேலைப்போல, கடந்த 18 மாதங்களில் மட்டும் 17 பேர் இப்படி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அரபு, ஆப்பிரிக்க இனத்தவர்கள் என்பதை சொல்லவே தேவையில்லை.

‘பிரான்ஸ் நாட்டு கலவரம், இன, மத, அரசியல் ரீதியான கலவரம் இல்லை. இது பிரான்ஸ் நாட்டின் அரசு இயந்திரம், காவல்துறைக்கு எதிரான, நீதிக்கான கலவரம்’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். பிளாக் புளாக் என்ற தீவிர இடதுசாரி அமைப்பு இந்த கலவரத்துக்குப் பின்னணியில் இருப்பதாகவும் ஒரு கணிப்பு உள்ளது.

‘கலவரம் அதன் உச்சத்தைத் தொட்டு ஓய்ந்து விட்டது. இனி எல்லாம் சரியாகிவிடும்’ என்றிருக்கிறார் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான்.

கலவரமும், வன்முறையும் எதற்கும் முடிவாகி விடாது என்ற நிலையில் கலவரம் ஓயும் என நம்பிக்கையோடு காத்திருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...